பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow வடக்கில் மையங்கொள்ளும் யுத்த மேகங்கள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வடக்கில் மையங்கொள்ளும் யுத்த மேகங்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 28 May 2007

* வன்னியை இலக்கு வைக்கும் படையினர்

* குடாநாட்டை இலக்கு வைக்கும் புலிகள்

வடக்கே கடும் சமர் வெடிக்கப் போகிறது. வன்னியில் தொடர்ந்து படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் படையினர் அங்கு பாரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகையில், யாழ். குடாவில் தாக்குதலைத் தொடுக்க விடுதலைப் புலிகளும் தயாராகி வருவது போல் தென்படுகிறது.

முன்னர் கிழக்கில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்திய படையினர் தற்போது வடக்கே தங்கள் கவனத்தை திருப்பியதன் மூலம், வடக்கில் பெரும் போர் வெடிக்கப்போவது உறுதியாகிவிட்டது.

வடக்கில் பெரும் போரை நடத்தி புலிகளின் கவனத்தை முழுமையாக அங்கு திருப்பியவாறு கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி விட வேண்டுமென்பதிலும் அரசு கவனம் செலுத்துகிறது.

வடக்கு - கிழக்கை பிரித்தது மட்டுமல்லாது, கிழக்கில் தேர்தலை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதிலும், அரசு முனைப்புக் காட்டுகிறது. புலிகள் அமைப்பிலிருந்து கருணா குழுவை பிரித்து அதன் மூலம் பிரதேச மோதலுக்குத் தூபமிட்டது போல், இன்று கருணா குழுவுக்குள்ளும் பிளவை ஏற்படுத்தி கிழக்கு தேர்தலில் தமிழர்களின் வாக்களிப்பை இல்லாது செய்து விடுவதிலும் அக்கறை காட்டப்படுகிறது.

இவ்வாறு கிழக்கில் அரசியல் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகையில் வடக்கே பாரிய படை நடவடிக்கைகள் மூலம் வன்னிப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட வேண்டுமென்பதில் அரசு ஆர்வம் காட்டுகிறது. கிழக்கில் பெரும்பாலும் படை நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டதாகக் கருதும் அரசு வடக்கில் வன்னியில் தனது கவனத்தை செலுத்திவருகிறது.

வவுனியா - மன்னார் வீதியில் மடுவைக் கைப்பற்றி விட அரசு ஆர்வம் காட்டுகிறது. பௌத்த சிங்கள அரசு என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் மடுவைக் கைப்பற்றுவதன் மூலம் கத்தோலிக்க மக்களின் புனிதத் தலத்தை தாங்கள் புலிகளின் பிடியிலிருந்து மீட்டுவிட்டதாக தென்பகுதி கத்தோலிக்க மக்கள் மத்தியில் பெரும் பிரசாரங்களை மேற்கொள்ளவும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைப் பெறவும் அரசு முயல்கிறது.

வவுனியா ஓமந்தையிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளை முல்லைத்தீவு நோக்கி பின் தள்ளுவதுடன், `ஏ-9' வீதியில் புளியங்குளம், மாங்குளம் நோக்கியும் முன்னேற படையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனொரு கட்டமாகவே மடுவையும் அதனை அண்டிய பகுதிகளையும் மீட்பதற்கான படை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை பத்திற்கும் மேற்பட்ட தடவைகள் இந்த முயற்சியில் படைத்தரப்பு இறங்கிய போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை. எனினும், அந்த முயற்சியை கைவிடும் எண்ணமும் அரசுக்கில்லை.

மதவாச்சி - மன்னார் வீதி (ஏ-14) யின் தென்பகுதி படையினரின் கட்டுப்பாட்டிலும் வடபகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலுமுள்ளது. இந்த பிரதான வீதி, மன்னாரில் நிலைகொண்டுள்ள கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

மன்னாருக்கும் வவுனியாவுக்குமிடையில் முக்கிய பகுதிகளில் இராணுவத்தால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 57 ஆவது படையணியின் 1 ஆவது, 2 ஆவது, 3 ஆவது படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இராணுவத்தில் பல படையணிகளிலுமிருந்து தரமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, இந்த 57 ஆவது படையணி பிரிகேடியர் சுமித் மானவடு தலைமையில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையணியே தற்போது வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெறும் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், புதிய தளபதியான கேணல் நிர்மல் தர்மரட்ண தலைமையிலான சிறப்பு படையினரின் 1 ஆவது, 2 ஆவது படையணிகளும் கஜபா படையணியின் 8 ஆவது படைப் பிரிவும், சிங்கப் படையணியின் 4 ஆவது படைப் பிரிவும், விஜயபாகு படையணியின் 9 ஆவது படைப்பிரிவும் 21 ஆவது தேசிய காவல் படையினரும் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

வன்னியில் இரு முனை நகர்வுத் திட்டமாக விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளை ஓமந்தையூடாக முல்லைத்தீவு நோக்கி பின் தள்ளுவதுடன் புளியங்குளம், மாங்குளம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதும் படையினரின் நோக்கமாகும்.

