பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow கருணாவின் அரசியல் கனவை உடைத்தெறிந்த சிறிலங்காப் புலனாய்வுப்பிரிவினர்!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கருணாவின் அரசியல் கனவை உடைத்தெறிந்த சிறிலங்காப் புலனாய்வுப்பிரிவினர்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 21 May 2007

கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு நீண்டநாட்களாக சிறிலங்காப் புலனாய்வாளர்களினால் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளின் விளைவே என்பதற்கான தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன. 

தற்போது இரண்டாக பிளவு பட்டுள்ள இக்குழு எதிர்காலத்தில் பல குழுக்களாக உடையக்கூடிய நிலையும் ஏற்படலாம். இதுவரை காலமும் கரணாகுழுவை சிறிலங்காப்புலனாய்வாளர்கள் கையாண்ட விதத்திற்கும் இனி கையாளப்போகும் விதத்திற்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கும். இது கருணாகுழு ஒரு அரசியல், நிர்வாக கட்டமைப்பாக மாறுவதை தடுக்கும் விதமாகவே அமையப்போகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்ததும், கருணாவிற்கு இருந்த ஒரேயொரு தெரிவு சிறிலங்காப்படைத்துறையோடு சேர்ந்தியங்குவதென்பது தான். தனது பாதுகாப்பிற்கு வேறுவழி கருணாவிற்கு இருக்கவில்லை. கருணா குழவின் உதவி என்பது சிறிலங்காப்படைத்துறைக்கு மிகுந்த அவசியமானதாகவும் பட்டது. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப்புலிகளை அகற்றுவதற்கான படைநடவடிக்கைகளில் கருணாவின் உதவிகள் அத்தியாவசியமானதாக சிறிலங்காப்படைத்துறைக்கு இருந்தது. கருணா குழுவை படைநடவடிக்கைகளில் நேரடியாகப் பயன்படுத்தாவிடினும் வேவு, மற்றும் பலனாய்வுத்தகவல்களுக்கு கருணா குழு பயன்படுத்தப்பட்டது.

சிறிலங்காப் படையினரிடம் தனது பாதகாப்பிற்காக தஞ்சம் புகுந்தாலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு அரசியல் தலைவராக வரவேண்டும் என்கிற ஆசை கருணாவிற்கு நிறையவே உண்டு. அதற்கான பல் வேறு முனைப்புக்களில் கருணாவின் ஈடுபாடு இருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக கிழக்கு மாகாணம் அபிவிருத்திசெய்யப்பட வேண்டும் என்கிற கருத்தை பல முறை கருணா முன்வைத்திருந்தமையினை அவதானிக்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் தயவில் ஒரு நிர்வாகக்கட்டமைப்பை நிறுவி தனது தலைமையில் அபிவிருத்தி என்கிற பெயரில் அரசியலுக்குள் நுழையலாம் என்பது கருணாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. கிழக்கில் வாகரை, படுவான்கரை உள்ளிட்ட பகுதிகள் சிறிலங்காப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இடம்பெயர்த்தப்பட்ட மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் கிழக்கில் ஒரு தேர்தலை நடத்தியோ வேறுவகையிலோ நிர்வாகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது கருணாவின் தற்போதைய அவசர அவாவாகவள்ளது.

ஆரம்பத்தில் கருணாவை மட்டக்களப்பில் ஒரு அரசியல் சக்தியாக உருவாக்கும் எண்ணம் சிறிலங்கா அரசின் முக்கிய தலைவர்களுக்கு இருந்தது உண்மைதான். வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையில் பிரதேசவாதத்தை கட்டிவளர்த்து அதனைப்பேணிப்பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு கருணாவே பொருத்தமான “தலைவர்” என சிங்கள அரசு திட்டமிட்டிருந்தது. அதே நேரம் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் எப்போழுதும் ஒரு பகைமை உணர்வு நிலவுதை சிங்களப் பேரினவாதம் விரும்புகிறது. அதற்கும் கருணாவே சரியான நபர் என்பதும் சிங்களத்தலைவர்களின் எண்ணம்.

