பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow கிழக்கில் என்ன நடக்கப் போகின்றது?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கிழக்கில் என்ன நடக்கப் போகின்றது? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 29 July 2007

ஜனாதிபதி மகிந்தவின் தொப்பிகல திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது.இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள் மாறியுள்ள நிலையில் இவ்விழவின் மூலம் பொலிஸ் அலுவலர்களும் அரசியல்வாதிகளாக மாறியிருந்தனர். கொழும்பு வடக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பொலிஸ் அலுவலர்களே வெற்றிக் கொடியேற்றி பாற்சோறு வழங்கினர். பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்கனவே அச்சடித்து வழங்கப்பட்ட அறிக்கையையும் வாசித்தனர்.

கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளே அவ்வறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. படையினர் மேற்கொண்ட கூட்டுக்கொலைகள் பற்றி மூச்சே விடப்படவில்லை. அதிபர்களும் ஆசிரியர்களும் தாங்கள் எதுவும் உரையாற்றாமல் தவிர்த்துக் கொண்டனர்.

மகிந்தவின் இத்திருவிழாவோடு சமாதான முயற்சிகளுக்கும் முடிவுகட்டியாகிவிட்டது. அண்மைய சில நாட்களுக்கு முன்னர் தான் இணைத்தலைமை நாடுகள் மீளவும் ஒரு தடவை சமாதானத்திற்கு முயற்சித்தன. தற்போது அவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இணைத்தலைமைகள் கொடுத்த உசாரில் திடீரென்று எழுச்சி பெற முற்பட்ட உள்ளூர் சமாதான வியாபாரிகளும் தமது கடைகளை கால வரையரையின்றி மூட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர�
. ஜனாதிபதி மகிந்தர் சமாதானத்திற்கான சிறிய தடயங்களைக் கூட அழிக்க வேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருக்கின்றார்.

மறுபக்கத்தில் புலிகளுக்கு அவர்களது இராஜதந்திரப் பின்னகர்வு அரசியலமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய கட்டம் வந்துள்ளது. இனி அவர்கள் பின்னகர்ந்து செல்வதற்கு எதுவுமில்லை. அதன் எல்லை வந்துவிட்ட நிலையில் முன்னோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு சர்வதேச சக்திகளிடம் இன்று எந்தவித துரும்பும் கிடையாது. சர்வதேச சக்திகளினால் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையும் சமாதான முயற்சிகளும் ஜனதிபதி மகிந்தவால் வழித்துத்துடைத்து அழிக்கப்படும் போது, அவர்கள் கைகட்டிப் பார்த்துகொண்டிருக்க வேண்டியவர்களாகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டது போல, சர்வதேச சக்திகளுக்கு இலங்கை தொடர்பாக தற்போதுள்ள ஒரேயொரு தெரிவு "இலங்கையை மறந்துவிடுவதுதான்" ரணில் - மங்கள கூட்டை - ஆட்சிக்கு கொண்டு வரல் என்ற அவர்களது கனவும் நிறைவேறும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மகிந்தருக்கு ஆபத்து ஏற்பட்டால் பேரினவாதசக்திகள் உட்பட ஜே.வி.பி.யினரும் மகிந்தரைப் பாதுகாக்க முற்படுவர். இவர்கள் மட்டுமல்ல, மகிந்தருக்கு ஆபத்து ஏற்பட்டால் புலிகளும் மகிந்தரைப் பாதுகாக்க முற்படலாம். புலிகளைப் பொறுத்தவரை மகிந்தர் பின்பற்றும் பச்சை இனவாதம் அவர்களுக்குப் பிரச்சினையல்ல.ரணில் பின்பற்றும் வடிகட்டிய இனவாதமே பிரச்சினை. ஏற்கனவே ரணில் அரசாங்கத்தில் பல்வேறு அனுபவங்களைக் கண்ட அவர்கள் ரணில் ஆட்சிக்கு வருவதை அனுமதிப்பார்களெனக் கூற முடியாது.