இதேநேரம், மடுவைக் கைப்பற்றி அங்கிருந்து ஆழ ஊடுருவி மல்லாவி வரை செல்வதும் படையினரின் நோக்கமாயிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இதன் மூலம் வன்னிக்குள் புலிகளின் படை பலத்தை முடக்கி விடுவதுடன் வடக்கே பெரும் பகுதியையும் கைப்பற்றிவிட முடியுமென அரசு கருதுகிறது.

தற்போது, இவற்றுக்கான ஏற்பாடுகள் துரிதமடைந்துள்ளதுடன், இதற்காக பெருமளவு போர்த் தளபாடங்களும், புதிதாக இறக்கப்பட்டு தினமும் தெற்கிலிருந்து வடக்கே அனுப்பப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் பூர்த்தியானதும் வடக்கே ஒரே நேரத்தில் மும்முனைகளில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

படையினரின் இந்த ஏற்பாடுகளை புலிகளும் நன்கறிவர். அவர்களும் இதற்கேற்ப தங்கள் பதில் நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மடுவைக் கைப்பற்ற 57 ஆவது படையணி இதுவரை மேற்கொண்ட எந்த முயற்சியும் கைகூடாததால் வன்னிப் படை நடவடிக்கை இலங்கை படையினருக்கு பேராபத்தாகப் போகின்றதென்பதை புலிகள் உணர்த்தி வருகின்றனர்.

அதேநேரம் புலிகளும் பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் இந்தத் தயாரிப்புகள் வட பகுதியை மையமாகக் கொண்டதாயிருப்பினும், அது குடாநாட்டை இலக்காகக் கொண்டதா அல்லது வவுனியா, மன்னாரை மையமாகக் கொண்டதா என்பது ஊகத்திற்கப்பாலுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டில் பாரிய தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போது மண்டைதீவு கடற்படைத் தளம் புலிகளால் தகர்த்தழிக்கப்பட்டது. இதையடுத்து, புலிகள் யாழ். நகருக்குள்ளும் அதனை அண்டிய (பொம்மைவெளி, கல்லுண்டாய், ஆனைக்கோட்டை) பகுதிகளினுள்ளும் நுழையக்கூடிய வாய்ப்பிருந்தது. ஆனால், புலிகள் நுழையவில்லை.

யாழ். குடாநாட்டை பொறுத்தவரை கடந்த வருடம் வரை தென்மராட்சியில் கிளாலி, தீவுப் பகுதியில் மண்டைதீவு மற்றும் காரைநகர், வலிகாமத்தில் பலாலி கூட்டுப்படைத் தளத்துடன் அண்டி காங்கேசன்துறை, வடமராட்சி கிழக்கே நாகர் கோவிலுக்கு சமீபமாக மணற்காடு பகுதிகளிலேயே கடற்படை முகாம்களும் தளங்களும் குடாநாட்டைச் சுற்றிவர இருந்தன. இவை குடாநாட்டுக்கான கடல் வழிப் பாதுகாப்பு கோட்டைகளாகவுமிருந்தன.

ஆனால், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குடாநாட்டை புலிகள் முற்றுகையிட்ட போது மண்டைதீவு கடற்படை முகாமை புலிகள் முற்றாக அழித்தொழித்து அதற்கப்பால் தீவுப் பகுதி நோக்கி நகர்ந்த போதும் புலிகள் யாழ். நகருக்குள் செல்லவில்லை. யாழ் நகருக்குள் இறங்குவதன் மூலம் குடாநாட்டின் மீதான முற்றுகை இறுக்கப்படலாமெனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மண்டை தீவிலிருந்து விலகியதன் மூலம், தீவுப் பகுதியை முற்றாக புலிகள் கைப்பற்றிவிடலாமென்ற ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் படையினர் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த நேரத்திலேயே குடாநாட்டில் இந்த முற்றுகையும் தாக்குதல்களும் இடம்பெற்றன. எனினும், புலிகள் பின்னர் குடாநாடு மீதான முற்றுகையை பல்வேறு காரணங்களுக்காகத் தளர்த்தினர்.

இன்றோ திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பெரும்பாலான பிரதேசங்களைக் கைப்பற்றிவிட்ட படையினர் தற்போது தங்கள் முழுக் கவனத்தையும் வடக்கே திசை திருப்பியுள்ளதுடன் வன்னிப் பகுதியை நோக்கிய தங்கள் படை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால், வடக்கை முழுமையாகக் காப்பாற்ற வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்குள்ளது. வடக்கில் புலிகளைத் தோற்கடிப்பது மிகவும் கடினமெனக் கூறப்பட்டு வருவதால் வடக்கில் உடனடியாக சில வெற்றிகளைப் பெற்று அதன் மூலம், வடக்கிலும் புலிகள் தோற்கடிக்கப்படக் கூடியவர்களென்பதைக் காட்ட வேண்டுமென்பதில் அரசு தீவிர அக்கறை காட்டி வருகிறது.

