|
வடக்கில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வவுனியா - மன்னார் வீதியிலிருந்து வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நுழைய பாரிய படை நடவடிக்கைகளில் இராணுவம் இறங்கியுள்ளது. யாழ்.குடாநாட்டுக்கு மன்னார்-கிளிநொச்சி கரையோரத்தால் தரைவழிப் பாதையொன்றை திறக்கும் நோக்கிலேயே இந்தப் பாரிய படைநடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1996 இல் வவுனியாவுக்கும் - கிளிநொச்சிக்குமிடையிலான `ஏ9' தரைவழிப் பாதையைத் திறந்து வடக்கையும் தெற்கையும் தரைவழியால் இணைக்க மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குரு படை நடவடிக்கைக்கு மாற்றாக, சுமார் பத்து வருடத்திற்குப் பின் தற்போது மன்னார் - கிளிநொச்சி கரையோரப் பகுதியூடாக குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையொன்றை திறக்க அரசு முற்படுகிறது.
வன்னியை இரண்டாக ஊடறுத்துச் செல்லும் `ஏ9' வீதியை வவுனியா முதல் கிளிநொச்சி வரை கைப்பற்றி விடுவதன் மூலம் யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையைத் திறக்க அப்போதைய அரசு முற்பட்டிருந்தது. புலிகளின் வசமிருக்கும் வன்னியை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் அவர்களை வன்னிக்குள் இரண்டாகப் பிரித்து முழுமையாகச் செயலிழக்கச் செய்துவிடும் நோக்கிலேயே ஜெயசிக்குரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டது.
தற்போதைய நிலையில் `ஏ9' வீதியூடாக வன்னிக்குள் நுழைவது எவ்விதத்திலும் சாத்தியப்படாதென்பதை நன்குணர்ந்த நிலையிலேயே `ஏ9' வீதியூடாக வன்னிக்குள் பாரிய படை நகர்வொன்றை மேற்கொள்வதை விடுத்து, மன்னார் - கிளிநொச்சி கரையோரத்தால் பூநகரியை கைப்பற்றி சங்குப்பிட்டி - கேரதீவு ஊடாக குடாநாட்டுக்குத் தரைவழிப்பாதையொன்றை திறந்து விட வேண்டுமென அரசு முயல்கிறது. இதற்காகவே தற்போது வவுனியா - மன்னார் வீதிக்கு வடக்கே பாரிய படைநடவடிக்கையை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கே மாரிகாலம் தொடங்குவதற்குமுன் இந்தக் கரையோரத் தரைவழிப்பாதையைப் பிடித்து விட வேண்டுமென அரசு ஆர்வம் காட்டுகிறது. இதற்காகவே உயிலங்குளம் பாதை மூடப்பட்டு அடம்பன், ஆண்டான்குளம் பகுதிகளை மையமாக வைத்து பாரிய முன்னகர்வு முயற்சியை படையினர் ஆரம்பித்துள்ளனர்.
`ஏ9' வீதியூடாக வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பிக்கப்பட்ட படைநகர்வுக்கும் தற்போது மன்னார், கிளிநொச்சி கரையோரத்தை இலக்கு வைத்து அதனூடாக பூநகரியை சென்றடைந்து சங்குப்பிட்டி - கேரதீவு கடல்வழியாக யாழ்குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறக்க முயலும் படைநடவடிக்கைக்கும் பெருமளவு வேறுபாடுகளுண்டு.
மன்னாருக்கு அப்பால் வடபகுதி கடற்பரப்பும் நிலப்பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மன்னாருக்கு வடக்கேயுள்ள கடற்பரப்பு ஆழ்கடலாயில்லாத போதும் இந்தக் கடற்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருப்பதன் மூலம் தமிழகத்துடன் புலிகள் நெருங்கிய கடல் வழித் தொடர்புகளை பேணிவருவதாக அரசு கருதுகிறது.