இந்நிலையில் இலங்கைத் தீவின் போக்கு இயல்பான போக்கில் செல்வதற்குத்தான் வழிகள் திறக்கப்பட்டுள்ளன.இந்த இயல்பான போக்கு என்பது, "போர் தொடர்வதுதான்" ஏதாவது அற்புதங்கள் நிகழ்ந்தாலொழிய, போர் நிறுத்தப்படுவதற்கு சாத்தியங்கள் எதுவுமில்லை. போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளுக்கும் போரைத் தவிர வேறு தெரிவுகள் தற்போது இல்லை.

இந்தப் போக்கு காரணமாக அதிகம் கவலைப்படப்போவது இந்தியாதான். தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் நடக்கும் போர் தனது வீட்டிலும் அதிர்வுகளைக் கொண்டுவரப்போகிறது என்பதில் தான் இந்தியாவிற்குள்ள மிகப்ெ பரிய கவலை. தனது வீட்டில் வடக்கு, மேற்கு, வடகிழக்கு என மூன்று பக்கமும் போர்ச் சூழல் உள்ள நிலையில் தென்பகுதியே பாதுகாப்பானதெனக் கருதி, தனது பாதுகாப்பு மையங்களை எல்லாம் தென்பகுதிக்கு நகர்த்தி இருந்தது இந்தியா. இன்று, தென்பகுதியிலும் ஆபத்து ஏற்படுகின்றமையால் தனது மையங்களை எங்கே நகர்துவதென தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் நாட்டு அரசியல் நிர்ப்பந்தம் அதிகளவில் இலங்கையரசிற்கு சார்பாக முடிவுகள் எடுப்பதையும் தடுக்கின்றது. புலிகளோடு உள்ள அனுபவம் காரணமாக புலிகளை அதிகம் சீண்டவும் இந்தியா தயங்குகின்றது. போரில் ஈடுபடும் இரு தரப்புகளோடும் உறவுகளை வைத்திருந்தால் தனது நலன்களுக்கேற்ப சில காய்களை நகர்த்தி இருக்கலாம். இலங்கை அரசிற்கு மட்டும் ஆதரவு என்ற ஒற்றை நிலையை எடுத்தமையால் தற்போது எந்தக்காய்களையும் நகர்த்த முடியாது இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இவை ஒரு புறமிருக்க, தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வி கிழக்கில் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதுதான்.

கிழக்கின் புவியியல் நிலைமை சமூகஅமைப்பு எல்லாத்தரப்பும் காய்களை நகர்த்தும் வசதியினைக் கொடுக்கின்றது. தற்போது எல்லாத் தரப்புமே புதிய வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. படைத்தரப்பு ஒரு வகையான வியூகத்தையும் அரசாங்கம் இன்னொரு வகையான வியூகத்தையும் பேரினவாதிகள் வேறொரு வகையான வியூகத்தையும் வகுக்கத் தொடங்கியுள்ளனர். மூன்று தரப்பிற்கும் வியூகங்களின் மைய விடயமாக இருப்பது கிழக்கில் அவர்கள் இருப்பேயாகும்.இவர்களுக்கும் புறம்பாக புலிகளும் தங்கள் நலன்களிலிருந்து வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம் தரப்பு எந்த வித வியூகத்தை வகுப்பது எனச் சற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

படைத்தரப்பின் வியூகம் முழுமையான இராணுவ நிர்வாகத்திற்குள் கிழக்கினைக் கொண்டு வருவதேயாகும். அதற்கான முயற்சிகளை அது தற்போதே ஆரம்பித்துவிட்டது. அரசாங்கம் வெளிநாடுகளுக்குக் காட்டுவதற்காக என்னதான் தேர்தல் பற்றிப் பேசினாலும் ஒரு சுயாதீனமான அரசியல் நிர்வாகம் கிழக்கில் இருப்பதை படையினர் அறவே விரும்பவில்லை. அரசியல் நிர்வாகம் படையினரின் பிடியைத் தளரச் செய்யும் என்பதற்கு அப்பால், கிழக்கின் சமூக அமைப்பு சுமுகமான அரசியல் நிர்வாகத்தை நடத்த விடாது என்பது படையினருக்கு நன்றாகவே தெரியும். இந்நிலை தங்களது செயற்பாட்டிற்கும் தலையிடியாக இருக்குமென்பதால், அரசியல் நிர்வாகத்தைத் தவிர்க்கவே படையினர் விரும்புகின்றனர்.