வடக்கே படையினரின் ஆதிக்கத்தைக் குறைப்பதாயின் வவுனியாவுக்கு வட கிழக்கே முல்லைத்தீவை நோக்கிய படைநகர்வையும் வவுனியாவுக்கு மேற்கே மடு மற்றும் வடமேற்கே மல்லாவியை நோக்கிய படை நகர்வையும் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாய தேவை புலிகளுக்குண்டு.

அதேநேரம், யாழ். குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்ற வேண்டிய தேவையும் புலிகளுக்குள்ளது. குடாநாட்டை கைப்பற்றுவதன் மூலம் வடபகுதியை முழுமையாக தம் வசப்படுத்திவிட முடியும். இதனால், யாழ். குடாநாட்டைக் கைப்பற்ற தாக்குதல் சமரையும் முல்லைத்தீவு மற்றும் மடுப் பகுதிகளைத் தக்கவைக்க தற்காப்புச் சமரையும் தொடுக்க வேண்டிய தேவையும் புலிகளுக்குள்ளது. இதனொரு கட்டமாகவே நெடுந்தீவிலுள்ள கடற்படை முகாமை புலிகள் முற்றாக அழித்தொழித்துள்ளனர்.

கடந்த வருடம் குடாநாட்டை புலிகள் முற்றுகையிட்ட போது மண்டைதீவு கடற்படைத் தளத்தை புலிகள் முற்றாக அழித்தொழித்த நிலையில், யாழ் நகருக்கு (மண்டைத்தீவுக்கு) தென்மேற்கே நெடுந்தீவில் சிறியதொரு கடற்படை முகாம் அமைக்கப்பட்டது.

இந்த முகாம் குடாநாட்டின் பாதுகாப்புக்கு `ஓரளவு' வலுச் சேர்க்குமென கருதப்பட்டதுடன் குடாநாட்டிற்கு வான் புலிகளின் வருகையை கண்டறிவதற்கும் வான் புலிகளைத் தாக்குவதற்குமாக சிறிய ராடரொன்றும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த முகாம் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை கடற்புலிகள் திடீர் அதிரடித் தாக்குதலை நடத்தி அதனை அழித்தொழித்து அங்கிருந்த ராடர் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றிய போது, காரைநகர் கடற்படையினராலோ காங்கேசன் துறை கடற்படையினராலோ எதுவும் செய்ய முடியவில்லை. எல்லாம் நடந்து முடிந்த பின்பே காலையில் அங்கு இவர்களால் வர முடிந்தது.

நெடுந்தீவு கடற்படை முகாம் மீதான தாக்குதலானது, குடாநாட்டின் மீதான முற்றுகைப் போரின் ஆரம்பமென்பதை தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மண்டைதீவு கடற்படை முகாமும் தற்போது நெடுந்தீவு கடற்படை முகாமும் அழிக்கப்பட்டதன் மூலம் தீவுப் பகுதியில் காரைநகர் கடற்படை முகாம் தனித்துவிடப்பட்டுள்ளது.

வடக்கே பாரிய தாக்குதலுக்கு படையினர் தயாராகி வருவது வெளிப்படையான நிலையில் புலிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கிழக்கை போலல்லாது வட போர்முனை புலிகளுக்கு மிகவும் வாய்ப்பாயுள்ளதென்பதுடன் புலிகளின் முப்படைகளும் வடக்கில் நிலை கொண்டுள்ளன. இதனால், வடக்கில் நடைபெறும் போரில் வான்புலிகளதும் கடற்புலிகளதும் பங்களிப்பு அதிகளவிலிருக்குமென்றே கருதப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலும் யாழ். குடா வான் பரப்பிலும் வான் புலிகள் தோன்றி மறைந்ததாக படைத்தரப்பு கூறியுள்ள நிலையில் வான் புலிகளின் தாக்குதல் வடக்கில் எவ்வேளையிலும் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நெடுந்தீவு கடற்படை முகாமை தாக்கியழித்ததில் கடற்புலிகளின் பங்களிப்பும் கணிசமாயுள்ளது.

அதேநேரம், தெற்கிலும் புலிகளின் தாக்குதல்கள் நடைபெறுவதானது அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கொழும்பு போன்ற பெரும் நகரங்களில் படையினரின் வாகனங்கள் மீது கிளேமோர் தாக்குதல் நடைபெறுவதன் மூலம் அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்படுகிறதோ இல்லையோ மக்களின் பாதுகாப்புக்காக நகரில் படையினர் தங்களது நடமாட்டத்தை பெரிதும் குறைக்க வேண்டியுள்ளது.

வடக்கில் இராணுவ நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் புலிகளின் நடவடிக்கைகளும் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. வடக்கு, கிழக்கென்றில்லாது தெற்கிலும் அவர்கள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளதால் அரசும் படைத்தரப்பும் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.

எனினும், இராணுவத் தீர்வில் அரசு முழு அளவில் ஆர்வம் காட்டி வருவதால் அதன் விளைவுகளை எதிர்கொண்டேயாக வேண்டும்.


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..