|
"உபாயங்கள் எல்லாவற்றையும் சொல்லமுடியாது, சொல்வது எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாது. மறுமுனையில் நோக்கினால், நடைமுறைப்படுத்தப்பட்டது எல்லாம் சிந்திக்கப்பட்டதாக இருக்கும், கணிசமானளவு வெளியில் கூறக்கூடியதாக இருக்கும்". களம் காலத்தை மாற்றுமா, காலம் களத்தை மாற்றுமா என்ற வினாவிற்கும் மேற்கூறிய சூட்சுமத்துக்கும் பலத்த பொருத்தப்பாடுகள் உள்ளது என கடந்த வாரப் பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன்.
மேற்கூறிய எனது குறிப்பு பல்வேறு தரப்பினரிடம் வெவ்வேறு விதமான விமர்சனங்களை தோற்றுவித்ததாக அறிய முடிந்தது. ஆயிரம் கருத்துக்கள் மோதட்டும், ஆக்கபூர்வமான விமர்சனங்கள்மலரட்டும் என்று மக்களுக்காக போராடியவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே விமர்சனங்களுக்கு மதிப்பளித்து எனது விடயத்துக்கு வருகிறேன்.
புதிய உலக ஒழுங்கினுடைய தாக்கத்தினை நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடர் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆயுதங்களின் பிதாமகன்களில் முக்கியமான அமெரிக்கா "காலநிலை மாற்றம்' தொடர்பாக முக்கியத்துவம் கொடுக்க, அதற்குப் பின்னால் அமெரிக்காவின் "சூழ்நிலைத் தோழர்கள்' அணிவகுத்து அமெரிக்காவின் கருத்தை ஆதரித்து பேசியுள்ளார்கள்.
அதேவேளை, தென் ஆபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பெகி சக்திமிக்க நாடுகளே உலக மாநாடுகளில் மேலாண்மை செலுத்துவதாகவும், உலகிலுள்ள அரசியல், பொருளாதார, சமூக, இராணுவ மற்றும் தொழில்நுட்ப நிலையில் நிலவும் சமச்சீரற்ற பலம் வறிய மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு பாதகமானதாகவே அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் "காலநிலை மாற்றம்' , உலக வர்த்தகம், புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி அடைவிலக்குகள் போன்றவையின் ஊடாக ஆரோக்கியமான நாடுகளே சாதகத்தன்மைகளை அடைவதாகவும், ஐ.நா. தனது தீர்மானங்களை உரிய முறையில் அமுல்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முதன்மையான இந்த உலகில் சுதந்திரம், நீதி, சமத்துவம் போன்றவற்றின் கருத்துக்கள் மேலாண்மை சக்திகளினாலேயே நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கொலஸ் சாக்கொஸி `எமக்குத் தேவையானது நேர்மையான, புதிய கையாளல் தன்மை' எனக் குறிப்பிட்டிருந்தார்.
முக்கியமான இரு ஜனாதிபதிகளினதும் மேற்கூறிய கருத்துகள் தற்போதைய உலக ஒழுங்கின் மீதான `அதிருப்தி தெறிப்புகளாகவே' நோக்கப்பட வேண்டும். நிகராக வளர்ந்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எழுச்சி, சவாலாக உருவாகும் ஆபிரிக்க ஒன்றியத்தின் வளர்ச்சி ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரிலும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது. முன்னதாக ஜி 8 மாநாடும் அமெரிக்காவுக்கு சோதனையாகவே அமைந்திருந்தது.
இன்னொரு புறத்தில் கொசோவோவின் விடுதலை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் இடம்பெற்று வரும் பனிப்போர், ஈராக்கில் அந்தரத்தில் தொங்கும் அமெரிக்காவின் உபாயங்களும் (Strategies) உத்திகளும் (Tactics) ஆப்கானில் ஆப்பிழுத்த குரங்காக மாறியுள்ள நிலைமை, இதோ உன்னை முட்டி மோத தயார் எனக் கூறுவதுபோல் அபரிதமான வளர்ச்சியடைந்துள்ள சீனா, ஈரானினதும், வெனிசுலாவினதும் ஜனாதிபதிகளின் அறிக்கைப் போர்கள் என நீண்டு செல்லும் அமெரிக்காவுக்கு சாதகமற்ற சூழல் புதிய உலக ஒழுங்கில் நிச்சயமாக தாக்கத்தை உண்டு பண்ணும். அந்த தாக்கத்தை எவ்வாறு தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவது என்பது சவாலானதொன்றாகவே இருக்கப் போகிறது. அந்தச் சவாலை வெல்பவர்களே தமது தேசத்தின் இருப்பை நிலைநிறுத்துபவர்களாக மிளிர்வார்கள். எதிர்காலத்தை ஆக்கபூர்வமான தூரநோக்கோடும், பொறுமை கலந்த ஆழமான அவதானிப்போடும் உரிய காலப்பகுதிவரை நோக்குபவர்களே புதிய உலக ஒழுங்கின் தலைவர்களுக்கான அடையாளங்களாக இருக்கப் போகிறார்கள்.
