|
கிழக்கு மாகாணத்தில் அன்றாடம் தொடரும் படுகொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளன. மனித உயிர்கள் என்ற எண்ணம் சற்றும் இன்றி ஈவிரக்கமற்ற வகையில் படுகொலை செய்யப்படுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது.
கடந்த வாரம் மட்டக்களப்பில் பத்திரிகை விநியோகத்தில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் கோவிலில் ஆலயப்பணிகளில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மற்றுமொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையாகக் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் என்பவற்றுக்கு அப்பால் சாதாரணமாக தங்கள் குடும்பத்தின் நிமித்தம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் இவ்வாறு கண்மூடித்தனமாகப் படுகொலை செய்யப்படுவது மிகவும் வேதனைக்குரியதாகும். இவர்களை நம்பி வாழ்வோர் மற்றும் மனைவி, பிள்ளைகள், குடும்பங்கள்யாவும் இன்று நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைமைக்கு இவ்வாறான படுகொலைகள் இட்டுச் செல்கின்றன. வெறுமனே கருத்து மோதல்கள், கொள்கை மாறுபாடுகள் என்பனவற்றுக்காக ஒருவரை ஒருவர் படுகொலை செய்யும் அளவுக்கு துணிவது மிகவும் விசனத்துக்குரியதாகும். தமிழ் இளைஞர்கள் முட்டிமோதி பலியாகட்டும் என்ற ரீதியில் வேடிக்கை பார்ப்பதையே இன்று பரவலாக அவதானிக்க முடிகின்றது, இதற்கு முடிவு கட்டும் வகையிலும் படுகொலைகள் மூலம் வீணான பாவத்துக்கு ஆளாகாமலும் இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதுவே நீதியும், தர்மமுமாகும். இவ்வாறு படுகொலைகளைத் தொடருவதன் மூலம் எவரும் எதனையும் சாதிக்க முடியாது என்ற யதார்த்தத்தையும் மறந்து போகக் கூடாது. அன்றாடம் கிழக்கு மாகாணத்தில் தொடரும் படுகொலைகள் மக்களை மிகவும் நிம்மதி இழக்கச் செய்துள்ளன. இதனால் மிகுந்த விரக்திக்கு மத்தியிலேயே அவர்கள் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏலவே இடம் பெற்ற யுத்தம் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து வந்த சுனாமிப் பேரலை காரணமாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்சி பெற முடியாத நிலையில் தொடர்ந்தும் பொருளாதார ரீதியில் மிகுந்த பின்னடைவுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய இளம் சந்ததியினரையே சார்ந்ததாகும். அவர்கள் அதனை விடுத்து மனிதனை மனிதன் வேட்டையாடும் கொடூர செயல்களில் இறங்குவார்களேயானால் இறுதியில் தமிழினத்துக்கு எந்த வித விமோசனமும் கிடைக்காமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ் இளைஞர்கள் தங்களுக்கிடையே போராடி மடியட்டும் என்பதில் பேரினவாதிகளும் அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயற்படும் ஒரு சில பேரினவாத ஊடகங்களும் மிகுந்த அக்கறையுடனும் உன்னிப்பாகவும் செயற்பட்டு வருகின்றன. அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தமிழ் இளைஞர்கள் இவ்வாறு படுகொலைகளில் ஈடுபட்டு வருவார்களேயானால் இறுதியில் தமிழினம் இந்த நாட்டின் அடிமைகளாவே வாழவேண்டிய சூழ்நிலைக்கே தள்ளப்படுவதாக இருக்கும். தமிழ் மக்களுக்கிடையே படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாக அதனை தட்டிக் கேட்பதற்கோ அன்றேல் தடுத்து நிறுத்துவதற்கோ ஆட்சிப் பீடங்கள் காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை என பலரும் குறைகூறுகின்றனர். "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்'' என்ற நிலைமைகளே தொடருகின்றன. இதனை நன்குணர்ந்தேனும் சம்பந்தப்பட்டவர்கள் படுöகாலைகளைக் கைவிடவும் மக்கள் நிம்மதியாக வாழவும் வழி செய்ய வேண்டும். தமது சொந்த நலன்களைக் கருத்திற் கொண்டே சிலர் இவ்வாறு இளம் வயதினரைத் தூண்டிவிட்டு அதன் மூலம் படுகொலைகளுக்குத் தூபமிடுகின்றனர். இளைஞர்கள் தங்கள் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு பழிவாங்கும் படலத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது இன்றியமையாதது. இவ்வாறான படுகொலைகளினால் இன்று எத்தனை குடும்பங்கள் தங்கள் உற்றார், உறவினர்களை இழந்து கண்ணீருக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன என்ற துயரத்தை அனைத்துத் தரப்பினரும் நிதானமாக உணர்ந்து பார்க்க முன்வருவார்களேயானால் நிச்சயம் கிழக்கில் அமைதி ஏற்படும் என்பது திண்ணம். virakesari
|