பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow இலக்குகளுக்கு குறிவைத்து காத்திருக்கும் படைத்தரப்பும் விடுதலைப்புலிகளும்!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2

இலக்குகளுக்கு குறிவைத்து காத்திருக்கும் படைத்தரப்பும் விடுதலைப்புலிகளும்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 17 June 2007

paathukaappu2வடக்கில் படையினரின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிரானதும் மிகக் கடுமையான துமான பதில் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர். கிழக்கின் கள நிலைகள் போலல்லாது வடக்கு போர்முனை புலிகளுக்கு மிகவும் வாய்ப்பாயிருப்பதால் படையினரின் ஒவ்வொரு சிறு தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக அப்புறப்படுத்தி விடவேண்டுமென்ற தீவிர முயற்சியில் படைத்தரப்பு இறங்கியுள்ளது. மட்டக்களப்பில் படுவான்கரை பகுதியில் புலிகளின் வசமிருந்த கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய படையினர் அனைத்துப் பகுதிகளையும் தம் வசமாக்கிவிட வேண்டுமென்பதில் மிகவும் தீவிரம் காட்டுகின்றனர்.

தற்போது அங்கு, குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் நிலைகொண்டுள்ள புலிகள் படையினருக்கு மிகக் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். குடும்பிமலை பிரதேசத்தை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்ற முனைப்பில் அங்கு தினமும் படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆனாலும் அடர்ந்த காடுகள், மலைக்குன்றுகள், குறுக்கிடும் ஆறுகளென படையினருக்கு சாதகமற்ற களநிலையே இப்பகுதியில் காணப்படுகிறது. இந்தப் புவியியல் நிலைமை, தொடர்ந்தும் தற்காப்புச் சமரை நடத்தியவாறு அந்தப் பிரதேசத்தை தக்கவைப்பதற்கு புலிகளுக்கு உதவியாகவுள்ளது.

குடும்பிமலை பகுதியையும் கைப்பற்றிவிட்டால் எவ்வித சிரமமுமின்றி கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தலை நடத்திவிடலாமென அரசு கருதுகிறது. இதற்காக குடும்பிமலை பகுதியையும் முழுமையாகக் கைப்பற்றி கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக வெளியேற்றிவிட வேண்டுமென்பதில் அரசு அவசரம் காட்டுகிறது. ஆனால் களநிலைமை அங்கு மாறுபட்டதாகவேயுள்ளது.

கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக வெளியேற்றும் அதேநேரம் வடக்கில் புலிகளை முடிந்தவரை பலவீனமடையச் செய்வதே அரசின் திட்டமாகும். புலிகள் பலமாயிருக்கும் வரை பேச்சுக்களுக்கு வரமாட்டார்களெனக் கருதும் அரசு அவர்களை பலவீனமடையச் செய்வதற்காக வடக்கில் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

வடக்கு - கிழக்கை பிரித்து விட்டதால் கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் மூலம் வாய்ப்பானவர்களை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு வடக்கில் புலிகளை மிகவும் பலவீனமாக்கிவிட்டால் தாங்கள் முன்வைக்கும் தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்கள் மீது திணித்து விட முடியுமென்பதே அரசின் திட்டமாகும்.

ஆனாலும் வடக்கில் நிலைமை தலைகீழாயிருப்பதை கடந்த சில மாத மோதல்கள் மூலம் அரசு நன்குணர்ந்திருக்கும். கடந்த வருடம் அக்டோபர் மாதம் முகமாலையில் ஏற்பட்ட படுதோல்வி முதல் அண்மையில் வவுனியாவுக்கு மேற்கே முள்ளிக்குளத்தில் ஏற்பட்ட தோல்வி வரை, அரசின் திட்டமெதுவும் பலிக்கப் போவதில்லையென்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

வடக்கில் படை நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. வன்னிக்குள் பாரிய படை நகர்வுகளை மேற்கொள்ளும் திட்டங்களை மீண்டும் மீண்டும் தயாரித்து வருகிறது.

கடந்த 2 ஆம் திகதி வவுனியாவுக்கு மேற்கே மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் மற்றும் விளாத்திக்குளம் பகுதியில் படையினர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். வன்னியில் புலிகளின் முன்னரங்க நிலைகளை பின்நகர்த்தி வன்னிக்குள் அவர்களை தோற்கடிப்பதற்காகவெனப் புதிதாக உருவாக்கப்பட்ட 56 ஆவது படையணி மிக மோசமாக அடிவாங்கியுள்ளது.

மன்னாருக்கும் வவுனியாவுக்குமிடையில் முன்னரங்க காவல் நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியின் 1 ஆவது 2 ஆவது 3 ஆவது படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இராணுவத்தின் பல படையணிகளிலுமிருந்து தரமானவர்கள் தேர்வு செய்யப்பட்டே இந்த 57 ஆவது படையணி, பிரிகேடியர் சுமித் மானவடு தலைமையில் அமைக்கப்பட்டு களமிறக்கப்பட்டது.