`ஏ9' வீதியூடாக ஜெயசிக்குரு படையணிகள் நகர்ந்த போது அவர்களுக்கு பக்கத்துணை எதுவுமில்லை. `ஏ9' வீதியூடாக முன்னேறிய படையினரே, பின்புறத்தே தரைவழி விநியோகப் பாதையை வைத்துக் கொண்டு அடுத்த கட்ட நகர்வில் ஈடுபட்டனர். `ஏ9' வீதியின் இரு மருங்கும் விடுதலைப் புலிகளின் வசமிருந்ததால் மிகப்பெரும் நெருக்கடிகளை படையினர் எதிர்கொண்டனர்.
ஆனால் மன்னார் - கிளிநொச்சி ஊடாக தரைவழிப்பாதையில் மேற்கொள்ளப்படும் பாரிய படை நடவடிக்கைக்கு மன்னார் கடல்வழி மூலம் உதவிகள் கிடைக்குமென அரசு எதிர்பார்க்கிறது. மன்னார் கரையோரத்தில் விடுதலைப் புலிகள் வசமுள்ள பிரதேசங்களை கைப்பற்றி முன்னகரும் போது, அந்த நிலப்பிரதேசங்களை அண்டிய கடற்பிரதேசங்களும் தங்கள் வசமாகி விடுமெனவும் அரசு கருதுகிறது.
மன்னாருக்கு வடக்கே கரையோரப் பிரதேசமான விடத்தல்தீவு மற்றும் இலுப்பைக் கடவைப் பகுதிகளிலிருந்தே விடுதலைப் புலிகள் தமிழகத்துடன் கடல் வழித் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக அரசு கருதுகிறது. வன்னியில் அரசு எரிபொருளுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் பெருந்தடை விதித்திருந்தாலும் தமிழகத்துடனான கடல் வழித் தொடர்பு மூலமே புலிகள் அனைத்தையும் பெற்று வருவதால் அரசின் பொருளாதாரத்தடை அவர்களை எவ்விதத்திலும் பாதித்திருக்கவில்லை.
கரையோரத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை வெற்றியளித்தால் மன்னாரின் கரையோரப் பகுதியை புலிகள் முழுமையாக இழந்து விடுவதுடன் தமிழகத்துடனான கடல் வழித் தொடர்பையும் இழந்து விடுவெரெனவும் அரசு கருதுகிறது.
மன்னாருக்கு தெற்கே அரிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி பகுதிகளைப் படையினர் கைப்பற்றியதன் மூலம் கடற்புலிகளின் தளங்கள் இழக்கப்பட்டதால் அவர்களது ஆயுத விநியோக மார்க்கம் இல்லாது போய் விட்டதாக அரசு கருதுகிறது. அதேபோன்று மன்னாருக்கு வடக்கே கடலோரத்தரைப் பகுதிகளைக் கைப்பற்றி விட்டால், அதனோடிணைந்திருக்கும் கடற் பிரதேசங்களும் படையினர் வசமாகி விடும்.
அரசு நினைப்பது போல் மன்னார் கரையோரமாகவுள்ள தரைவழிப் பாதைகளைக் கைப்பற்றி விடத்தல் தீவு, இலுப்பைக் கடவை மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், குமிழமுனை, ஆலங்கேணி பகுதிகளையும் கைப்பற்றி விட்டால் அப்பாலிருக்கும் பூநகரியை போரிடாமலே கைப்பற்றி விடலாமென்றும் அரசு கருதுகிறது.
அவ்வாறு பூநகரி வரை சென்று விட்டால் கேரதீவு - சங்குப்பிட்டி ஊடாக யாழ்குடாநாட்டிற்கு கரையோரத்தால் தரைவழிப்பாதையொன்றைத் திறந்து விட முடியுமெனவும் அரசு கருதுகிறது.
