|
வடக்கு - கிழக்கில் பருவ மழை பொழியத் தொடங்கப்
போகிறது. கடும் மழைபெய்யும் பட்சத்தில் வடக்கில் பாரிய இராணுவ
நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. அத்துடன், கிழக்கில் பெரும்
பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதால் அங்கு ஆளணியை முடக்க வேண்டிய கட்டாய
நிலை படையினருக்கேற்பட்டுள்ளது.
பருவமழையும் ஆளணிப்
பற்றாக்குறையும் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள
முடியாததொரு சூழ்நிலையை அரசுக்கு தோற்றுவித்துள்ளது. இதனால் பருவமழை
முடியும் வரையும் ஆளணியைப் பெருக்கும் வரையும் காத்திருக்க வேண்டிய கட்டாய
நிலையேற்பட்டுள்ளது.
கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதால்
இனிமேல் அங்கு புலிகளின் ஊடுருவல்களை முழுமையாகத் தடுத்து விட வேண்டுமென
அரசு தீவிரம் காட்டுகிறது. கிழக்கில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை
சுமுகமாக மேற்கொள்வதாயின் அங்கு புலிகளின் பிரசன்னம் இருக்கக்
கூடாதென்பதில் அரசு மிகுந்த அக்கறை செலுத்துகிறது.
கிழக்கில்
புலிகள் ஊடுருவி கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களைத் தொடுத்து
படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினால் அங்கு சிவில் நிர்வாகம்
சீர்குலைந்து அரசின் பிடி தளர்ந்துவிடுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால�
,
வடக்கில் இடைக்கிடையே தாக்குதல்களை நடத்தி புலிகளின் கவனத்தை அங்கு திசை
திருப்புவதுடன் கிழக்கில் அவர்களது நடவடிக்கைகளை எப்படியாவது முற்றாக
ஒழித்துவிட வேண்டுமென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.
கிழக்கில்
இவ்வாறானதொரு நிலைமையிருக்கையில், வடக்கில் புதிய யுத்தமுனைகளைத்
திறப்பதற்காக படையினர் காத்திருக்கின்றனர். வடபகுதிச் சமரென்பது வெறுமனே
தரைப் படையினருடன் மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்காது. கடற்படையும்
கடற்புலிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கடற்படைக்குச் சமனாக
இன்று கடற்புலிகளுமுள்ளதால் வடபகுதி யுத்தம் மிகக் கடுமையானதாயிருக்கும்.
இரு தரப்பினதும் முப்படைகளும் இந்தச் சமரில் இறங்கவுள்ளதால் இந்தச் சமரை
குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அத்துடன், புலிகள் வசமிருந்து கிழக்கை
முற்றாகக் கைப்பற்றிவிட்டதாக அரசு கூறுவதால் வடக்கை முழுமையாகத் தக்க
வைக்க வேண்டியநிலை புலிகளுக்குள்ளது.
வடக்கு - கிழக்கில் புலிகள்
வசம் மிகப்பெரும் பகுதியிருந்தது. அப்போது வடக்கிலும் கிழக்கிலும்
கடற்புலிகளின் தளங்களிருந்தன. கிழக்கிலும் கடற்புலிகளின் ஆதிக்கம்
வலுவாயிருந்தது. ஆனால் இன்று, கிழக்கு மாகாணம் படையினரின் வசமானதையடுத்து
கிழக்கில் கடற்புலித் தளங்களில்லையென்பதால் கடற்புலிகளின் செயற்பாட்டையும்
வடக்குடன் மட்டுப்படுத்திவிட கடற்படை முனைகிறது.
கிழக்கை
முழுமையாக புலிகள் வசமிருந்து மீட்டுவிட்டதாக அரசு கூறும்போது, புலிகள்
வசமிருந்த தரைப் பகுதிகளை படையினர் முழுமையாகக் கைப்பற்றிவிட்டனரென்பதே
அர்த்தம். இதன் மூலம் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு
பகுதியுமில்லையென்பதுதான் அர்த்தம். இதனால் கிழக்குக் கடலில் புலிகளின்
ஆதிக்கத்தை ஒழித்துவிட்டதாக அரசு கருதுகிறது.
