பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow வவுனியா மோதல் உணர்த்துவதென்ன?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வவுனியா மோதல் உணர்த்துவதென்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 10 June 2007

paathukaappu2வடக்கில் மீண்டுமொரு தடவை படையினர் பாரிய இழப்பைச் சந்தித்துள்ளனர். வடக்கில் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை முன்னகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்த படையினருக்கு,வவுனியாவுக்கு மேற்கே கடந்தவாரம் ஏற்பட்ட பேரிழப்பு பேரிடியா கியுள்ளது.

மடுவை மையமாக வைத்து அதனை அண்டிய பிரதேசங்களை கைப்பற்றும் நோக்கில் கடந்த மூன்று மாதங்களாகப் படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளனவே தவிர, படையினரால் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றவோ அல்லது புலிகளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தவோ முடியவில்லை.

வவுனியா நகருக்கு அப்பால் நகரிலிருந்து வடக்கே, சுமார் 12 கிலோமீற்றர் தூரத்தில் ஓமந்தையுள்ளது. இதுவே இராணுவத்தினரின் இறுதி முன்னரங்க பாதுகாப்பு நிலையாகும். வவுனியா - மன்னார் வீதிக்கு சமாந்தரமாக ஓமந்தையிலிருந்து மேற்குப்புறமாக படையினரின் முன்னரங்க காவல் நிலைகள் மன்னார் வரை செல்கிறது.

வடக்கே இவை, தங்களது எல்லைப் புறமென்பதால் வவுனியாவுக்கும் மன்னாருக்குமிடையிலான தங்களது முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை மிகப் பலப்படுத்தியுள்ள படையினர் அந்த முன்னரங்க நிலைகளிலிருந்து புலிகளின் பகுதிகளினுள் முன்னேறும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக படையினர் இவ்வாறான முன்னகர்வு முயற்சிகளை பல தடவைகள் மேற்கொண்டுள்ளனர். வவுனியா - மன்னார் வீதியிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் மடு உள்ளது. படையினரின் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரமே மடுவின் மையப்பகுதியாகும். இதனால், மடுவையும் அதனை அண்டிய பகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டுமென்பதில் `அரசு' தீவிர அக்கறை காட்டியது.

மடு, கத்தோலிக்க மக்களின் மிகப்பெரிய வணக்கத் தலமென்பதால் மடுவைக் கைப்பற்றுவதென்பது இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்றதொன்று. தங்களது முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை சற்று முன்னகர்த்துவதாகவேயிருக்கும். ஆனால், மடுவை கைப்பற்றுவதன் மூலம் தெற்கில் கத்தோலிக்க மக்கள் மத்தியில் அரசின் மதிப்பை நன்குயர்த்த முடியுமெனக் கருதும் அரசு மடுவைக் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டியது.

இதற்காக வவுனியாவுக்கும் மன்னாருக்குமிடையில் முக்கிய பகுதிகளில், இராணுவத்தால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 57 ஆவது படையணியின் 1 ஆவது 2 ஆவது 3 ஆவது படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தின் அனைத்து படையணிகளிலுமிருந்து தரமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த 57 ஆவது படையணி உருவாக்கப்பட்டது.

காட்டுப் பிரதேசத்தில் சிறிய படை நடவடிக்கைக்கும், மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைக்கும், பாரிய படை நடவடிக்கைக்குமேற்ப இந்தப் படையணி சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற விஷேட கொமாண்டோ படையணியாகும். இந்த முன்னரங்க பகுதியில் இந்தப் படையணி நிறுத்தப்பட்டதன் மூலம் விரைவில் மடுவைக் கைப்பற்றிவிட முடியுமென அரசும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தது.

அடிக்கடி சிறுசிறு படை நடவடிக்கைகள் மூலமும் குழுக்களாகப் பிரிந்து சென்று தாக்குவதன் மூலமும் விடுதலைப்புலிகளுக்கு இவர்கள் கடும் அழுத்தத்தையும் நெருக்கடிகளையும் கொடுத்து வந்ததுடன் தங்கள் முன்னரங்க காவல் நிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக புலிகளின் பகுதிக்குள் நகர்த்தியும் வந்தனர்.

கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக அப்புறப்படுத்துவதுடன் வடக்கில் புலிகளை பெரிதும் பலவீனமடையச் செய்வதே படைத்தரப்பின் திட்டமாகும். இதனால், வடக்கில் புலிகளின் முன்னரங்க நிலைகளில் அவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து அவர்களைப் படிப்படியாக பின் நகர்த்தும் முயற்சிகளையும் படையினர் மேற்கொண்டு வந்தனர்.

இதன் பலனாக வவுனியாவுக்கு மேற்கே முள்ளிக்குளம் பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகளை படையினர் சற்று பின்னகர்த்தி வந்தபோது, அப்பகுதிகளில் புலிகள் பலவீனமாயிருக்கலாமென்ற எண்ணம் படையினருக்கு ஏற்பட்டது. இதனால், புலிகள் எதிர்பாராத வேளையில் திடீரென பாரிய தாக்குதலைத் தொடுக்கவும் படையினர் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கேற்ப வவுனியா - மன்னார் வீதிக்கு சமீபமாக பம்பைமடு பகுதியினுள் இராணுவ முகாம் நன்கு பலப்படுத்தப்பட்டு அங்கு பெருமளவு போர்த்தளபாடங்கள் குவிக்கப்பட்டு மூன்று பாரிய ஆயுதக் களஞ்சியங்களும் அமைக்கப்பட்டதுடன் மடுவை நோக்கிய நகர்விலீடுபடும் படையணிகளுக்கு பம்பைமடு முகாமிலிருந்தே ஆயுத விநியோகமும் நடைபெற்று வந்தது.

பம்பைமடு படை முகாமின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல ஆட்லறிகளும் அங்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்தே புலிகளின் பகுதிகளினுள் தினமும் ஆட்லறி ஷெல்கள் ஏவப்பட்டு வந்தன. அத்துடன், அந்தப் பகுதியில் பாரிய படைநகர்வொன்றை மேற்கொள்ளும் விதத்தில் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் மீது தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவற்றை தகர்க்கும் முயற்சியிலும் படையினர் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், புலிகள் தங்களது முன்னரங்க காவல் நிலைகளுக்கு பின்னால் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கிலும் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் அணிசேர்வது தடுக்கப்பட்டும் வந்தது. இதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை பலவீனப்படுத்தி தருணம் பார்த்து அவர்களது பகுதிக்குள் பெருமெடுப்பில் புகுந்துவிட வேண்டுமெனவும் படைத்தரப்பு தீவிரம் காட்டி வந்தது.

படையினர் இவ்வாறெல்லாம் கணக்குப் போட்டு பல்வேறு ஏற்பாடுகளையெல்லாம் செய்வதை தங்கள் புலனாய்வுப் பிரிவினர் மூலம் நன்கறிந்திருந்த புலிகள் வேறொரு கணக்குப் போட்டனர். படையினர் எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் தாக்க முடிவு செய்தனர்.

பாரிய நகர்வில் ஈடுபடும் தங்களது முயற்சியை முறியடிக்கவே புலிகள் முயல்வார்களெனப் படையினர் கருதினர். அடுத்தடுத்து தாங்கள் படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்தப் படை நடவடிக்கைகளை முறியடிக்கவும், தங்கள் பகுதிகளுக்குள் படையினரை முன்னேறவிட்டு அதன் பின் முறியடிப்புச் சமரில் புலிகள் ஈடுபடவே முயற்சிப்பரெனவும் படையினர் கருதியிருந்தனரே தவிர புலிகள் இப்பகுதியில் திடீரென கடும் தாக்குதலை மேற்கொள்வரென எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்த நிலையில் தான் புலிகள் கடந்த 2 ஆம் திகதி இரவு பம்பைமடு இராணுவ முகாம் மீது திடீர் தாக்குதலைத் தொடுத்தனர். அந்த முகாமில் பல ஆட்லறிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பம்பைமடு இராணுவ முகாமுக்கு கிழக்கே கல்மடு இராணுவ முகாம் மீது புலிகள் திடீர் ஷெல் தாக்குதலை நடத்திவிட்டு அதன் பின் பம்பைமடு முகாம் மீது கடும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

புலிகளின் இந்த ஷெல் தாக்குதலில் அங்கிருந்த ஆயுதக் களஞ்சியங்கள் மூன்றும் அடுத்தடுத்து வெடித்துச் சிதறி எரியத் தொடங்கின. முதல் ஆயுதக் களஞ்சியம் எரியத் தொடங்கவே அடுத்த இரு ஆயுதக் களஞ்சியங்களையும் பாதுகாத்து விட வேண்டுமெனப் படையினர் முயற்சித்தனர்.