வவுனியா - மன்னாரில் புலிகளின் முன்னரங்க நிலைகளைத் தாக்கி அழிப்பதும் புலிகளை எந்தளவு தூரத்திற்கு பின்நகர்த்தி இராணுவ நிலைகளை முன்நகர்த்த முடியுமோ அந்தளவிற்கு தொடர்ச்சியானதும் அதிரடியானதுமான தாக்குதல்களைத் தொடுப்பதும் புலிகளுக்கு இதன்மூலம் பெரும் ஆட்சேதங்களை ஏற்படுத்துவதுமே இந்தப் புதிய படையணியின் பிரதான நோக்கமாகும்.

அதேநேரம், வவுனியா - மன்னார் வீதியில் வன்னிக்குள் மடுவைக் கைப்பற்றுவதும் இந்தப் படையணியின் நோக்கமாகும். இதற்கு வசதியாகவே வவுனியாவுக்கு மேற்கே கல்மடு பகுதியில் 57 ஆவது படையணியின் தலைமையகம் அமைக்கப்பட்டு பம்பைமடு பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டு ஆயுத விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்லறிகள் மற்றும் மோட்டார்கள் மூலம் புலிகளை நிலைகுலைய வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கடந்த மூன்று மாதகாலமாக 57 ஆவது படையணியின் நடவடிக்கைகளையெல்லாம் உன்னிப்பாக அவதானித்து வந்த புலிகள் கடந்த 2 ஆம் திகதி கல்மடு மற்றும் பம்பைமடு பகுதியில் 57 ஆவது படையணியின் ஆயுதக் களஞ்சியங்களை அழித்த அதேநேரம் முள்ளிக்குளம் மற்றும் விளாத்திக்குளம் பகுதியில் பாரிய ஊடறுப்பு தாக்குதலை நடத்தி அவர்களுக்கு பாரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தினர்.

படையினரின் தகவல்படி 50 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதைவிட பல டசின் படையினர் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கையில் காணாமல்போன இந்த பல டசின் படையினர் உயிரோடில்லை என்பதே அர்த்தமாகும்.

இந்தத் தோல்வி படையினர் மத்தியில் மட்டுமல்லாது அரசுக்கும் பேரதிர்ச்சியாகியுள்ளது. புலிகள் மிகவும் பலமாகவுள்ள காட்டுப் பிரதேசங்களில் அவர்களைப் பின்வாங்கச் செய்யும் நோக்கில் விஷேட பயிற்சிகளும் அதற்கேற்ப மிக நவீன ஆயுதங்களும் வழங்கப்பட்டும் அந்தப் படையணிக்கு புலிகள் பாரிய சேதத்தை ஏற்படுத்தியமை, படைத் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடு அங்கிருந்து உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள 56 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் சூல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 57 ஆவது படையணி சந்தித்த பேரிழப்பையடுத்தே இராணுவத் தளபதி இந்த உடனடி மாற்றத்தைச் செய்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்தில் புதிய படையணியொன்றை உருவாக்க அரசு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியாவுக்கு கடந்த வியாழக்கிழமை அவசர விஜயமொன்றை மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவே இந்த நடவடிக்கையில் நேரடியாக இறங்கியுள்ளார்.

ஏனைய சகல படையணிகளிலுமிருந்தே மிகச்சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு விஷேட படையணிகள் உருவாக்கப்படும். புதிதாக உருவாக்கப்படவுள்ள `58 ஆவது படையணி'யானது, விஷேட படையணிகளிலுள்ள சிறந்த வீரர்களையும் கொண்டதாயிருக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக இராணுவத்திற்கு ஆட்களை சேர்ப்பதன் மூலம் அவர்களை சகல படையணிகளுக்கும் அனுப்பி தரமானவர்களைத் தேர்வு செய்து கள நிலைமைகளுக்கேற்ப புதிய படையணிகளை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையிலேயே `58 ஆவது படையணி' உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான இறுதி உத்தரவுகளை பாதுகாப்பு அமைச்சும் இராணுவ தலைமைப்பீடமும் வழங்கிவிட்டன. வன்னியில் புலிகளிற்கெதிரான போரை மையமாகக் கொண்டே இந்தப் புதிய படையணி உருவாக்கப்படுகிறது. அண்மையில் உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணிக்கு பதிலாகவே 58 ஆவது படையணியை உருவாக்கும் தேவையேற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை வவுனியா சென்ற கோதாபய ராஜபக்ஷ மற்றும் முப்படைத் தளபதிகள் வவுனியா இராணுவத் தலைமையகத்தில் இது தொடர்பாக நீண்ட நேரம் விரிவாக ஆராய்ந்து முடிவுகளை எடுத்துள்ளனர். இந்தப் புதிய படையணிக்கு பிரிகேடியர் ஒருவரே கட்டளைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

கடந்த காலங்களில் புலிகளுடனான போர்களின் போது பாரிய நடவடிக்கைகளுக்காக இவ்வாறு புதிய படையணிகள் உருவாக்கப்பட்டன. அதுவும், மணலாறில் போரிட உருவாக்கப்பட்ட 53 ஆவது படையணி முதல் அண்மையில் முள்ளிக்குளத்தில் தோல்வியைத் தழுவிய 57 ஆவது படையணி வரை இதிலடங்கும்.