திருகோணமலையில்
மூதூர் கிழக்கில் சம்பூர் பகுதி புலிகள் வசமிருந்த போது அங்கு கடற்புலிகள்
மிகப் பெரும் தளமொன்றை அமைத்திருந்தனர். சம்பூரை அண்டிய பகுதிகளிலும்
கடற்புலிகளின் சிறிய தளங்களுமிருந்தன. இது கடற்படையினருக்கு மிகப் பெரும்
அச்சுறுத்தலாயிருந்தது.
சம்பூரிலிருந்த கடற்புலித்தளமும்
ஆட்லறித் தளமும் திருகோணமலைத் துறைமுகத்தையும் கிழக்கு பிராந்திய
கடற்படைத் தளத்தையும் கட்டுப்படுத்தி வந்தன. சம்பூரிலிருந்து புலிகள்
திருமலைத் துறைமுகம் மீதும் கடற்படைத் தளம் மீதும் ஆட்லறி ஷெல்
தாக்குதலையும் நடத்தி அவற்றின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி வந்தனர்.
யாழ்.
குடாநாடு இன்று தரை வழித் தொடர்பின்றி கடல் வழி மற்றும் வான் வழித்
தொடர்புடன் மட்டுமேயுள்ளது. எனினும், பூநகரி மற்றும் அதனையண்டிய
பகுதிகளிலிருந்து புலிகள் மேற்கொள்ளும் நீண்ட தூர ஷெல் தாக்குதல்கள் பலாலி
விமானத் தளம், இராணுவத் தளம் மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளங்களைத்
தாக்கும் போது கொழும்புக்கும் குடாநாட்டுக்குமிடையிலான வான்வழித்
தொடர்பும் துண்டிக்கப்படுகிறது.
ஆனால், புலிகளின் இந்த நீண்டதூர
ஷெல் தாக்குதலையும் மீறி திருமலைக்கும் குடாநாட்டுக்குமிடையில் கடல் வழித்
தொடர்பைப் பேணுவதில் கடற்படையினர் மிகக் கவனமாயுள்ளதுடன் தங்கள் தாக்குதல்
வலுவையும் தற்காப்பு வலுவையும் அதிகரித்து வருகின்றனர்.
யாழ்.
குடாநாடு மிகவும் சிறியதொரு நிலப்பரப்பைக் கொண்டது. அதன் பெரும் பகுதி
இன்று படையினர் வசமுள்ளது. 1995 ஆம் ஆண்டு இறுதியில் குடாநாட்டைக்
கைப்பற்றிய படையினர் சுமார் 12 வருடங்களாக, தரை வழித் தொடர்பற்ற
பிரதேசமொன்றைத் தக்க வைத்திருக்கிறார்களென்றால் அது, விமானப் படையினரின்
ஆற்றலைவிட கடற்படையினரின் ஆற்றலின் மூலமே சாத்தியப்படுகிறது.
ஏனெனில்,
இலங்கை விமானப் படை இன்றும் வலுவற்றதொன்றே. வெறுமனே குண்டு வீச்சுக்களை
நடத்துவதற்குரிய தொன்றாகவே இருக்கிறதே தவிர, ஈழப் போரில் விமானப் படையால்
காத்திரமான பங்களிப்பெதனையும் செய்ய முடியவில்லை. புலிகளின் விமான
எதிர்ப்பு படைப்பிரிவின் பலத்தை பொறுத்தே இலங்கை விமானப் படையின்
பலமுள்ளது.
வன்னியில் குண்டு வீச்சு விமானங்கள் தொடர்ச்சியாகத்
தாக்குதல்களை நடத்தி வருகின்றன. எனினும் கடந்த வருடத்திலிருந்து இன்று வரை
ஒன்று அல்லது இரண்டு போர் விமானங்களையே புலிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
புலிகளின் விமான எதிர்ப்புப் படையணி வலுவாயிருந்து குண்டு வீச்சு
விமானங்கள் பல சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால் இன்று விமானப் படை
முழுமையாகச் செயலிழந்திருக்கும்.
ஆனாலும் விமானப் படையால்
வன்னியில் புலிகளின் இலக்குகளைத் தாக்க முடியவில்லை. எழுந்தமானமாகவே
தினமும் அங்கு மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல்கள்
தொடுக்கப்படுகின்றன. இன்று வரை விமானப் படையினர், இலக்குகள் மீது
துல்லியமாகத் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்களில்லை.
