பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow ஜேர்மனிய தொலைக்காட்சி தெரிவித்தது என்ன?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஜேர்மனிய தொலைக்காட்சி தெரிவித்தது என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 14 September 2007

ஜேர்மனிய தொலைக்காட்சியான 3Sat இல் கடந்த வியாழக்கிழமை (06.09.07) இரவு 21.00 முதல் 22.00 மணிவரை "Kultur Zeit" நிகழ்ச்சியில் இலங்கை பற்றிய விவரணத்தை ஒளிபரப்பியது.

இலங்கை பல்லின மக்களைக்கொண்ட ஒரு நாடு. தெற்கில் சிங்களவர்களும் வடக்கு - கிழக்கில் தமிழர்- முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். ஆனால் தெற்கில் உள்ள அழகிய கடற்கரைகள் இலங்கையில் அமைதி நிலவவில்லை என்ற உண்மையை மறுதலிக்கின்றன.

1983 இலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரதேசங்களுக்கான விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். தமிழ்ச் சிறுபான்மையினர், சிங்களப் பெரும்பான்மையின அரசால் அடக்குமுறைக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகியிருப்பதாக உணர்கிறது என்ற அறிமுகத்துடன் அந்த விவரண நிகழ்ச்சி தொடங்குகிறது.

அந்த நாட்டில் அச்சமும் பதற்றமும் தென்படுகின்றது. 70,000 உயிர்களைக் காவுகொண்ட நிலையில் 2002 இல் அனைத்துலக அழுத்தத்தினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

ஆனால் 2006 இல் மீண்டும் போர் தொடங்கியது.

இரு தரப்பும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்காமைக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில், தமிழரோ சிங்களவர்களோ பயங்கரவாதிகள் என எளிதில் முத்திரை குத்தப்படுவது மட்டுமன்றி அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் எனவும் பார்க்கப்படுகிறார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குரல் உயர்த்துபவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்றார்.

துணைப் படைகளின் நடவடிக்கைகளும் அந்த விவரணத்தில் விவரிக்கப்பட்டன.

அடையாளம் தெரியாதோரினால் உதவி நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பல துணை இராணுவக் குழுக்கள் செயற்படுகின்றன. அரசாங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் ஆதரவு இல்லாமல் எப்படி அவர்கள் அங்கு இயங்கமுடியும் என்பது அப்பெண்மணி எழுப்பிய கேள்வி. அத்தோடு எங்கே போய் அவர்கள் முறைப்பாடு செய்வது? அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மனித உரிமை அமைப்பிடம் சென்று முறையிட்டால் முறையீடு செய்பவரின் பெயர் விபரங்களை அவர்கள் இராணுவத்திடம் தர அது மீண்டும் அதே துணை இராணுவக் குழுவினரின் கைகளுக்குச் சென்றடைகிறது. சிறிலங்கா இராணுவமும் துணை இராணுவக் குழுக்களும் கைகோர்த்து "குப்பை வேலை" செய்வது வெளிப்படையான இரகசியம்.

பெண்கள், சிறார்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. 300,000 பேர் தமிழ்ப் பிரதேசங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளார்கள்.

UNO கணக்கின்படி அண்மைக்காலங்களில் 5,000 மனித உயிர்கள் இருதரப்பிலும் பலியாகியுள்ளன. 1,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

அகதிகளின் துயரம் சொல்லவொணாது. அவர்களில் பலர் முதல் முறையாக இடம்பெயர்ந்தவர்கள் அல்ல. கடவுள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் அகதி ஒருவர்.

இருதரப்பும் போரில் ஈடுபடும்போது அதற்கான விலைகளைக் கொடுப்பவர்கள் பொதுமக்களே. அதிலும் பெண்கள் மற்றும் சிறார்கள்தான் விலை கொடுக்கின்றனர்.

திருகோணமலை இயற்கைத் துறைமுகம் தென்னாசியாவின் முக்கிய கேந்திரம் எனலாம். பாரம்பரிய தமிழ்ப்பிரதேசம். அங்கு அனைத்துலக வர்த்தக வலயம் ஒன்று அமையவிருக்கிறது. தமிழர் வாழும் வரையிலும் காடுகளில் விடுதலைப் புலிகள் மறைந்திருக்கும் வரையிலும் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் முதலீடு செய்யாது.