இராணுவ நிர்வாகத்தின் ஆரம்ப நிலையின் மீளக்குடியேறிய மக்களுக்கான புனர்நிர்மாண வேலைகள் தங்களது மேற்பார்வையின் கீழ் நடைபெறுமென படையினர் கூறியுள்ளனர். இதற்காக கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்படுமென்றும் அக்குழுவில் கிராமத்து மக்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர், பொலிஸ் அலுவலர், இராணுவ அதிகாரி ஆகியோர் அங்கம் வகிப்பர் எனவும் அரசு சாரா அமைப்புகள் பிரதேச செயலாளர் ஊடாக விண்ணப்பித்து, இக்குழுக்களின் மூலம் புணர்நிர்மாணப் பணிகளைச் செய்தல் வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கான சுற்று நிருபமும் தனிச்சிங்களத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்புகள் இதற்கான எதிர்ப்பினை தெரிவித்த போதிலும் படையினர் அதனைக் கணக்கெடுக்கவில்லை.

இக்குழுவில் மக்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனக் கூறப்பட்ட போதும் படைத்தரப்பிடமே முழு அதிகாரமும் இருக்கப்போவது வெளிப்படையானதாகும். புலிகள் விரும்பாததால் மக்கள் இதற்கு ஒத்துழைப்பார்கள் எனவும் கூறிவிட முடியாது. பிரதேச செயலாளர், கிராமசேவகர் என்போரும் தயங்கிய நிலையிலேயே செயற்பட வேண்டியிருக்கும். இறுதியில் முழுச் செயற்பாடும் படைத்தரப்பின் கைகளுக்குச் செல்வதற்கே வாய்ப்புகளுண்டு.

படைத்தரப்பு மக்களை முழுமையாக தங்களில் தங்கியிருக்கும் ஒரு கூட்டமாக வைத்திருக்கவே விரும்புகின்றது. ஆனால், அது வெற்றியளிக்குமெனக் கூறிவிட முடியாது. யாழ். குடா நாட்டில் படையினர் இவ்வாறான முயற்சிகளை செய்தபோதும் அது வெற்றியளிக்கவில்லை. இச் சந்தர்ப்பங்களில் மக்கள் வெளிப்படையாக புலிகள், படைத்தரப்பு ஆகிய இரு தரப்புகளிடமிருந்தும் தூர விலகியிருப்பதாகவே காட்ட முற்படுவர். ஆனால், மறைமுகமாக புலிகளுக்கு ஆதரவினை வழங்குவர்.

தற்போது இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள மூதூர் கிழக்கு, வாகரை,படுவான்கரைப் பிரதேசங்கள் நீண்ட - காலமாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களாகும். இப்பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாளவிலான இளைஞர்கள், யுவதிகள் தற்போதும் புலிகள் இயக்கத்தில் இருக்கின்றனர். பொருமளவிலான இளைஞர், யுவதிகள் மாவீரர்களாகவும் இறந்துள்ளனர். எனவே போராளிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் புலிகளின் நலன்களுக்கு எதிராக செயற்படுவரென கூறிவிடமுடியாது. இதைவிட இப்பிரதேசங்கள் வழமையாக கைமாறும் பிரதேசங்களாக இருப்பதுண்டு. எனவே, இதனால் தான் சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் இப்பிரதேசங்களை "புலிகளுக்கும் படையிருக்குமிடையே நடமாடும் பிரதேசங்கள்" என்பர். இந்நிலையில் இப்பிரதேசகளில் ஆழமாக வேரூன்றியுள்ள புலிகளின் செல்வாக்கினை ஒரு சில திட்டங்கள் மூலம் முறியடிக்க முடியாது.