மன்னாருக்கு தெற்கே அரிப்பு - சிலாவத்துறை - முள்ளிக்குளம் வரையான மிக நீண்டதூரத்தை படையினர் கைப்பற்றியதையடுத்தே புத்தளம் - கற்பிட்டி - மன்னார் ஊடாக யாழ். குடாநாட்டுக்கு கரையோரத்தால் தரைவழிப்பாதையைத் திறக்கும் எண்ணமேற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தரைவழிப்பாதையை திறக்கும் பட்சத்தில் பூநகரி படையினர் வசமாகிவிடும். இதன்மூலம் குடாநாட்டுப் படைத்தளங்களுக்கு புலிகளால் ஏற்படும் பாரிய அச்சுறுத்தலும் இல்லாது போய் விடுவதுடன் நாட்டின் மேற்குப்புற கடற்பகுதி முழுமையாக கடற்படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்து விட்டால் மன்னார் கடற்பரப்பில் கடற்புலிகளின் நடமாட்டத்தை முழுமையாகவே இல்லாது செய்து விட முடியுமெனக் கருதும் அரசு மன்னார் கரையோரப் பிரதேசங்களிலும் புலிகளின் பிரசன்னத்தை முற்று முழுதாக இல்லாது செய்து விட முடியுமெனவும் கருதுகிறது.
யாழ்.குடாநாட்டுக்கு `ஏ9' பாதையை விடுத்து மாற்றுப் பாதையொன்றை திறக்கும் நோக்கிலேயே இந்தப் பாரிய படைநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளியுலகிற்கு காட்டும் அரசு, மன்னார் கடலினுள்ளிருக்கும் எண்ணெய் வளத்தை பெற்று விடத் துடிக்கிறது. இந்தக் கடலில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்காக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்களையும் செய்ய முனைகிறது.
மன்னார் கரையோரத்தினூடாக யாழ்.குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையை திறப்பதென்பது மன்னாரின் கரையோரப் பகுதியையும் கடற்பரப்பையம் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து மன்னார் கடலில் எண்ணெய்வள அகழ்வுக்கு புலிகளால் அச்சுறுத்தல்களேற்படுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாகவேயுள்ளது. மன்னாரில் கடலிலுள்ள எண்ணெய்வளத்தைப் பெற்று விட்டால் இலங்கைக்கு பொருளாதாரப் பிரச்சினையே இல்லாது போய் விடுமெனவும் அரசு கருதுகிறது.
இவ்வாறு பல்வேறு நோக்கங்களையும் கருத்தில் கொண்டே தற்போது மன்னாருக்கு வடக்கே அரசு பாரிய படைநடவடிக்கையில் இறங்கியுள்ளது. எனினும் கடந்த ஒரு வாரமாக நடைபெறும் இந்தக் கடும் சமரில் படையினரால் குறிப்பிடத்தக்களவு வெற்றியைக் கூட பெற முடியவில்லை. ஆனால். பெரு வெற்றியைப் பெற்று புலிகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருவதாக அரசு பெரும் பிரசாரம் செய்கிறது. படையினருக்கு ஏற்படும் பலத்த சேதங்களெல்லாம் மூடி மறைக்கப்படுகிறது.
அத்துடன் மன்னாருக்கு வடக்கிலிருந்து புலிகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக வவுனியாவின் ஓமந்தைக்கு நெருக்கமாக பாலமோட்டை, விளாத்திக்குளம் பகுதிகளை நோக்கியும் இராணுவம்முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ள முனைகிறது. எனினும் படையினர் சகல பகுதிகளிலும் புலிகளின் மிகக் கடும் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது. பலத்த இழப்புகளை எதிர்கொண்டு வந்தாலும் புலிகள் பாரிய இழப்புகளை சந்தித்து வருவதாக பெரும் பிரசாரம் செய்கிறது.
புலிகளுக்கு பெரும் ஆயுதப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் யுத்த முனையில் புலிகள் ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் மிகவும் மட்டுப்படுத்தியே பயன்படுத்தி வருவதாகவும் அரச ஊடகங்களும் சிங்கள ஆங்கில ஊடகங்களும் தினமும் கூறிவருகின்றன. மூன்று ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதன் மூலம் புலிகளின் போரிடும் வலு வெகுவாகக் குறைந்து விட்டதாகவும் பெரும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
புலிகளுக்கெதிரான உளவியல் போரில் அரசு குதித்துள்ளது. தமிழ் மக்களை கவலையடையச் செய்து சோர்ந்து போகும் விதத்தில் இந்தப் பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதுடன் புலிகளுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த தலைவராக தனது மகனை நியமிக்க புலிகளின் தலைவர் முயல்வதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை கொல்லப்பட்டு விட்டதாகவும் பொட்டு அம்மானின் அதிகாரமே இன்று புலிகள் இயக்கத்தினுள் கோலோச்சுவதாகவும் பொய்ப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஈழத்தமிழர்களை, குறிப்பாக புலிகளுக்கு பெரும் பொருளாதார உதவிகளை வழங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் விரக்தியையும் பெரும் மனச்சோர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்டு இந்தப் பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் தியாகி திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு தின இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கேணல் சூசை, எல்லாப் பொய்ப் பிரசாரங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார்.