53 ஆவது படையணி மணலாற்றுச் சமருக்கும், 54 ஆவது படையணி ஆனையிறவிலிருந்து கிளிநொச்சிக்கு முன்னேறுவதற்கும் (1996), 55 ஆவது படையணி வவுனியா - மன்னார் வீதியைக் கைப்பற்றுவதற்கும் (1996) ஜெயசிக்குரு நடவடிக்கைக்காக 56 ஆவது படையணியும் (1996) மடுவைக் கைப்பற்றுவதற்கும் வன்னிக்குள் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளை பின்நகர்த்துவதற்குமாக அண்மையில் 57 ஆவது படையணி உருவாக்கப்பட்டது.

இவ்வாறு புதிய படையணிகள் உருவாக்கப்படுகின்றனவென்றால், உருவாக்கப்பட்ட படையணிகளால் இலக்குகளை அடைய முடியவில்லை அல்லது அடைவதற்குள் அந்தப் படையணிகள் பேரிழப்புகளைச் சந்தித்தவையாக இருக்கலாம். இதனை, கடந்த கால போர்களில் மேற்படி படையணிகள் எவ்வாறான பாரிய பின்னடைவுகளைச் சந்தித்தன என்பதன் மூலம் உணரலாம்.

வடக்கை பொறுத்தவரை அரசுக்கு அவசர வெற்றிகள் தேவைப்படுகிறது. தெற்கில் தற்போது அரசுக்கெதிரான உணர்வுகள் தலை தூக்கி வருகிறது. மிக மோசமான மனித உரிமை மீறல்களால் இலங்கையை சர்வதேசம் தனிமைப்படுத்தும் நிலை உருவாகிவிட்டதாக எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டிலாவது பெயரைத் தக்க வைக்க வேண்டிய நிலை அரசுக்கேற்பட்டுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் முகமாலைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி ஒரு சில மணிநேரத்திற்குள் மிக மோசமான இழப்புகளுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று வரை யாழ். குடாநாட்டிலிருந்து படையினரால் பாரிய நடவடிக்கை எதனையும் முன்னெடுக்க முடியவில்லை.

இதேபோன்றதொரு நிலையே தற்போது வவுனியாவுக்கும் மன்னாருக்குமிடையில் முன்னரங்க காவல் நிலைகளில் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைப் பொருட்படுத்தாது மேலும் மேலும் பாரிய நகர்வுகளுக்கு படையினர் அவசரம் காட்டினால் நிலைமை எவ்வாறிருக்குமென்பதை முள்ளிக்குளம் சமர் நன்குணர்த்தியுள்ளது.

அதேநேரம் வடக்கு - கிழக்கு பருவ மழைதொடங்குவதற்கு முன்னர் யாழ்.குடாநாட்டில் பாரிய மோதல்கள் இடம்பெறலாமென எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இவரது இக்கூற்றானது, வடக்கில் கடும் மழை தொடங்க முன்னர் குடாநாட்டில் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுக்கலாமென படைத்தரப்பு எதிர்பார்ப்பதுடன் அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்தியும் வருகிறது.

வன்னியில் பாரிய தாக்குதலைத் தொடுக்க படைத்தரப்பு முனைகையில் யாழ்.குடாநாட்டில் பாரிய தாக்குதலுக்கு புலிகளும் முனையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கில் எவ்வேளையிலும் பெரும் போர் வெடிக்கும் சூழ்நிலையேற்பட்டுள்ளது.

இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து அவசர அவசரமாக போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்ய முயலும் அரசு இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கும் நிபுணர்களை அனுப்பியுள்ளது. அடுத்த பாரிய சமருக்கு முன்னர் முழு அளவில் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவித்து விடுவதில் அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

இதேபோல் புலிகளும் முழு அளவில் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்குப் பின்னர் வான் புலிகள் தாக்குதலெதனையும் நடத்தவில்லை. அண்மைக் காலங்களில் கடற்புலிகளின் தாக்குதல்களெதுவும் நடைபெறவில்லை. அடுத்த பாரிய சமருக்காக வான்புலிகளும், கடற்புலிகளும் தயாராகி வருவதாக படைத்தரப்பு ஊகிக்கிறது.

எது எவ்வாறாயினும் மிக விரைவில் வடக்கில் பெரும் போர் வெடிக்கப் போவது நிச்சயம். இதற்கேற்ப இரு தரப்பும் தயாராகிவிட்டன. எங்கு, எப்போது இந்தப் போர் வெடிக்குமென்பது உடனடியாகத் தெரியவராவிடினும் இரு தரப்பும் ஒவ்வொரு இலக்கிற்காக காத்திருக்கின்றன. இதில் யார் முந்தப் போகிறார்களென்பதே இன்று அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வியாகும்.


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..