மேற்கூறியவை போன்ற நிலைகளை கருத்தில் கொண்டே இலங்கைத் தீவினுடைய இனக்குழும மோதுகையின் இன்றைய நிலையையும், இனிவரும் காலத்தையும் நோக்குதல் பயனுள்ளதாக அமையும். இங்கே முன்வைக்கின்ற வாதங்கள் உண்மையை விரும்பாதவர்களுக்கு கசப்பானதாக அமையலாம். ஆனால், மக்களை மாயைகளிலிருந்து வெளியே கொண்டு வந்து காலக் கண்ணாடியை அவர்களுக்கு காட்டி, யதார்த்தத்தை புரிய வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு ஒவ்வொரு ஊடகவியலாளனுக்கும் உண்டு. அந்தப் பொறுப்பை இந்த பத்தியில் நிறைவேற்ற முயல்கிறேன்.
"என்ன நடக்கப் போகுது? எல்.ரி.ரி.ஈ. இனர் உண்மையிலேயே பலவீனம் அடைந்து விட்டார்களா? `கொட்டி (புலி) கதை முடியப்போகுது", "இருந்து பார் பெடியள் பெரிய அடி குடுக்கப் போறாங்கள்", "தலைவரின் திட்டத்தை யாருமே அறிய முடியாது" போன்ற வினாக்களும் அபிப்பிராயங்களும் கிராமங்கள் தொடக்கம் தூதுவராலயங்கள் வரை பேசப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டங்கள் என்ன என்பதை சுலபமாக அறிய முடியாது என்பது மெய்நிலை. அவர்களினுடைய மௌனத்திற்கு ஒரு `அர்த்தம்' இருக்கின்றது என்பதை யாரும் மறுதலிக்க முடியாது. ஏனெனில் 12 போராளிகளை இழந்தபோது பிராந்திய வல்லரசொன்றுடனே போரிடத் துணிந்த புலிகள், இன்று இரு தசாப்தங்கள் கடந்த நிலையில் பல்வகைப் பரிமாணங்களுடன் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அமைதியா இருக்கிறார்கள். இந்த வளர்ச்சி நிலை முற்றுமுழுதாக நிரூபணமாகாத ஒரு நிலையிலேயே, புலிகளின் கதை முடியப் போவதாக தென்னிலங்கை முழங்குகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களும், இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழர்களும் குழம்புகிறார்கள். இத்தகைய நிலைக்கு புதிய உலக ஒழுங்கை முன்னிலைப்படுத்தி வரவுள்ள `காலக்கனிவே' பதில் வழங்கப் போகிறது.
அந்தக் காலக் கனிவையும், களநிலை சாதகத்தையும் உண்டாக்குவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவ்வளவு இலகுவானதல்ல. இதற்காக பலத்த சவால்களை எதிர்ரிகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தளவிற்கு வளர்ந்துள்ளார்களோ அதனைச் சோதிப்பது போல சவால்களும் மேலெழுந்துள்ளது. வளர்ச்சிக்கேற்ற சவால்கள் இருக்கத்தான் செய்யும். அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டுமானதல்ல. வல்லாண்மைகளுக்கு ஏற்ப சவால்கள் இருக்கும். அது அமெரிக்காவுக்கும் பொருந்தும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும். ஆனால், சவால்களை திடத்துடன் எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்வதிலேயே அவரவர் இருப்பு தங்கியுள்ளது. கடந்த காலத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட சவால்களை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெற்றி கொண்டிருக்கிறார்கள். மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாறப்போகும் காலநிலைக்கு அமைய எவ்வாறு களநிலையை புலிகள் மாற்றப் போகிறார்கள் என்பது ஈழப்போராட்டத்தின் போக்கைப் புரியாதவர்களுக்கு சிதம்பர சக்கரமாகவே இருக்கப் போகிறது.