புலிகளிடம் ஆயுதங்களில்லை, ஷெல்களில்லை, மோட்டார் குண்டுகளில்லை இதனால் அவர்களால் இனிப்பெரும் யுத்தத்தை நடத்த முடியாதென்றால், மிகப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு 3500 கோடி ரூபாவுக்கு நாணயத் தாள்களை புதிதாக அச்சிட்டு புழக்கத்துக்கு விட்டும் 500 கோடி அமெரிக்க டொலரை தனியார் வங்கிகளிடம் கடனாகப் பெற முயலும் இந்த அரசால் இனிமேல் எப்படிப் பெரும் போரை நடத்த முடியும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் பட்டினிச் சாவை எதிர் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு தினமும் ரொக்கட் வேகத்தில் செல்கிறது. இந்த நிலையில் தினமும் அரசு கோடிக் கணக்கில் யுத்த முனையில் வீண்செலவு செய்கிறது. இது நாட்டை காலா காலத்திற்கு அதலபாதாளத்திற்குள் தள்ளி விடப் போகிறது.
மன்னார் ஊடாக யாழ்.குடாநாட்டுக்கு தரை வழிப்பாதையை திறக்க முற்படும் அரசும் `ஜெயசிக்குரு' படைநடவடிக்கைக்கு என்ன நடந்ததெனச் சிந்திக்க வேண்டும். `ஏ9' வீதியூடாக வன்னிக்குள் படையினர் முன்னேறியதும், அதன் பின் ஓயாத அலைகள் மூலம் அந்தப் பிரதேசங்களையெல்லாம் புலிகள் மீட்டதும், யாழ்.குடாவிலிருந்து கிளிநொச்சிவரை முன்னேறிய படையினரை அங்கிருந்தும், என்றுமே வீழ்த்த முடியாத தளமெனக் கருதப்பட்ட ஆனையிறவுப் பெருந்தளத்தை புலிகள் கைப்பற்றியதும், அதைத் தொடர்ந்து அவர்கள் குடாநாட்டினுள் நுழைந்த போது 40,000 படையினரையும் மீட்க இலங்கை அரசு இந்தியாவிடம் உதவி கோரியதையும் விரைவில் எவரும் மறந்து விட மாட்டார்கள்.
வன்னியில் தினமும் போர் விமானங்கள் அகோரத் தாக்குதல்களை நடத்துகின்றன. புலிகளின் இலக்குகளெனக் கூறி மக்கள் குடியிருப்புகளே அழிக்கப்படுகின்றன. பல கோடி ரூபா பணத்தைக் கொட்டித் தினமும் நடைபெறும் இந்தத் தாக்குதல்களால் புலிகளுக்கு எந்தளவுக்கு பாதிப்பேற்பட்டது என்பது குறித்து எவரும் சிந்திப்பதில்லை.
ஆனால், புலிகளின் விமானங்கள் வன்னியைத் தாண்டி விட்டால் உலகமே அதிர்கிறது. கொழும்பு இருண்டு போய் விடுகிறது. இலங்கையின் பொருளாதாரமே சரிந்து விடுகிறது. கடந்த ஏப்ரலுக்குப் பின் அந்த விமானங்கள் தலை நகருக்கு வராததால் தற்போது வெளிநாட்டு விமானங்கள் தலைநகருக்கு வரக்கூடியதாயுள்ளது. அந்தளவுக்கு நிலைமையேற்பட்டிருந்ததை அரசு மறந்து விட்டது.