கடற்சமரிலும்
கூட விமானப்படையினரால் கடற்படையினருக்கு பெரும் உதவிகளை வழங்க
முடியவில்லை. கடற்சமர் நடைபெறும் போது குண்டு வீச்சு விமானங்கள்
தாக்குதல்களைத் தொடுத்தாலும் அது கடற்புலிகளின் கலங்களுக்கு பாதிப்புகளை
ஏற்படுத்தவில்லை. இதனால் கடற் புலிகளைச் சமாளிக்க கடற்படையினர் தங்கள்
ஆயுதவலுவை அதிகரித்து வருகின்றனர்.
வடமராட்சி கிழக்கில் கடந்த
மாத முற்பகுதியில் நடைபெற்ற கடற்சமரிலும் கடந்த திங்கட்கிழமை புல்மோட்டை
கடற்பரப்பில் நடைபெற்ற கடற்சமரிலும் கடற்படையினரின் கை ஓங்கியிருந்ததாகக்
கூறப்படுகிறது. வடமராட்சி கிழக்கு கடற்சமரில் புலிகளின் அதிவேக தாக்குதல்
படகொன்றை கைப்பற்றிய கடற்படையினர் புலிகளுக்கு பலத்த இழப்பை
ஏற்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர்.
இதேபோல் கடந்த
திங்கட்கிழமை புல்மோட்டை கடற்பரப்பில் இரவு முதல் அதிகாலை வரை நடைபெற்ற
நீண்ட நேரக் கடற்சமரில் கடற்புலிகளின் இரு முக்கிய தளபதிகள்
கொல்லப்பட்டனர். கடற்புலிகளின் சாள்ஸ் படையணித் தளபதி லெப்.கேணல்
தியாகனும் அந்தப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் கன்னியத்தம்பியும்
கொல்லப்பட்டனர். சாதாரணமானதொரு கடற்சமரில் கடற்புலிகள் இரு முக்கிய
தளபதிகளை இழந்தமை அவர்களுக்கு பெரும் பின்னடைவாகும்.
கிழக்கில்
தொப்பிகல பகுதியிலிருந்து தப்பிவரும் புலிகளை மீட்டு வன்னிக்கு அழைத்துச்
செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளே கடற்படையினரின் இந்தத்
தாக்குதலுக்கிலக்கானதாக கடற்படையினர் முதலில் கூறியிருந்தாலும்;
கிழக்கிலிருந்து வருபவர்களை மீட்பதுதான் இவர்களது நோக்கமென்றால் இவ்விரு
தளபதிகளும் அந்தப் படகுகளில் வந்திருக்கமாட்டார்களெனவும், எனவே, அன்று
கடற்புலிகளின் நோக்கம் வேறாக இருந்திருக்க வேண்டுமெனவும் கூறுகின்றனர்.
வடக்கிலும்
கிழக்கிலும் அடுத்தடுத்து நடைபெற்ற இரு கடற்சமர்களிலும் கடற்படையினரின்
கையே ஓங்கியிருந்ததாகவும் இந்தச் சமர்கள் புலிகளுக்கு பெரும்
பின்னடைவெனவும் படைத்தரப்பு கூறுகிறது. கடந்த பல வருடங்களாக வடக்கு -
கிழக்கு கடற்பரப்பில் கடற்புலிகளிடம் பலத்த அடிவாங்கிய கடற்படையினர்
தற்போது தங்கள் கை ஓங்கியிருப்பதாகக் கூறுகின்றனர்.
மேற்படி இரு
சமரிலும் புலிகளுக்கேற்பட்ட இழப்புகள் அவ்வாறு எண்ணத்தோன்றுவதாகவேயுள்ளது.
பல அதிவேக டோரா பீரங்கிப் படகுகளுடன் செல்லும் கடற்படைத் தொடரணிகள்
கடற்புலிகளின் தாக்குதல்களுக்கிலக்காகி பலத்த சேதங்களை எதிர்கொண்டு வந்த
நிலையில் கடந்த இரு கடற்சமர்களிலும் கடற்புலிகளுக்கு சற்றுப் பின்னடைவுகள்
ஏற்படக் காரணமென்ன?
டோராக்கள் தகர்க்கப்படுவதைத் தடுக்க அவற்றில்
பொருத்தப்பட்டிருக்கும் பீரங்கிகளின் வலு அதிகரிக்கப்பட்டுள்ளதா என்ற
கேள்வி எழுகிறது. இதுவரை காலமும் டோராக்களின் பீரங்கி வலுவை விட
கடற்புலிப் படகுகளின் பீரங்கி வலுக்கள் சற்று அதிகரித்திருந்தன.