முதல் ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதால் ஏற்பட்ட பாரிய தீயின் வெப்பத்திலிருந்து அடுத்த இரு ஆயுதக் களஞ்சியங்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவையிருந்ததுடன் அங்கிருந்து ஆட்லறிகள் மூலம் புலிகளின் பகுதிகளுக்கு ஷெல் தாக்குதல்களை நடத்த முடியாத நிலையுமேற்பட்டது.

ஆட்லறிகளை அடுத்தடுத்து ஏவும்போது ஏற்படும் வெப்பமும், ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் ஆயுதக் களஞ்சியத்தின் வெப்பமும் ஏனைய இரு ஆயுதக் களஞ்சியத்திற்கும் ஆபத்தாகிவிடலாமெனக் கருதிய படையினர் புலிகளை நோக்கி ஆட்லறி ஷெல் தாக்குதல் நடத்துவதை நிறுத்தினர்.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திய புலிகள் பம்பைமடு முகாம் மீது அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஷெல் தாக்குதலை நடத்த அங்கிருந்த ஏனைய இரு ஆயுதக் களஞ்சியங்களும் வெடித்துச் சிதறி எரியத் தொடங்கின.

ஆயுதக் களஞ்சியங்கள் வெடித்துச் சிதறிய அதேநேரம், அங்கிருந்த ஆட்லறிகளை பாதுகாக்க முடியாத நிலையில் படையினர் இருந்தனர். இவ்வேளையில் புலிகளின் ஷெல் ஒன்று முகாமின் மீது வீழ்ந்ததால் முகாமின் தொலைத் தொடர்புக் கருவிகளும் முற்றாகச் செயலிழந்தன.

தங்களது தாக்குதலில் ஆயுதக் களஞ்சியங்கள் வெடித்துச் சிதறியதையும் படையினரால் ஆட்லறித் தாக்குதலை நடத்த முடியாதிருப்பதையும் அறிந்த புலிகள் அந்த முகாம் மீது தொடர்ந்தும் கடும் ஷெல் தாக்குதலை நடத்தியதில் ஏழு வரையான ஆட்லறிகள் அழிந்து போயுள்ளன. புலிகள் இதனை உறுதிப்படுத்திய போதும் படையினர் இதனை முற்றாக மறுத்துள்ளனர். ஒரு ஆயுதக் களஞ்சியமே அழிந்ததாக கூறுகின்றனர்.

ஒருபுறம் பம்பைமடு முகாம் மீது கடும் ஷெல் தாக்குதலை நடத்தியவாறு அங்கு பேரழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த புலிகள் மறுபுறம், முள்ளிக்குளம், போக்ககர் வன்னி, விளாத்திக் குளம், பரிசங்குளம் பகுதிகளில் இராணுவத்தினரின் முன்னரங்க காவல் நிலைகளை தகர்ந்து அழித்தவாறு உள்ளே புகுந்தனர்.

அண்மைக் காலமாக இப்பகுதிகளில் இடம்பெற்ற படை நடவடிக்கைகள் மூலம் படையினர் இந்தப் பகுதிகளுக்குள் சற்று முன்னேறி தங்கள் முன்னரங்க காவல் நிலைகளை அமைத்திருந்தனர். இந்த நிலைகளை அழித்தவாறு புலிகளின் படையணியொன்று நுழைந்தபோது அதனைப் படையினர் எதிர்பார்க்கவில்லை.

பம்பைமடு முகாமிலிருந்தே இந்தப் பகுதிகளின் பாதுகாப்புக்கு ஆட்லறி ஷெல்கள் முன்னர் மழைபோல் பொழியும். ஆனால், புலிகளின் பலத்த தாக்குதலில் பம்பைமடு முகாமின் ஆயுதக் களஞ்சியங்கள் அழிந்ததாலும் ஆட்லறிகள் பல அழிந்ததாலும் இந்த முகாமிலிருந்து விளாத்திக்குளம், போக்கர் வன்னிப் பகுதியில் முன்னேறிய புலிகளுக்கு எதிராக ஆட்லறித் தாகுதல்களை நடத்த முடியவில்லை. இந்நிலையில், அண்மைக் காலங்களில் தாங்கள் முன்னேறியிருந்த இடங்களிலிருந்து பின்வாங்கிய படையினர் புலிகளின் கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது திண்டாடினர். 250 இற்கும் மேற்பட்ட புலிகளே இந்தத் திடீர் அதிரடித் தாக்குதலை நடத்தியதாக பின்னர் படைத்தரப்பு தெரிவித்திருந்தது. புலிகளின் இந்தத் தாக்குதலையடுத்து பின்வாங்கிய படையினரால் போர்த் தளபாடங்களையும் இறந்த படையினரின் உடல்களையும் எடுத்துச் செல்ல முடியவில்லை.