வடக்கே பாரிய படை நடவடிக்கையை ஆரம்பித்திருக்கும் அரசு அதன் விளைவுகளை விரைவில் உணரும். கிழக்கில் இடம்பெற்றது போல் வடக்கே போர் இருக்காதென்பது தெரிய வரும் போது காலம் கடந்து விட்டதென்பதை உலகமும் உணர்ந்து கொள்ளும்.
நடுக் கடலில் நடந்த சமர்
திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் மீண்டுமொரு தடவை கடுமையான கடற்சமர் மிக நீண்ட நேரம் நடைபெற்றுள்ளது.
வழமைபோல் கடற்புலிகளுக்கு பலத்த சேதமென்றும் கடற்படையினருக்கு எதுவித சேதமுமில்லையெனவும் கடற்படை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தக் கடற்சமர் மறுநாள் அதிகாலை 3.20 மணிவரை சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்றுள்ளது.
கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டு அதிலிருந்த 18 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் நான்கு படகுகள் பலத்த சேதமடைந்ததாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
தங்கள் தரப்பில் ஒரேயொரு கடற்படைச் சிப்பாய் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் டோரா பீரங்கிப் படகுகளுக்கு எதுவித சேதமேற்படவில்லையெனவும் கடற்படையினர் கூறுகின்றனர்.
சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற மிக மோசமான கடற்சமரில் கடற்படைக் கலங்களுக்கு சிறிது சேதம் கூட ஏற்படவில்லையெனக் கடற்படையினர் கூறுவது பெரும் ஆச்சரியமாகும்.
கடற்புலிகளுக்கு பலத்த சேதத்தை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக கடற்படையினர் கூறுவது உண்மையென்றால் டோரா பீரங்கிப் படகுகளில் அவர்கள் மிக நவீன பீரங்கிகளைப் பொருத்தியிருக்க வேண்டும். அதனால்தான் அவர்களால் புலிகளின் மூன்று படகுகளை அழிக்க முடிந்திருப்பதாகக் கருத வேண்டும்.
ஆனால் , சக்தி வாய்ந்த பீரங்கிகளைப் பொருத்திய 17 க்கும் மேற்பட்ட அதிவேக டோரா பீரங்கிப் படகுகளின் முன்னால் எவ்வாறு கடற்புலிகளின் படகுகள் ஐந்து மணி நேரம் தாக்குப் பிடித்திருக்க முடியும்.
கடற்படையினர் கூறுவது உண்மையென்றால் புல்மோட்டை கடற்பரப்புக்கு வந்த கடற்புலிகளின் 20 படகுகளும் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் கடற்புலிகள் கூறுவது போல் கடற்படையினரின் இரு டோரா பீரங்கிப் படகுகள் அழிக்கப்பட்டு ஒரு படகு பலத்த சேதமடைந்திருக்க வேண்டும்.
இதைவிடுத்து கடற்படைக் கலங்களுக்கு சிறுசேதம் கூட ஏற்படவில்லை என்றும் கடற்புலிகளுக்கே பலத்த சேத மேற்பட்டதாகக் கூறப்படும் ஐந்து மணி நேர கடற்சமர் குறித்து கடற்படையினர் கூறுவது ஆச்சரியமாயிருக்கிறது.
கடற்புலிகள் பலம் குறைந்த நிலையில் 5 மணி நேரம் கடற்படையினருடன் போரிட்டிருக்கமாட்டார்கள். தப்பிச் செல்லத்தான் முயன்றிருப்பர். ஆனால், அப்படி நடக்கவில்லை.
5 மணி நேரம் கடும் சமர் நடைபெற்றதால் கடற்புலிகள் கூறுவது போல் கடற்படை டோராப் படகுகளும் பலத்த சேதமடைந்திருக்கும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.
எனினும், அண்மைக்கால கடற்சமர்களில் தங்களுக்கேற்படும் இழப்புகள் குறித்து கடற்புலிகள் உண்மைகளை ஒப்புக் கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தச் சமரில் தங்கள் தரப்பில் இரு போராளிகளே கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
விதுரன்
|