இராணுவம் தற்போதே இராணுவ இறுக்கத்தைப் பேணுவதற்கான சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கியுள்ளது.ஒரு கூட்டமாகத் தங்கியிருந்த மக்களிடமிருந்து பெற்றோருக்கு முன்னாலேயே ஒரு பத்தொன்பது வயதுப் பெண் படையினரால் ஏழு முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். இக்கொலை காரணமாக ஏற்பட்ட அச்சதினால் அக் கிராமமே தற்போது இம்பெயர்ந்துள்ளது.வேறு பலர் கடத்தப்பட்டும் கொல்லப்பட்டுமுள்ளனர்.

இவற்றிற்குப் புறம்பாக போராளிகளின் குடும்பங்கள்,மாவீரர் குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பையும் படையினர் எடுக்கத்தொடங்கியுள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.அத்தோடு மக்களின் பொதுக்கட்டிடங்கள் பல இராணுவ முகாம்களாக மாறியுள்ளமையும் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக் கட்டிடம் பல வருடங்களாகவே இராணுவத்தின் தலைமைச் செயலகமாக உள்ளது. படுவான்கரைப் பிரதேசத்தில் வவுணதீவு பிரதேச சபை இராணுவ முகாமாக மாறியுள்ளது. இதனால் பிரதேச சபை இரு சிறிய கடைகளில் இயங்குகின்றது. பிரதேச செயலாளர் ஒரு சிறிய கடையில் பணிகளை மேற்கொள்ள, ஊழியர்கள் இன்னொரு கடையிலிருந்து பணிகளை மேற்கொள்கின்றனர். பழுகாமம் மருத்துவமனை, உன்னிச்சை மருத்துவமனை, கொக்கட்டிச் சோலை ஆசிரியர் பயிற்சி நிலையம், கொக்கட்டிச் சோலை பொதுச் சந்தை என்பனவும் இராணுவ முகாம்களாக மாறியுள்ளன.

எனவே இராணுவ இறுக்கம் மேலும் வளர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றதே தவிர குறைவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை.

அரசாங்கத்தின் வியூகம் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் கிழக்கின் மோசமான நிலைக்கு வெள்ளையடிக்க விரும்புகின்றனர். "எல்லாம் இயல்பு நிலைக்கு வந்துள்ளது", "ஜனநாயக நிறுவனங்கள் சுமுகமாகச் செயற்படுகின்றன" எனக்காட்டி வெளிநாடுகளிடமிருந்து நிதிகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்காகத்தான் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அவசரப்படுகிறது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் நடத்தப்போவதாகக் கூறுகின்றது.ஆனால் கிழக்கின் உண்மை நிலை தேர்தல் எதுவும் நடத்தக் கூடியதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கிற்குச் செல்ல கருணா குழுவினர் தடைவிதித்துள்ளனர். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் "வடகிழக்கு தமிழ் மக்களுக்கு எப்படி ஜனநாயகம் இல்லையோ அது போல அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இல்லை" எனக் குறிப்பிட்டார். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பொதுமக்கள் தரப்பிலிருந்து எவரும் போட்டியிட முன்வரமாட்டார்கள். ஆயுதக்குழுக்கள் மட்டுமே போட்டியிட முன்வரலாம். கருணா குழுவும் ஈ.பி.டி.பி.யும் , புளொட் இயக்கமும் போட்டியிட முன்வரலாம். அவர்களுக்கிடையே உறவுகள் சீரில்லாததனால் ஒருவரோடொருவர் ஆயுதங்களோடு மோதிக்கொள்ளும் நிலையும் உண்டு. கருணா குழுவினர் கிழக்கின் ஏகபோகத்தை தாம் எடுக்க விரும்புகின்றனர். இதனை ஏனைய ஆயுதக்குழுக்கள் மட்டுமல்ல கருணா குழுவிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் குழுவும் ஏற்கப்போவதில்லை.

