|
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர மத்திய உளவுத்துறை சதி செய்கிறது என்றும் இதனடிப்படையிலே தமது கட்சியின் வெளியீட்டு அணிச் செயலாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நேற்றுவெள்ளிக்கிழமை தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
|
விடுதலை சிறுத்தைகள் வெளியீட்டு அணிச் செயலாளரும், "தமிழ் மண்" இதழின் பொறுப்பாசிரியருமான ஜெயராஜ் என்ற வன்னியரசுவை கடந்த 10 ஆம் நாள் விசாரணை என்ற பெயரில் கியூ பிரிவு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
பிறகு 11 ஆம் நாள் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், தவறான தகவலின் அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றிருக்கிறார் என்றும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததாக செய்திகள் பரவின. இந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர் உடனடியாக பிணையில் விடுதலை ஆகியுள்ளார்.
வன்னியரசு என்னும் பெயரில் நோர்வே நாட்டில் இருந்து அவருக்கு ஒரு பொதி கப்பல் மூலமாக வந்ததென்றும், அதில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் அதிவேக படகுகளுக்குரிய ஆற்றல் கொண்ட இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் இருந்ததாகவும், இதனால் வன்னியரசு புலிகளுக்கு தொடர்ந்து ஆயுதம் கடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் யூகத்தின் அடிப்படையில் மத்திய உளவுத்துறையினர் மற்றும் தமிழக கியூ பிரிவினர் மாறி மாறி தொடர்ந்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர் புலிகளுக்கு இவ்வாறான பொருட்களை இதற்கு முன் கடத்தியதாகவோ எந்த ஆதாரமும் கிடைக்காததனால் நோர்வேயில் இருக்கிற கோகுலனோடு தொலைபேசியில் பேசினார். அவர் விடுதலைப் புலிதான். ஆகவே விடுதலைப் புலிகளோடு தொடர்பில் இருக்கிறார் என்று வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆயுதங்களையோ அல்லது வேறு பொருட்களையோ கடத்தக்கூடியவராக இருந்திருந்தால் வன்னியரசு என்கிற தன்னுடைய பெயரிலேயே தான் தங்கியிருக்கிற வீட்டு முகவரிக்கே அனுப்பும்படி கோரி இருப்பாரா? ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளிநாட்டு நண்பரிடம் கோரியிருக்கிறார். அவர் வன்னியரசுவின் முகவரிக்கு அனுப்பி விட்டதாக தகவல் தந்ததன் அடிப்படையில் அதனைப் பெறச் சென்ற போது மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரிடம் பொதியை வழங்காமல் அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் தான் மத்திய உளவுத்துறையினரும் தமிழக கியூ பிரிவு காவல்துறையினரும், வன்னியரசுவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரை மிரட்டி வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
மேலும் அவர் மீது விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்று பொய்யான வழக்கை போட்டு இருக்கிறார்கள். வன்னியரசு தனது இயற்பெயரான ஜெயராஜ் என்கிற பெயரில் தான் கடவுச்சீட்டு பெற்றிருக்கிறார். அதனால் அவர் போலி கடவுச்சீட்டு பெற்றிருக்கிறார் என்பது பொய்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் மீது பழியைச் சுமர்த்தி தமிழக அரசுக்கு ஒரு நெருக்கடியை தர வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மத்திய உளவுத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இந்த சதிவலையை பின்னியுள்ளதாக தெரிகிறது.
ஈழ விடுதலைக்கு ஆதரவாக தார்மீக அடிப்படையில் வெளிப்படையாக ஆதரவு கொடுத்து வருவதாலும், சேது கால்வாய்த்திட்டம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் மத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சில மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலர் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்துக்கும் குறிப்பாக எனக்கும் அரசியல் ரீதியான நெருக்கடியைத் தர வேண்டும் என்று செயற்படுவதாக தெரிகிறது. இதனை நாங்கள் முறியடிப்போம். வன்னியரசு மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
நெருடல் இணையம்
|