ஆனால், கிழக்கில் கருணாவின் ஆதிக்கம் எற்படுவதை கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இதில் கவனமாக இருக்கின்றனர். கருணா குழுவை கையாள்வது சிறிலங்காப்படைத்துறையின் புலனாய்வாளர்களே. அப்புலனாய்வாளர்களில் கணிசமானவர்கள் தமிழ்பேசும் முஸ்லிம்கள். அதிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களும் கருணாவின் கை கிழக்கில் ஒங்குவதை விரும்பவில்லை. அரசாங்கம் விரும்பினாலும் கூட அதனைத்தடுத்து நிறுத்தும் திட்டங்களில் அவர்கள் மறைமுகமாக ஈடுபட்டனர். அதன் விளைவே தற்போது கருணா குழுவில் ஏற்பட்டுள்ள உடைவு.

கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் படைநடவடிக்கைகளை மேற்கொண்டு நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்த பின்னரே இந்த உடைவு ஏற்பட்டுள்ளபோதும், கடந்த சில மாதங்களாக கருணா குழுவைக் கையாளும் விதத்தில் பல மாற்றங்களை சிறிலங்காப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டனர். முதலில் கருணாவினூடாக மட்டுமே தொடர்புகளை மேற்கொண்ட புலனாய்வாளர்கள் பின்னர் கருணா குழவிலுள்ள பிள்ளையான் உட்பட்ட பலரையும் தனித்தனியாக சந்தித்து சில வேலைகளைக் கையளித்தனர். அவர்களுக்கான கொடுப்பனவுகள் கூட தனிப்பட்ட ரீதியாக வழங்கப்பட்டன. இதனுடாக கருணா குழுவை சிறு குழுக்களாகப்பிரித்து கையாளத்தொடங்கினர். கருணா குழுவை அரசியலுக்கு வரவிடாமல் ஓட்டுக்குழுவாக, அதாவது இராணுவத்துணைக்குழுவாக மட்டும் பயன்படுத்துவதே படையினரின் திட்டமாக அமைந்தது. அது இப்போது நிறைவேறியுமுள்ளது.

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களிலிருந்து பிரிந்த தனிநபர்கள் ராசிக்குழு, புளொட் மோகன் குழு போன்ற பெயர்களில் சிறிலங்காப்படையினரோடு துணைக்குழுக்களாக இயங்கியமை போன்று கருணா குழுவிலிருந்து பலர் பிரிந்து தனிக்குழுக்களாக படையினரோடு சேர்ந்தியங்கும் வகையில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். கருணாவுடன் முரண்பட்டு திருகோணமலைக்குத் தப்பியோடிய பிள்ளையானை சிறிலங்காப்படையதிகாரிகள் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தமை கருணாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பாக கருணா சிறிலங்காப் பாதகாப்பு அமைச்சின் செயலாளரும், சனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு தனது மனவருத்தத்தை தெரிவித்ததாகவும் கூட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கருணாகுழுவின் பேச்சாளரான ஆசாத் மௌலானா என்பவர் முரண்பாடுகள் சமுகநிலைக்கு வந்துள்ளதாக பி.பி.சியிடம் தெரிவித்ததன் மூலம். சிக்கலை தற்போதைக்கு புதைக்கு முயல்வது தெரிகிறது. மறைமுகமாக சிறிலங்காப்படை அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

எது எவ்வாறெனினும் கருணாகுழு சிறிலங்காப் படைத்துணைக்குழுவாக மட்டும் தற்போது இயங்கவதில் எந்தவிதப்பிரச்சினைகளும் இல்லை. கிழக்கில் அரசியல் நிர்வாக விடயங்களில் தலையிடுவதோ, அதனைப் பொறுப்பெடுப்பக்க நினைப்பதோ சிக்கலான காரியமாகவே அமையும். டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்றோரை தமிழர்களின் ஒரு மாற்று அரசியல் சக்தியாக உலகிற்கு காட்ட முனையும் சிறிலங்கா அரசாங்கம். தற்போது மனிதஉரிமை மீறல்கள் விடயத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில் விரும்பினாலும் கூட கருணாவை அரசியல் களத்திற்கு கொண்டு வர முடியாது.

வினோதன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..