அந்த துறைமுகப்பகுதி முழுவதும் தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சிங்களவரே அங்கு வசிப்பர். ஏனையோருக்கு எதிர்காலம் எப்படி என்பது நிச்சயமில்லை?.

இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தமது பகுதிகள் உள்ளாகியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இராணுவம் அவர்களை ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு அலைக்கழிக்கிறது.

10,000-க்கும் மேற்பட்ட மனிதர்கள் மாதக்கணக்காக அங்குமிங்கும் அலைந்து திரிகிறார்கள். தனது பகுதிக்கு திரும்ப அனுமதிக்கப்படுகிறவர்களை நிலங்களில் கண்ணிவெடிகள் மற்றும் சீரழிக்கப்பட்ட கட்டடங்கள் என இன்னொரு ஆபத்து எதிர்நோக்கி காத்திருக்கிறது.

எதிரிகளின் கட்டமைப்பு இப்படியாக அழிக்கப்படுகிறது.

கண்ணிவெடிகள், மனிதரை சிதைப்பதை மட்டுமே செய்கின்றன. உயிரை எடுப்பதில்லை. இதனால் காயம்பட்டவர்களைப் பராமரிக்கும் வேலையும் செலவும் ஏற்படுகிறது.
 
மேலும்

"மறக்கப்பட்ட போர்" - இலங்கை

"அமைதி வரும் என்ற நம்பிக்கை" - கிழக்கு திமோர்

"நெருக்கடி நிலவும் பிரதேசங்களில் படைகளை பணியில் ஈடுபடுத்துதல்" - ஜேர்மன் படைகளுக்கான பயிற்சி

என்ற தலைப்புக்களில் சிறந்த தொகுப்பாளருக்கான பரிசுகளைப் பெற்றுக்கொண்ட கேட் ஸ்கோபல் என்ற தொகுப்பாளருடன் நோர்வே நாட்டைச்சேர்ந்த அமைதி, முரண்பாடுகள் பற்றிய ஆராய்ச்சியாளரும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 100 நூல்களுக்கு மேல் எழுதியவரும் இத்தலைப்பில் 1,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவருமான ஜோகன் கால்றுங், TAZ நாளிதழின் செய்தித்தொடர்பாளரும், UNO நிபுணருமான அன்றியாஸ் சூமாக், ஜேர்மனிய இராணுவ ஜெனரலும் இலங்கை, ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பணியாற்றிய காரால்ட் குஜாற் ஆகிய மூவரும் கலந்து கொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இந்த விவாதத்தில் கைடல்பேர்க் போர் ஆராய்ச்சி அளவீட்டின்படி கடந்த வருடம் மட்டும் 278  அரசியல் போர் முரண்பாடுகள் நிகழ்ந்துள்ளன. இதில் 118 வன்முறையுடன் கூடியது. இவற்றில் மிகச்சிலவே உலகில் வெளித் தெரியப்படுத்தப்படுவது. இதில் மறக்கப்பட்ட போர்களில் ஒன்றாக சிறிலங்கா அரசுக்கும் தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கும் நடக்கும் போர் (Tamilen Rebellen) உள்ளது எனக்குறிப்பிடப்பட்டு கலந்துரையாடல் தொடங்கியது.

ஒரு கோடி மக்களைக்கொண்ட தமிழீழம் என்று குறிப்பிடப்படுவது ஜேர்மனியில் உள்ளது போல் உள்நாட்டு விடயங்களில் சுதந்திரம் கொண்ட ஒரு அமைப்பாக விளங்குமா? அங்கு என்ன மொழி பேசப்படும்? என்ற மேலோட்டமான விடயங்களே ஆராயப்பட்டன.

மேலும் உலகில் போர் மேற்கொள்ளப்படும் முறைகள் பற்றிப் பேசப்பட்டது

1. சீருடை தரித்தோர்- சீருடை தரித்தோர் மேல் மேற்கொள்ளுவது போர் என வரையறுக்கப்படுகிறது

2. சீருடை தரித்தோர் பொதுமக்களைத் தாக்குவது அரச பயங்கரவாதமென வகைப்படுத்தப்படும்

3. பொதுமக்கள் சீருடை தரித்தோரை தாக்குவது பயங்கரவாதம் என்றும்

4. சீருடையின்றி பொது மக்கள் ஒருவரை ஒருவர் தாக்குவது இனக்கலவரம் என்றும் பாகுபடுத்தப்படுகிறது.

