பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow தமிழர் தரப்பு திட்டமிட்டுத் தயாராகவேண்டும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழர் தரப்பு திட்டமிட்டுத் தயாராகவேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 05 October 2005

அமைதி முயற்சிகள் ஆரோக்கியமான திசையில் நகர்வதற்கான அறிகுறிகள் சமிக்ஞைகள் தென்னிலங்கையிலிருந்து கிடைப்பனவாக இல்லை. யுத்தம் நிறுத்தப்பட்டு, போர் ஓய்ந்துள்ள தற்போதைய நிலையிலும் பாதுகாப்புத்துறைகளுக்கென முப்படையினர் மற்றும் பொலீஸாருக்கென இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துவரும் நிதியின் தொகை வருடாவருடம் கூடி வருகின்றது.

யுத்தம் நிறுத்தப்பட்டுள்ள இந்த மூன்றரை ஆண்டு காலத்திலும் ஆண்டுதோறும் பாதுகாப்புச் செலவினம் கூடிவருவது, தொடர்ந்தும் தனது யுத்தக் கட்டமைப்பை வலுப்படுத்தி, தீவிரப்படுத்தித் தன்னை போர்த்தயார் நிலையில் வைத்திருப்பதில் இலங்கை அரசு விடாப்பிடியாக இருக்கின்றது என்பதையே காட்டி நிற்கின்றது. இந்த வருடம் பாதுகாப்புச் செலவினத்துக்கென ஐயாயிரத்து 630 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது, அடுத்த ஆண்டில் ஆறாயிரத்து 947 கோடி ரூபாவாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதாவது, ஆயிரத்து 317 கோடி ரூபா அடுத்த ஆண்டில் அதிகம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இது பாதுகாப்புச் செலவினத்தில் கால்பங்கு சுமார் 24 வீத அதிகரிப்பு. இதுதவிர, மேலும் தேவைப்பட்டால் குறைநிரப்பு பிரேரணை மூலம் மேலதிக நிதி அடுத்த ஆண்டிலும் ஒதுக்கப்படும்.ஒருபுறம் தமிழர்களின் நியாயமான அபிலாஷை களைப் பூர்த்திசெய்யும் அமைதித் திட்டத்துக்கு எதிரான பௌத்த, சிங்களப் பேரினவாதிகள் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி, அரசுத் தரப்பு வேட்பாளரின் பின்னால் அணிதிரளுகின்றனர். மறுபுறம் யுத்த ஆயத்தத்துக்கான முஸ்தீபாக பாதுகாப்புச் செலவினம் எக்கச்சக்கமாக அதிகரிக்கப்படுகின்றது. இவை எதிர்காலம் குறித்து நல்ல சமிக்ஞைகளைத் தருவனவாக இல்லை. 2001இற்கு முன்னர் இடம்பெற்ற கொடூரயுத்தம் காரணமாக இலங்கை நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான கட்டத்தை அடைந்திருந்தது.


இந்நிலையில் வேறு வழியின்றி அமைதி வழித்தீர்வுக்கு முன்வந்து அதன்மூலம் யுத்தநெருக்குவாரத்தைத் தணிக்க வழிசெய்தது கொழும்பு அரசு. ஆனால், அந்த அமைதி முயற்சியின்போது ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கான எத்தனங்களில் தென்னிலங்கை அரசு இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை. மாறாக, ஒருபுறம் சமாதானம், அமைதித்தீர்வு என்றெல்லாம் பேசிக் கொண்டு, அதன்மூலம் கிடைக்கும் இடைவெளியில் நாட்டின் பொருளாதார நிலையை ஓரளவு வளப்படுத்தி, அதனால் கிடைக்கும் மூலவளங்களை அடுத்த யுத்தத்தை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளுக்குப் பயன்படுத்துகின்றது அரசு. அதையே கடந்த மூன்று ஆண்டுகால வரவு செலவுத் திட்டங்களும் அவற்றின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளும் எமக்குக் காட்டுகின்றன. அதாவது, வெளியே சமாதான முகமூடியை அணிந்து கொண்டு உள்ளே யுத்தத்துக்கான தயார்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் தென்னிலங்கை அரசு, மறுபுறத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளே அவ்வாறு இரட்டை வேடம் போடுகின்றார்கள் என சர்வதேச ரீதியிலான பிரசாரத்தையும் நடத்தி வருகின்றது.

ஈழத்தமிழர் தலைமையிடம் இப்போது வலிமையான போரியல் பலம் இருக்கிறது. இராணுவ வலிமை உள்ளது. மக்களின் பேராதரவு உள்ளது. இவை எல்லாவற்றையும் விட தமது தாயகத்தில் தங்களைத் தாங்களே ஆளும் ஒரு நிழல் அரசுக்கு தேசத்துக்கு உரிய நிர்வாகக் கட்டமைப்பும் அவர்களிடம் உள்ளது. இவற்றுக்கு அப்பால் தமிழர் தரப்புக்கு அடிப்படைத் தேவையான அம்சங்களில் ஒன்று இல்லாமை பெருங்குறைபாடாக இருக்கிறது. அதுவே தமிழர்களுக்கு இப்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச பிரசாரத்துக்குரிய கட்டமைப்பை தமிழர் தரப்பு மேலும் மேலும் மேம்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்கான தார்மீக நிலையைத் தமிழர்கள் எட்டவேண்டியுள்ளது. அதுதான் இப்போதுள்ள குறைபாடு. தமது விடுதலைப் போராட்டத்தில் உள்ள நியாயங் களை தமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை சர்வ தேச மட்டத்தில் தமிழர்கள் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு கள், ஒரு சில சம்பவங்களினால் தகர்ந்து போய்விடுகின்றன அல்லது தகர்ந்து போய்விட்டன.

அந்த நிலைமையை கொழும்பு அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒருபுறம் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு சர்வதேச ரீதியில் சேறு பூசிக்கொண்டு, மறுபுறம் தனது போர் ஆயத்தப் பணிகளை மூடி மறைத்துக் கொள்கின்றது. இவ்வாறு, கொழும்பு அரசுக்கு சாதகமாக அமைந்த சம்பவங்களில் இருந்து பாடம் படித்துக்கொண்டு, பட்டறிவைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தந்திரோபாயமாக நடந்துகொள்வதற்கான உத்திகளை தமிழர் தரப்பு வகுத்துக் கொள்ளவேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம் தமிழரின் போராட்டத்துக்கு தவறான முறையில் சேறுபூசும் கொழும்பு அரசின் முயற்சியை முறியடிக்கலாம்; சர்வதேச சமூகத்தையும் எமக்கு சார்பாகத் திருப்பலாம்; அது மட்டுமல்ல கொழும்பு அரசின் இனவாதத் தீவிரமுடைய யுத்த சார்புப் போக்கையும் அம்பலப்படுத்தி அதன் முகமூடியை கிழிக்க முடியும். அத்தகைய தந்திரோபாய அணுகுமுறைக்குத் தமிழர் தரப்பு திட்டமிட்டுத் தயாராகவேண்டும். விடுதலைப்பாதையில் முக்கால் பங்கு கடந்தவர்கள் முழுப்பங்கையும் கடப்பதற்கு, தமது அனுபவங்களை பட்டறிவாகக் கொண்டு, உத்திகளை மாற்றி, தந்திரோபாயங்களை மேலும் செழுமைப்படுத்தி செயற்படுவது அவசியமாகும்.


nitharsanam
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..