|
என் தாயே...என் தாயே... ஏன் என்னைக் கைது செய்தாய்...?பிரித்தானியாவிலிருந்து தாயகம் வந்த ஒரு தமிழனின் சோகக் கதை இலங்கையின் தலையிலுள்ள பல தீவுகளில் ஒரு தீவை பிறப்பிடமாக கொண்டவன் நான். அத் தீவின் பெயர் நாரந்தனை. இதுவே, இன்று என் சோகத்திற்கு காரணமாயிற்று. 10 வயது வரை எனது ஆரம்பக் கல்வியை நாரந்தனை றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் கற்றேன். அதன் பின்னர் எனது மேற்படிப்பிற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். அங்கே புனித பத்திரிசியார் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றேன்.
அக் காலத்தில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு தளைத்தோங்கியிருந்தது. அவர்களின் விளையாட்டுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன? என்னையும் அவர்கள் அதி விசேடமாக கவனித்துக் கொண்டனர். அவர்களது கவனிப்பு 03 நாட்கள் தொடர்ந்தது. அக் கவனிப்பு தந்த வேதனையால் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, அந்நிய நாட்டுக்கு குடியேறும் நிலை ஏற்பட்டது. பிரித்தானிய நாட்டில் நான் நல் வாழ்வு பெற இந்திய இராணுவத்தின் அதி விசேட கவனிப்பே அடித்தளமாய் இருந்தது. அங்கு குடியுரிமை பெற்று 18 வருடங்களைக் கழித்து விட்டேன். நான் பல தடவை என் தாயக பூமிக்கு வந்து சென்றிருந்தாலும் இத் தடவை நான் பெற்ற அபூர்வமான அனுபவத்தைப்போல் அடைந்ததில்லை. இலங்கையில் கடல்கோள் தாக்கிய வேளை என்னுள் ஏற்பட்ட வலியை விட பல மடங்கு வலியை இம் முறை அனுபவம் எனக்குத் தந்தது. நான் இம் முறை இலங்கைக்குச் சென்றது புற்று நோயால் அதிகளவு பாதிப்படைந்து அவஸ்தைப்படும் என் அக்காவைப் பார்க்கவே. அதன் பின் அங்கிருந்து என் மாமியார் மற்றும் என் மனைவியின் உறவினர்களைக் காணத் திருகோணமலைக்கு ரயில் மூலம் சென்றேன். அப்பயணம் தான் எனக்கு விபரீதப் பயணமாயும் அமைந்தது. நித்திரை விட்டு எழுந்து பார்த்தேன் அழகிய இயற்கைக் காட்சிகள் கண்ணுக்கு விருந்தாய் இருந்தன. எனது சிறிய வீடியோகமரா மூலம் யன்னலினூடாக அவற்றை படம் பிடித்து வந்தேன். அப்போது நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது கூட எனக்குத் தெரியாது. ஏனெனில் எனக்கு ரயில் பயணம் அதுவும் திருமலைக்கு புதிது. இயற்கைக் காட்சிகள் பதிந்த என் வீடியோகமராவில் இந்திய எண்ணெய்க் கிணறுகளும் பூவோடு சேர்ந்த நாராய் பதிந்து விட்டன. இதனை அவதானித்த விமானப் படை சந்தேகத்தின் பெயரில் என்னை தலைமையகத்திற்கு அழைத்தது. இதுதான் விதியின் செயலா? என்மேல் குற்றமில்லை என்று அறிந்தும் என் பிறப்பிடத்தின் பெயரால் கைதியானேன். என்னைக் காணாது என் உறவினர்கள் பரிதவிக்க அதிர்ஷ்டவசமாக நான் செய்த தொலைபேசி அழைப்பு அவர்கள் என்னைக் காண காரணமாயிற்று. அவர்களின் உதவியினால் அங்கிருந்து விடுதலையாகி திருகோணமலைக்கு வந்தேன். அங்கு சிறைச்சாலை என்னை வரவேற்கக் காத்திருந்தது. எதிர் பார்க்காத ஒரு நிகழ்வு என் கண் முன்னே.... என் உறவுகள் கண்களிலிருந்து கண்ணீர். அதைப் பார்க்க முடியாமல் சிறைச்சாலையினுள் சென்றேன். புதுவித அனுபவம். 75 பேருக்கு ஒரு அறை. அதில் 76 ஆவது ஆளாக நான் இணைந்தேன். அவர்கள் என்னை நல்ல முறையில் வரவேற்றனர். எனக்கு கொடுக்கப்பட்டிருந்த இழிவான வேலைகளை என் நிலையறிந்து அவர்களில் ஒருவன் செய்தான். மற்றவர்களை விட அவன் என் கண்ணுக்கு நல்லவனாய் தெரிந்தான். எனக்கு உலகில் பிடிக்காதது பீடி மணம். ஆனால் அது அங்கிருந்தவர்களில் அனேகர்களுக்கு பிடித்திருந்தது. எல்லாமே விதியின் விளையாட்டு என எண்ணி சகித்துக் கொண்டேன். எனக்கேற்பட்ட இந்த நிலையின் வேதனையால் ஏற்கனவே சீனக்குடாவில் வைத்து எனக்கு (Blood Pressure) இரத்தக் கொதிப்பு ஏற்பட்டது. அந்த நோயின் வேதனையோடு என் மன வேதனையும் அதிகரித்தன. இரவு முழுவதும் தூக்கமில்லை, கொசுக்கடி வேறு. விதியின் விளையாட்டினை புரிந்து கொள்ள முடியவில்லை. தூங்காமல் இருந்ததால் விடியலும் எனக்கு விடியலாக அமையவில்லை. ஒரு கைதியாக கையில் விலங்குடன் என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். கையில் விலங்குடன் நான் நீதிமன்றத்திற்கு வந்திறங்கிய போது என் உறவுகள் துக்கம் தாங்காமல் அழுதனர். என் வேதனையை வெளிக் காட்டி அவர்களின் வேதனையைக் கூட்ட என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே உதட்டில் புன்னகை பூத்தவாறு உட் சென்றேன். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டேன். வீடு சென்று நிம்மதியுடன் தூங்கினேன். என்ன தான் இருந்தாலும் எனது நிம்மதி நிலைக்கவில்லை. அன்றைய பத்திரிகையில் வெளியான செய்தியே அதற்குக் காரணம். `எண்ணெய்த் தாங்கியை படம் பிடித்த தமிழர் கைது' என்று வெளியான செய்தியே என் நிம்மதி சீர் குலையக் காரணம். என் மனைவிக்காக நான் பிடித்த படங்கள் வினையாகி விட்டன. தமிழ் மண்ணில் பிறந்ததைத் தவிர எக் குற்றமும் செய்யாத என்னை கைதியாக்கிப் பார்த்த இந்த நாட்டின் மீது தான் என் கோபம். தீர விசாரிக்காமல் பத்திரிகையில் செய்தி தெரிவித்த நிருபர்கள் மேல் தான் என் கோபம். கோபமிருந்தும் அதை வெளிக் காட்டாமல் பிரித்தானியாவுக்கு வந்து விட்டேன். நான் பிறந்த என் தாய் நாடே என்னைக் கைதியாக்கிப் பார்த்தது என்பதை எண்ணும் பொழுது தான் நெருஞ்சி முட்கள் என் நெஞ்சத்தை தைக்கின்றன. (கைது செய்யப்பட்டவர் தினக்குரலுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலிருந்து)
தினக்குரல்
|