இதன்படி விடுதலைப் புலிகள் போரிலும், பயங்கரவாதத்திலும் ஈடுபடுகிறது. சிறிலங்கா அரசு போரையும், அரச பயங்கரவாதத்தையும் செய்து வருகிறது. ஓப்பீட்டளவில் சிறிலங்கா அரசின் பயங்கரவாதச் செயல் மிகக்கூடியளவில் வெட்கமின்றி தமிழர் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இதற்கு எப்படியான தீர்வு அமையும் என்று ஆராயப்பட்டபோது

வெளிநாட்டு அனுசரணையாளர்கள் இன்றி தீர்வு காண்பது சாத்தியமில்லை. ஆனால் அவர்கள் எவ்வாறு இதில் ஈடுபடுத்தப்படலாம்

என்ற கேள்விக்கு

"இதோ நாங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டு பேசுகிறோமே அதைப்போலத்தான்" என்று பதிலளிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் சீனா போன்ற நாடுகள் சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்குவது பற்றிப் பேசியபோது

"ஜேர்மனிய நிறுவனங்கள் சிறிலங்காவுக்கு ஆயுத விற்பனை செய்வதில்லை" என ஜேர்மனிய ஜெனரல் மறுத்துரைத்தார்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையடுத்து தமிழ் ஊடகங்கள் "தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழீழமே - ஜேர்மன் தொலைக்காட்சி" என்று செய்தி வெளியிட்டன.

ஆனால் தமிழீழம் கேட்டு விடுதலைப் புலிகள் போராடுகிறது என்று சொல்லப்பட்டதைத்  தவிர தமிழீழம்தான் இதற்கான தீர்வு என இந்த விவாதத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

இலங்கையில் தற்போது என்ன  நடக்கிறது என்று தெரியாமல் இருந்த ஜேர்மன் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்தது உண்மைதான். ஆனால் தேச விடிவுக்காய் ஆதரவு தேடி ஏங்கும் தமிழர்களுக்கு எமது தமிழ் ஊடகங்கள் கூறியது போல் எந்த நற்செய்தியும் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களும், விடுலைப் புலிகளும் வேறு வேறாகப் பார்க்கப்பட்டார்கள்.

இந்த பிரச்சனையில் நீண்டகால அனுபவம் உள்ளவர்கள் கலந்து கொண்ட போதிலும் விவாதம் ஆழமாக அமையவில்லை.
 
இந்த நிகழ்ச்சி இலங்கையில் நடைபெறுவது விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையே இடம்பெறும் போர் என்ற கருத்தையே கூறியது.

தமிழ் மக்களின் அபிலாசைகள் பேசப்படவில்லை. பிரச்சினைக்கான அடிப்படை விடயங்கள் ஆராயப்படவில்லை.

தமிழீழம், தமிழ் மொழி பற்றிப் பேசப்பட்ட போதும் கூட இந்தப் பிரச்சினையில் மொழி எந்தளவுக்கு முக்கிய காரணியாய் உள்ளது என்று கூட கூறப்படவில்லை.

புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் இந்த ஜேர்மன் தொலைக்காட்சி விவரணம் புதிய நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் உருவாக்கும் விதமாக தமிழ் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழீழம் தொடர்பான தொலைக்காட்சி நிறுவனத்தின் நிலைப்பாடு எதனையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தவில்லை.

பேச்சாளர்களின் கருத்துக்கு நாம் பொறுப்பல்ல என்றே இந்த நிறுவனம் குறிப்பிட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

தற்போது அனைத்துலக சமூகம் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் எவ்வாறு நழுவல் போக்கைக் கடைப்பிடிக்கிறதோ அதே போக்கு இந்த விவாதத்திலும் காணப்பட்டது.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை அவதானித்த ஜேர்மனிய நண்பரின் கருத்து:

வழமையான ஜேர்மனிய ஊடகங்களிடம் இதற்கு மேல் எதனையும் எதிர்பார்க்க முடியாது. எனவே பரப்புரையில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் இந்தப் பணியில் தொடர்ந்தும் முனைப்போடு ஈடுபட வேண்டியது அவசியம்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..