தெளிவாக புரிந்துகொள்ள வேண்டிய ஒரு யதார்த்தம் யாதெனில், புலிகளினுடைய வெற்றியை ஒட்டுமொத்த தமிழர்களும் மனப்பூர்வமாக கொண்டாடுவதில்லை. ஆனால், புலிகளினுடைய தோல்வியை முழுமொத்த தமிழினத்தின் வீழ்ச்சியாகவே நோக்குகிறார்கள். அத்துடன், பிராந்திய வல்லரசுகளோ அல்லது உலக வல்லரசுகளோ தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவையல்ல விரும்புவது, மாறாக அவர்கள் பலவீனமாக வேண்டும் என்பதையே. தமது எதிரி தன்னை பலவீனமானவனாக எண்ண வேண்டும் என்பதற்காகவே பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது ஒரு போரியல் உத்தி. அதனைத் தான் தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்போது மேற்கொள்வது போல் புலப்படுகிறது. ஏனெனில், கடந்த இரு வருட காலத்தில் முகமாலை முறியடிப்புச் சமர் வானுலா, ஹபரண கலக்கல், நெடுந்தீவு பாய்ச்சல் என்பனவற்றை விட பெரும் தாக்குதல்களை புலிகள் மேற்கெள்ளவில்லை. அதேவேளை புலிகளுக்கு படுதோல்விகள் தொடர்கிறது என்ற ஆரவாரம் தென்னிலங்கையூடாக மேலெழும்புகிறது.
வெற்றிகள் என்பது தனித்து தாக்குதல் நடவடிக்கைகளினூடாக கணிப்பிடப்படக்கூடியதல்ல. மாறாக, பல இரகசிய நகர்வுகளும், தந்திரோபாய நகர்வுகளும், இராஜதந்திர நகர்வுகளையும் உள்ளடக்கியே கணிப்பிட வேண்டும். ஆனால், தாக்குதல் நடவடிக்கைகள் போல ஏனைய நகர்வுகள் வெளித்தெரிவது அரிது. ஒரு முழு அளவிலான போரின் அறுவடையின் பின்பே வெற்றியின் பரிமாணங்களை அளவிட முடியும்.
இவையனைத்தினதும் வெளித்தருகையைப் பார்ப்பதற்கு பொறுமை அவசியம். அந்தப் பொறுமையை காப்பதென்பது மிகக் கடினமானது. "இன்று உலகு எதிர்கொள்ளும் ஒரு பெரும் சவால் பொறுமையின்மை" என ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப உரையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளோ அவர்களுடைய போராட்ட வரலாற்றில் என்றைக்குமே கடைப்பிடிக்காத பொறுமையை, நிதானத்தை தற்போது கடைப்பிடித்து வருகிறார்கள். அதனை பலவீனமாகக் கருதினால் அதன் தாக்கம் படுபாதகமானதாகவே அமையும். அது இலங்கைத் தீவு முழுவதையும் இரத்தக் களரியாக்கக் கூடும்.
அதனுடைய தாக்கத்தை எதிர்கொள்வதில் பெரும்பான்மையினராக மக்களே இருப்பார்கள். எந்த நடவடிக்கையும் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தே முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் போராட்டம் மக்களுக்கானது. மக்களினுடைய உறுதியான ஆதரவே போராட்டங்களின் நிலையான வெற்றியாக இருக்கும். அதுதான் மக்களின் வெற்றியும் ஆகும்.
ஆக மொத்தத்தில் மக்களின் உறுதியான ஆதரவுத் தளம், மனோதிடம், ஆத்மபலம், அர்த்தம் பொதிந்த, நிதானம் கலந்த பொறுமை, மாறிவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ற நுட்பம் மிகு திட்டமிடல் போன்றவையே, எதிர்வுகூற முடியாதுள்ள இன்றைய சூழலுக்கு விரைவில் விடைதரப் போகிறது.
அந்த விடையே உண்மையான விடுதலையின் வாசலாக அமையும்.
ச.ப.நிர்மானுசன்
|