டோராவுக்குச் சமனாக கடற்புலிகளும் 20 மில்லி மீற்றர் மற்றும் 23 மில்லி
மீற்றர் பீரங்கிகளை தங்கள் படகுகளில் பொருத்தியிருந்தனர். அத்துடன்,
டோராக்களை விட கடற்புலிகளின் படகுகள் வேகம் கூடியவைகளாயிருந்தன.
டோராக்களின்
இந்தப் பீரங்கிகள் சுமார் 2000 மீற்றர் தூர தாக்குதல் வீச்சைக் கொண்டவை.
கடற்புலிகளின் தாக்குதல்களை சமாளித்து அவர்களது தற்கொலைப் படகுகளை அழித்து
டோராக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் டோராக்களில் 30 மில்லிமீற்றர்
பீரங்கிகளைப் பொருத்த வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்தப்
பீரங்கிகள் 3000 மீற்றர் தூர தாக்குதல் வீச்சைக் கொண்டவையென்பதுடன் இவற்றை
(30 மி.மீ பீரங்கி) புலிகளால் கறுப்புச் சந்தையில் கொள்வனவு செய்ய
முடியாதென்பதும் கடற்படையினருக்கு மிகவும் சாதகமான விடயமாகும். இதன் மூலம்
கடற்புலிகளை இலகுவாகச் சமாளித்துவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.
முன்னைய
அரசுகள் இவ்விடயத்தில் பெரிதும் அக்கறை செலுத்தாத போதும் தற்போதைய அரசு
இதில் தீவிர அக்கறை காட்டிவந்தது. கடற்புலிகளின் பலத்திற்குச் சமனானதாக
கடற் படையையும் மாற்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், மிகப் பெரிய கடற்சமரொன்று நடைபெறும்போது கடற் புலிகள் எப்படி பல
சிறிய ரகப் படகுகளையும் பயன்படுத்தி அந்தப் படகுகளுடன் சேர்த்து தற்கொலைத்
தாக்குதல் படகுகளையும் அனுப்பி டோராக்களைத் தாக்கி அழித்தார்களோ அதுபோன்ற
யுக்தியை பயன்படுத்த கடற்படையினரும் முயல்கின்றனர்.
டோராப்
படகுகளுடன் பல சிறிய படகுகளும் தற்போது சமரில் ஈடுபட்டு கடற்புலிகளின்
நோக்கத்தை நிறைவேறவிடாது தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்
மூலம் கடற்படையினரின் கையோங்கி வட பகுதிக் கடலில் அவர்கள் ஆதிக்கம்
செலுத்தும் நிலையேற்பட்டால் வடபகுதிச் சமரில் புலிகளை பலவீனமடையச் செய்ய
முடியுமென நம்புகின்றனர்.
ஆனால், கடற்படையினரின் யுக்தியை
கடற்புலிகளும் நன்கறிவர். கடற் சமரில் தங்கள் தாக்குதல் வியூகத்தை
மாற்றியமைப்பதுடன் தங்களது ஆயுத பலத்தையும் அதிகரிப்பதென்பது சாதாரண
விடயம். பாரிய படை நகர்வுகளின்போது தங்கள் உத்திகளை மாற்றி தந்திரமாகச்
சமரிடும் புலிகளுக்கு இது சாதாரணமானதொரு விடயம்.
வடக்கு, கிழக்கு
கடற்பரப்பில் தங்கள் ஆதிக்கம் குறைவதை புலிகள் ஒரு போதும்
அனுமதிக்கமாட்டார்கள். ஒரு சில மோதல்களில் ஏற்படும் பின்னடைவுகளை நிரந்தர
பின்னடைவாகக் கருதக் கூடாதென்பதை அவர்கள் அடுத்து வரும் கடற்சமர்களில்
நிரூபிப்பர். அதற்கேற்ப அவர்களது ஆயுத வலுவும் தந்திரங்களும் அமையும்.
இதனால் அடுத்த கடற்சமர் இரு தரப்புக்குமிடையே மிகப்பெரும்
சவாலாயிருக்குமென்பதில் ஐயமில்லை.
-தினக்குரல்
-விதுரன்-
|