தேர்தல் நடைபெற்றால் மக்கள் அதிகளவில் சென்று வாக்களிப்பர் எனவும் கூறிவிட முடியாது. மக்கள் இன்னமும் அகதிகள் முகாம்களில் அல்லலுறும் போது , தேர்தல் திருவிழாக்களில் பங்குபற்ற விரும்பப்போவதில்லை. படுவான்கரையிலுள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த வர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். மீதி இரு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 62,000 கும்பங்கள் இன்னமும் குடியேற்றப்படவில்லை.அவர்கள் கிரான் , செங்கலடி, ஏறாவூர்பற்று, வவுணதீவு, கரடியனாறு, ஆயித்தியமலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் கிராமங்கள் புலிகள் நடமாடக் கூடிய பிரதேசங்களாக இருப்பதாலேயே குடியேற படையினர் மறுக்கின்றனர்.
கருணா குழுவினர் தொடர்ந்தும் ஆயுதங்களுடன் நடமாடுவதும் மக்களை ஆயுதக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனைவதும் கிழக்கில் ஏகபோகத்தை நிலைநிறுத்த முற்படுவதும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலான விமர்சனங்களை எழுப்பியுள்ளன.ஏற்கனவே சர்வதேச சமூகத்தில் இருந்து பலத்த விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது.தற்�
�ோது முஸ்லிம் அமைப்புக்கள் முன்வைத்துள்ளன. முஸ்லிம்கள் சம்பந்தமான விவகாரங்களைக் கருணா குழுவினர் ஆயுதங்கள் மூலம் தீர்க்க முற்படுவதே காரணமாகக் கூறப்படுகின்றது. இவர்களை விட ஜே.வி.பி.உட்பட பேரினவாத சக்திகளும் ஆயுதங்களை களையும் படி நிர்ப்பந்தித்து வருகின்றன.அவர்களுக்கு கிழக்கின் உண்மையான நிலைவரம் எதுவும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை கிழக்கில் புலிகள் முழுமையாக வழித்தெடுத்து துடைத்தாயிற்று. இனி கருணா குழுவினரின் தேவை படையினருக்கோ அரசாங்கத்திற்கோ இல்லை. எனவே அவர்களின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்பது கருத்தாக உள்ளது. முன்னர் கருணா குழுவினரின் தேவை அவசியமாக இருந்த போது கிழக்கின் முதலமைச்சராக அவரை நியமிக்க வேண்டுமென கூறியவர்கள் இன்று முழுமையாக கைகழுவி விட முனைகின்றனர். கிழக்கு பிரபாகரனின் கையிலிருந்து கருணாவின் கரங்களுக்கு மாறுவதை அவர்கள் அறவே விரும்பவில்லை. மாறாக சிங்கள தரப்பின் கைகளுக்கு மாறவேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

ஆனால் படையினரைப் பொறுத்தவரை கருணா குழுவிடமிருந்து ஆயுதங்களைக் களைய விரும்புவர் எனக் கூறமுடியாது. புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முற்றுப் பெறாததானால் கருணா குழுவினரின் உதவி அவர்களுக்குத் தேவைப்படும்.இதனால் தமது கட்டுப்பாட்டின் கீழ் ஆயுதங்களுடன் செயற்படவே அவர்கள் அனுமதிப்பார்.

எனவே மொத்தத்தில் அரசின் தேர்தல் முயற்சிகள் கேலிக்கூத்தாகவே மாறப்போகிறது. சர்வதேச சமூகத்திற்கு வெள்ளைப் பூச்சு காட்டமுற்பட்டு மூக்குடைபடுவதற்கே சாத்தியங்களுண்டு.

