பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 01 October 2007

தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி தென்னிலங்கை அரசியலில் சிங்களத் தலைமைத்துவங்கள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளையாவது தீர்த்து வைக்குமென இனியும் நம்புவது முட்டாள்தனமனதாகவே இருக்கும்.மாறி மாறி ஆட்சி பீடமேறும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு பயங்கரவாத முலாம் பூசப்பட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளே அரசியல் மூலதனமாக இருந்து வருகின்றன.

நாடு இன்று எதிர்நோக்கியுள்ள அழிவுகள், அனர்த்தங்கள், இழப்புக்கள், பொருளாதார வங்குரோத்து நிலை என்பனவற்றிற்கு ஊடாகவும் மேற்கூறிய சிந்தனையில் இருந்து தென்னிலங்கையின் பெரும்பாலான சிங்களத் தலைமைத்துவங்கள் மாறியதாக இல்லை. காலத்திற்கு காலம் மாகாண சபை, பிராந்திய சபை, மாவட்ட சபை என பல்வேறு அலங்கார சொற்பதங்களால் அதிகாரப் பகிர்வு குறித்து தென்னிலங்கை அரசியலில் பேசப்பட்ட போதும் அவை வெறுமனே ஒரு பம்மாத்துக்காக கூறப்படுபவைகளாகவும் காலத்தை கடத்தி தமிழினத்தை வேருடன் பிடுங்கி சாய்த்து விடுவதற்கான தந்திரோபாயங்களாகவுமே அமைந்துள்ளன.

இலங்கை அரசியலை குறிப்பாக தென்னிலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் ஒவ்வொருவருக்கும் இது புலனாகும். குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை, கடந்த கால இத்தகைய கசப்பான அனுபவங்களே அவர்களை தமது தலைவிதி குறித்து தாமே தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளியது மாத்திரமின்றி தாமே பாதைவெட்டி பயணம் போக வேண்டிய கட்டாய நிலையையும் அவர்கள் முன் உருவாக்கிவிட்டுள்ளது.

தென்னிலங்கையில் எந்தக் கட்சியாக இருக்கட்டும் அவர்களின் நிகழ்ச்சி நிரலாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதாவது இந்த நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரமே சொந்தமானது என்பதுதான் அந்த தாரக மந்திரமாகும். இதனை குறிக்கோளாக கொண்ட நிகழ்ச்சி நிரலே தென்னிலங்கை அரசியலில் மிக ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை மக்கள் கூட இத்தகைய சிந்தனைக்குள்தான் மூழ்கவைக்கப்பட்டுள்ளனர். எனவே அதிகாரப் பகிர்வு என்பதோ தமிழ் மக்களை ஆணைத்துப் போகின்றோம் என்பதோ எல்லாமே வார்த்தை ஜாலங்களே அன்றி உண்மையல்ல. இதனை சில தென்னிலங்கை கட்சிகள் நேரடியாக வெளிப்படையாகக் கூறுகின்றன. சில கட்சிகள் வெளியில் ஒன்று பேசிக்கொண்டு தமது நிகழ்ச்சி நிரலை மிக இலாவகமாக முன்னெடுக்கின்றன.

அந்த வகையில் தென்னிலங்கை கட்சிகளுக்கிடையிலான போராட்டம் என்பது ஆட்சியில் அமர்வதற்கான போராட்டமாகவே அமைந்துள்ளது.

ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சிகள் அல்லது கூட்டணியினர் ஆட்சியை எவ்வாறு தக்கவைப்பது என்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள கட்சியோ அல்லது அதன் கூட்டணியோ எவ்வாறு மீண்டும் ஆட்சியில் அமர்வது என்பது குறித்த சிந்தனையிலும் அதை நோக்கிய போராட்டத்திலுமே உள்ளது.

இவ்வாறு பிரிந்து நின்று ஆட்சி அதிகாரத்திற்காகப் போராடிய நிலைமையிலும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பெரும்பாலான தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஒத்த கருத்தினை கொண்டதாக ஒரே நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பவையாக இருப்பதை வரலாறு காட்டி நிற்கின்றது.அதாவது சிங்கள இனம் பிரிந்து நின்று தமிழர்களை பிரித்து வைத்து ஆண்டு சுகம் அனுபவிக்கின்றது.

சிங்களத் தலைமைத்துவங்கள் பிரிந்து நின்ற போதும் அந்த பிரிவு என்பது பெரும் கொள்கை கோட்பாடுகளுக்காக அல்ல என்பதும் தெளிவான உண்மையாகும்.

இன்று எதிரணியில் இருந்து ஆளுந்தரப்பு மீது வசைபாடுபவர் நாளை ஆளுந்தரப்புக்குத் தாவி புகழ்மாலை சூடுவதென்பது தென்னிலங்கை அரசியலில் சகஜமான நிகழ்வாகும்.
இதனை தமிழினத்திலுள்ள சிலர் இன்னும் சரியாக உணராதது தமிழினத்திற்கு ஒரு சாபக்கேடாகும்.

அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவதற்கும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு எதிராக கொண்டுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களே காரணமாகும்.

சமஷ்டி பற்றி பேசிய ஐக்கிய தேசியக் கட்சி தற்போது தடம்மாறி நிற்பதும் தனக்கு சாதகமாக உருவாக்கி கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையைக் கூட மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டுமென பிரசாரப்படுத்துவதும் தென்னிலங்கை அரசியலின் பச்சோந்தித்தனத்திற்கு நல்ல உதாரணமாகும்.

இன்றைய நிலையில் தென்னிலங்கையின் பெரும்பாலான சிங்களத் தலைமைகள் தமது கைகளில் ஏந்தி நிற்பது போர் மூலமான தீர்வேயன்றி வேறொன்றுமில்லை.

எந்தவொரு தென்னிலங்கை சிங்களத் தலைமைத்துவங்களிடமும் கட்சிகளிடமும் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாஷையையாவது தீர்க்கக்கூடிய எந்தவொரு தீர்வுத் திட்டமும் இல்லை என்பது வெளிப்படையான உண்மையாகும்.

இந்நிலையில் தொடர்ந்தும் சிங்களத் தலைமைகளும் சிங்களக் கட்சிகளும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா? நம்பிக்கை வைக்க முடியுமா? என்ற வினாக்கள் எழுப்பப்படும் போது இவை நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடென குறை கூறப்படலாம். அல்லது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு குறித்த சலசலப்புகளுக்கு சவால் விடுவதாக அமைவதாக இருக்கின்றது என்றும் கூறலாம்.

ஆனால், இந்த நம்பிக்கையீனங்கள் வெறுமனே உருவாகியது அல்ல. கடந்த கால கசப்பான அனுபவங்கள் தமிழ் மக்களின் மனங்களில் எழுப்பியுள்ள நிதர்சனமான உண்மைகள் என்பது தமிழ் மக்களுக்கு புரியும்.

தாமே பாதை வெட்டியே பயணம் போக வேண்டும் என்பதை தமிழ் மக்களுக்கு மிக ஆழமாக உணர்த்தும் செய்தியே இதுவாகும். இதற்கு தமிழ் மக்களிடையிலான பேதங்கள், பிளவுகள் தூக்கி எறியப்பட வேண்டும். தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் இனி இணைந்தாக வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கு உரிய செய்தியாகும்.


நன்றி: வீரகேசரி
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..