|
|
|
புலிகளின் திடீர் யாழ். தாக்குதலின் எதிர்விளைவுகள் என்ன? |
|
|
|
Saturday, 25 August 2007 |
|
யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் பலாலி உள்ளிட்ட 3 பிரதான தளங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியிருக்கும் திடீர் எறிகணைத் தாக்குதல்களானது களத்தில் இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதை விவரிக்கிறது இந்த ஆய்வு.
யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்திருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் அனைவருக்குமான கட்டளை மையமாகப் பலாலியும் வழங்கல் மையமாக பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகியனவும் இருக்கின்றன.
அண்மையில்தான் சிறிலங்கா இராணுவத்தினருடைய கடற்படைத் தளமாக மயிலிட்டி மாற்றப்பட்டு முதன்மையான வழங்கல் துறைமுகமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் காங்கேசன்துறையும் பலாலியும் தான் யாழ். குடாநாட்டில் ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு முக்கியமான தளங்களாக இருந்தன.
யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் இதயம் என்று வர்ணிக்கப்படுகின்ற அல்லது இதயம் என்று கருதத்தக்க வகையிலான இம் மூன்று தளங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணைகள் கடந்த செவ்வாய்க்கிழமை வீழ்ந்து வெடித்துள்ளன.
இந்த மூன்று தளங்களும் இல்லை என்றால் யாழ். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமித்து நிற்க முடியாது என்பதே யதார்த்தமானதாகும்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் யாழ். குடாநாட்டின் மீதான நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். அப்போது யாழிலிருந்து சிறிலங்கா இராணுவம் பின்வாங்கியாக என்ற நிலைப்பாட்டை சிறிலங்காவின் இராணுவத் தளபதிகளும் அரச தலைவராக இருந்த சந்திரிகாவும் மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
இதற்கு அடிப்படையாக அமைந்தது அப்போது காங்கேசன்துறை மற்றும் பலாலி தளங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல்களும்தான். புலிகளின் அந்த தாக்குதலின் போது பலாலி வான் படைத்தளத்தின் ஓடுபாதை சேதமடைந்து வானூர்திகள் ஏறி, இறங்குவதில் நெருக்கடி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்துதான் இனிமேலும் யாழ். குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தக்கவைக்க முடியாது என்று சிறிலங்கா அரச தலைவராக இருந்த சந்திரிகா முடிவு செய்து கடற்பரப்பினூடாக இராணுவத்தினரை அழைத்துச் செல்ல இந்திய கடற்படையின் கப்பல்களுடைய துணையை நாடியிருந்தார்.
தற்போதும் பலாலி, காங்கேசன்துறை ஆகியனதான் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பிரதான தளமாக இருந்து வருகின்றன. யாழ். குடாவில் ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு காங்கேசன்துறை வழியாகவே வழங்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கப்பல்கள் மூலம் எடுத்து வருகின்ற ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் இராணுவத்தினருக்கான தளபாடங்கள் ஆகியன அனைத்துமே காங்கேசன்துறைக்குத் தான் வந்து சேர்கின்றன.
அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற மயிலிட்டித் துறைமுகத்திற்கும் இத்தகைய பொருட்கள் வந்து சேர்கின்றன. ஆக, இந்தத் துறைமுகங்கள் தொடர்ந்து பேணப்பட வேண்டும். அப்படி பேணப்படுகின்ற போது தான் யாழில் ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தினருக்கான வழங்கல் உறுதியாக இருக்கும்.
பலாலியைப் பொறுத்த வரையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளை மையமாக இருக்கின்றது. அங்கிருந்துதான் யாழ். குடாநாட்டின் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் இராணுவ அதிகாரிகள் கட்டுப்படுத்துகின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் எறிகணைச் செறிவீச்சின் விளிம்பில் அது இருக்கின்ற காரணத்தால் அதனை அவர்கள் தொடர்ந்து படைக் கட்டளையகமாகப் பேணலாம் என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த வான்படை படைத்தளம் என்பது காயமடைகின்ற சிறிலங்கா இராணுவத்தினரைக் காப்பாற்றும் ஒரு தளமாகவும் இயங்கி வருகிறது. காயமடைகின்ற இராணுவத்தினரை கொழும்புக்குக் கொண்டு செல்கின்ற செயற்பாடுகளும் பலாலி ஊடாகத்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிறிலங்கா இராணுவத்தினருக்கான இராணுவ மருத்துவமனையும் அங்குதான் செயற்படுகிறது.
இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரதான தளங்கள் மீதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருக்கின்றன.
இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபோது யாழில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தினர் கடுமையான அளவிலே பதற்றமடைந்தும் நிலைகுலைந்தும் போயிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனை வெளிப்படுத்தும் வகையாக அவர்களது நடவடிக்கைகளும் அமைந்தன.
புலிகளின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்த உடனேயே இரண்டு பல்குழல் எறிகணைச் செலுத்திகளை பலாலி வீதி வழியாக யாழ்ப்பாண நகரத்திற்கு நகர்த்தி முற்றவெளிக்குக் கொண்டு சென்று அங்கிருந்து புலிகளின் நிலைகளை நோக்கித் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இந்த பல்குழல் எறிகணைச் செலுத்திகளை ஒரே இடத்தில் வைத்து தாக்குதலை நடத்தாமல் ஒரு தாக்குதல் நடந்து முடிந்தவுடன் அவை அங்கிருந்து நகர்த்தப்பட்டு வெவ்வேறான இடங்களில் வைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முன்னைய ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் போதும் விடுதலைப் புலிகள் இத்தகைய தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா இராணுவத்தினரின் உளவுறனையும் அவர்களுடைய கட்டளை மையத்தையும் சிதைத்திருந்தமையையும் நாம் இங்கே சுட்டிக்காட்டலாம்.
ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்தின் ஜெயசிக்குறு, ரிவிபல மற்றும் வோட்டர்செட் நடவடிக்கைகள் மூலம் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், அம்பகாமம், மாங்குளம், வன்னிவிளாங்குளம், பாலைப்பாணி, முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியமடு, பள்ளமடு, பாப்பாமோட்டை வரை மிகப்பெரும் தொடர் முன்னரண்களை சிறிலங்கா இராணுவம் வைத்திருந்தது.
ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் தொடக்கமானது விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதல் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கனகராயன்குளத்தில்தான் 56 ஆவது டிவிசன் என்கின்ற முன்னரண் பகுதிகளை நிர்வகிக்கும் படைத்தளம் இருந்தது.
கனகராயன்குளம் பாடசாலையையும் விவசாயத்திணைக்கள அலுவலகத்தையும் மையமாக வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்திருந்த இந்த 56 ஆவது டிவிசன் தலைமையகத்தில் தான் முதன்மை வழங்கல் மையமும் இருந்தது. மேலும் கவசப் படைப்பிரிவின் முதன்மைத் திருத்த மற்றும் களஞ்சியம் இருந்தது. முதன்மை இராணுவ மருத்துவமனை இருந்தது. இராணுவ கட்டளை அதிகாரியினுடைய தலைமையகமும் அமைக்கப்பட்டிருந்தது. இதன் கீழ் உபதளமாக ஒட்டுசுட்டான் இருந்தது.
இந்த கட்டளை மையம் மீது விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தினர்.
அப்போது
56 ஆவது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் காமினி குணசேகர
55 ஆவது டிவிசன் தளபதி ரிம்போறன் ஆகியோர்
அச்சம் காரணமாகப் பதுங்குகுழி ஒன்றுக்குள் சென்று பதுங்கி விட்டனர்.
விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல் ஓய்ந்த போது அந்தத் தளபதிகள் பதுங்குகுழிகளை விட்டு வெளியே வந்து அங்கிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் எவருக்குமே தெரியாமல் கவச வாகனங்கள் மூலம் வவுனியாவுக்குத் தப்பியோடி விட்டனர்.
கட்டளைகளை வழங்க வேண்டிய தளபதிகள் இல்லாத நிலையில்தான் சிறிலங்கா இராணுவத்தினருக்கு மோசமான சீர்குலைவு அங்கு ஏற்பட்டதாக இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
போர்க் களத்திலே நிற்கின்ற ஒரு இராணுவத்தினரின் கட்டளை மையம் சிதைந்து களமுனைகளில் நிற்கும் இராணுவத்தினருக்கு உரிய கட்டளைகள் பிறப்பிக்க இயலாது போகுமாயின் அந்த இராணுவத்தினருக்கு அவலமான தோல்விதான் நேரிடும் என்பதற்கு சிறிலங்கா இராணுவம்தான் நல்லதொரு உதாரணமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
நான்காம் ஈழப்போர் காலத்தில் புலிகள் நடத்தியிருக்கும் இத்தகைய "உளவியல் தாக்குதல்" நடவடிக்கையின் எதிர்விளைவுகளை களங்கள் வெளிப்படுத்தத்தான் போகின்றன.
|
|