பேரினவாதிகளின் வியூகம் நான் முன்னரே கூறியது போல கிழக்கினை சிங்கள மயமாக்குவதுதான். தற்போதுள்ள இராணுவ ஆதிக்கநிலையினை அவர்கள் முழுமையாகவே பயன்படுத்த முனைவர். இதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற துடுப்பு, அப்பிரதேசங்கள் பௌத்த வரலாற்றுடன் தொடர்புடைய பிரதேசங்கள் எனக் கூறி கைப்பற்றுவது தான். தீகவாபிலியிலும், சேருவலவிலும் திரியாயிலும் இவ்வாறு கூறியே தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய நிலங்களைக் கைப்பற்றியிருந்தனர் பொத்துவில் பிரதேசத்திலும் அண்மைக்காலமாக அக்கைப்பற்றல் தொடர்கின்றது. தற்போது தொப்பிகல கைப்பற்ற பட்ட பின்னர் அங்கு சென்ற பிக்குகளின் குழுவினர் அது பௌத்த பாரம்பரியத்தின் வரலாற்று இடங்கள், எனக் கூறியுள்ளனர். இனி அதனையும் தொல்பொருள் நிலங்களாகவோ புனிதப் பிரதேசங்களாகவோ பிரகடனப்படுத்தி கைப்பற்ற முயற்சிக்கலாம். சிங்களக் குடியேற்றங்களையும் உருவாக்க முனையலாம். கிழக்கினை இராணுவ இறுக்கத்திற்குள் வைத்திருப்பதற்கு குடியேற்றங்கள் அதிகளவிற்கு உதவுவதால் இராணுவத்தினரும் அதனை விரும்பக்கூடும்.

ஆனால், புலிகள் ஆயுத பலத்துடன் இருக்கும் வரை சிங்கள மக்கள் குடியேற முற்படுவர் எனக் கூற முடியாது. புலிகள் வளரத் தொடங்கியதன் பின்னர் பெரிய குடியேற்றங்கள் எதுவும் வட, கிழக்கில் நடைபெறவில்லை. ஜெயசிக்குறுவுக்கு எதிரான போரின் பின்னர் கென்ற்பாம், டொலர் பாம் குடியேற்றங்களிலிருந்த சிங்கள் மக்கள் வசதிகளுடன் கூடிய வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மணலாறு குடியேற்றவாசிகள் தற்போது புலிகளின் ஷெல் வீச்சு அச்சத்தில் வாழ்கின்றனர். பலர் வெளியேறியும் உள்ளனர். அரசாங்கம் அவர்களுக்கு சொந்தச் செலவில் பங்கர்களைக் கட்டிக் கொடுத்திருக்கின்றது. பதவியாக் குடியேற்றம், மொறவேவா குடியேற்றம் என்பனவும் அச்சுறுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. கந்தளாய்க் குடியேற்றமும் சேருவல குடியேற்றமும் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரக் குடியேற்றங்களும் மட்டுமே சிங்களப் பிரதேசங்களுடன் தொடர்புபட்டு இருப்பதனால் சற்று வலிமையாக உள்ளன.

திருமலை நகரில் சிறிமாபுர குடியேற்றம் படையினர் சுற்றிவரை இருப்பதனால் பாதுகாப்பாக இருப்பது போல தோற்றம் தருகிறது. ஆனால், அவர்கள் ஒருவகை சுற்றிவளைப்புக்குள்ளேயே உள்ளனர்.

எனவே, பேரினவாதிகளின் வியூகங்களும் நடைமுறையில் சாத்தியமாவது கடினம் என்றே கூறவேண்டும். இதற்கு அப்பால் குடியேற்ற முயற்சிகள் சர்வதேச சக்திகளில் இருந்து பாரிய எதிர்பார்ப்பை எதிர்நோக்கி இருப்பதோடு கிழக்கு தமிழ் மக்கள் புலிகளோடு நெருங்குவதற்கும் வாய்ப்புகளை வழங்கலாம். புலிகளின் பிரசன்னம் இல்லாமல் குடியேற்ற அச்சுறுத்தல்களை தமிழ் மக்களால் எதிர்கொள்ளவே முடியாது. இதனால் புலிகளின் பிரசன்னம் கிழக்கில் எப்போதும் தேவையாக இருக்கின்றது.