இந்தச் சமர் மறுநாள் காலைவரை உக்கிரமாயிருந்தது. பம்பைமடு ஆயுதக் களஞ்சியங்கள் முதல் நாளிரவிலிருந்து மறுநாள் காலை வரை எரிந்தன. ஆறுக்கும் மேற்பட்ட கொள்கலன் ஆயுதங்களும் வெடி பொருட்களும் இந்த ஆயுதக் களஞ்சியங்களிலிருந்து அழிந்துவிட்டதாகத் தெரியவருகிறது. பெருமளவு ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் ஆர்.பி.ஜி. ஷெல்களும் அழிந்துள்ளன.

இதேநேரம், இந்தச் சமரில் 10 படையினர் மட்டுமே கொல்லப்பட்டு 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு திரும்பத் திரும்பக் கூறுகிறது. புலிகளால் கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களையும் ஏற்க படையினர் மறுத்துவிட்டனர். எனினும், படையினருக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் மிகமிக அதிகமாகும்.

200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 196 படையினர் கொல்லப்பட்டதை இராணுவ தரப்பு உறுதிப்படுத்துவதாக ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட 200 பேரில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வடக்கில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முகமாலை பகுதியில் புலிகளின் பகுதிக்குள் பாரிய முன்னேற்ற முயற்சியை மேற்கொண்ட படையினருக்கு ஏற்பட்ட பேரிழப்பும், கடந்தவாரம் வவுனியாவுக்கு மேற்கே, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுந்த புலிகள் படையினருக்கு ஏற்படுத்திய பேரிழப்பும் சமனானதாகக் கருதப்படுகிறது.

கிழக்கைப் போன்று வடக்கில்லை, ஒட்டுமொத்தத்தில் அரசும் படையினரும் நினைப்பதுபோல் இனி யுத்தம் நடைபெறப் போவதில்லையென்பதை இந்தச் சமர் அரசுக்கும் படையினருக்கும் உணர்த்தியுள்ளது.

வன்னியில் பாரிய படைநகர்வுக்காக மிகப்பெரும் ஏற்பாடுகளைச் செய்திருந்த படையினருக்கு இது மிகப்பெரும் இழப்பாகும். அரசின் திட்டங்களுக்கு இது பேரிடியாகும். எனினும், இழப்புகளை முடிந்தவரை மறைத்து புலிகளுக்கே பாரிய இழப்புகள் ஏற்பட்டது போல் காண்பிக்க அரசு முற்படுகிறது.

ஆனாலும், ஆறு கொள்கலன் ஆயுதங்கள் அழிந்ததும் 200 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதும் இந்தப் பகுதியில் இனி, பெரும் படை நகர்வில் ஈடுபடும் யோசனைக்கு முற்றாக முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டுமென படைத்தரப்பு கருதுகிறது.

வன்னிக்கான பாதையை திறக்க முயன்ற ஜெயசிக்குறு படையினருக்கு என்ன நடந்ததென்பது தற்போது படைத் தலைமைக்கு விளங்கியிருக்கும்.

தங்களது வலுமிக்க கடற்புலிகளையும் புதிய வான் புலிகளையும் பயன்படுத்தாது வடக்கே புலிகள் எந்தளவிற்கு மிகவும் வலுவாயிருக்கிறார்களென்பதை கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற மோதல் அரசுக்கும் படையினருக்கும் உணர்த்தியிருக்கும். இதனால், இனிவரும் நாட்களில் வடக்கே நடைபெறப்போகும் ஒவ்வொரு மோதலும் உண்மையை உணர்த்தப்போகிறது.


விதுரன்
Comments (1) >>

kowsi said:

 
no comments
June 10, 2007
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..