இறுதியான கேள்வி கிழக்கில் புலிகளின் வியூகங்கள் எவ்வாறு இருக்கப் போகின்றன என்பதாகும். இது விடயத்தில் புலிகளின் வியூகம் அவர்கள் வழமையாக கடைப்பிடிக்கின்ற ஒன்றுதான். இராணுவம் முன்னேறுகின்ற போது அவர்கள் இராணுவத்தை பரவலாகச் செய்துவிட்டு அவர்கள் பின்னகர்வர். தொடர்ந்து கிழக்கில் கெரில்லாப் போரை நடத்திக் கொண்டு வடக்கில் தமது செறிவைக் கூட்டி மரபுவழிப் போரில் ஈடுபடுவர். இவை இரண்டுக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் கிழக்கில் இராணுவத்தினர் பின்வாங்குவர். புலிகள் அவ்விடங்களைக் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தினுள் கொண்டு வருவர். இவையே முன்னர் நடந்தன. தற்போதும் இப்போக்குகளே தொடர்கின்றன. வடக்கின் மன்னார் பிரதேசங்களில் புலிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாது படையினர் தற்போது திணறிக் கொண்டிருக்கின்றனர். கிழக்கில் கூட தொப்பிகலயை கைப்பற்றுவதற்காக பல முகாம்களைப் படையினர் மூடியிருந்தனர். புலிகள் சிறுசிறு குழுக்களாக காடுகளில் நடமாடுகின்றனர். புலிகளின் உளவுப்பிரிவு கிழக்கு முழுவதும் நடமாடிக் கொண்டு இருக்கின்றது.

எனவே, அவர்களும் தங்களது வியூகத்தில் தொடர்ந்து நகர்ந்து செல்வதற்கே வாய்ப்புகள் உள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் நிலைதான் மிகவும் பரதாபகரமானது. கிழக்கின் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று அமைச்சர்களாகியுள்ள நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக வாயைத் திறக்கவே அவர்கள் அஞ்சுகின்றனர். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின் பேரம் பேசும் சக்தியும் பலவீனமாகியுள்ளது. கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் இருக்கும்வரை தான் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு செல்வாக்கு இருக்கும். தற்போது படையினரின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில் அவர்களும் கவனிப்பாரற்று உள்ளனர். பேரினவாத நிகழ்ச்சி நிரல் தங்களையும் விழுங்கிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்களின் நிலை மிகவும் சங்கடமானது. ஒன்றில் புலிகளின் வாய்க்குள் அகப்பட வேண்டும் அல்லது கருணா குழுவினரின் வாய்க்குள் அகப்பட வேண்டும். இவ்விரண்டிலும் இருந்து தப்பினால் பேரினவாதிகளின் வாய்க்குள் அகப்பட வேண்டும். தமிழ்த் தரப்புடன் இணைந்து அரசியலை செய்யவும் அவர்களது சமூக உருவாக்கம் அனுமதிப்பதில்லை. சிங்களத் தரப்புடன் இணைந்து அரசியல் செய்ய கிழக்கின் யதார்த்த சூழல் அனுமதிப்பதில்லை. மொத்தத்தில் திரிசங்கு நிலைக்கு உட்பட்ட சமூகமாக அது மாறிக் கொண்டு இருக்கிறது. அவர்களின் வியூகங்கள் எல்லாம் அரசாங்கத்தின் ஊடாக தமது நிலையினை வலுப்படுத்துவதுதான். ஆனால், அவை நகருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மீண்டும் போர் கிழக்கில் தொடங்கின் வாய்ப்புகள் வரலாம்.

மொத்தத்தில் படைத்தரப்பு, புலிகள், கருணா குழுவினர், முஸ்லிம்கள் என்போருடைய வியூகங்களின் போர்க்களமாக எதிர்காலத்தில் கிழக்கு மாறும் என்றே நான் நினைக்கின்றேன். இது ஏறத்தாழ தற்போதைய ஈராக்கை ஒத்த நிலையாகும். ஈராக்கில் சுமுக நிலையினை ஏற்படுத்த முடியாது என்பது எவ்வாறு யதார்த்த நிலையாக உள்ளதோ அதேபோல கிழக்கிலும் சுமுக நிலையினை ஏற்படுத்த முடியாது என்பதே யதார்த்தமாக உள்ளது. 


-சங்கரன் சிவலிங்கம்-
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..