பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow அரசியல் தீர்வு பற்றிய அமெரிக்க போதனையும் இராணுவ உதவியும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அரசியல் தீர்வு பற்றிய அமெரிக்க போதனையும் இராணுவ உதவியும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 10 November 2007

இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை வழங்குவதென்பது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. உள்நாட்டுப் போர் வரலாற்றில் இலங்கைக்கு இராணுவ உதவிகளைச் செய்துகொண்டிருக்கும் வல்லாதிக்க நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் விளங்குகிறது.

ஆனால், இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வைக் காண்பது சாத்தியமானதேயல்ல என்று அடிக்கடி கூறுகின்ற இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளேக் நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருகோணமலை கடற்படைத் தளத்தில் வைத்து அதி நவீன ராடார் கருவிகளையும் ரோந்துப் படகுகளையும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் கையளித்த வைபவம் அமெரிக்காவின் இராணுவ உதவிகள் பற்றி மீண்டும் எமது கவனத்தைத் தூண்டியிருக்கிறது. இலங்கையின் கடல் வலய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அமெரிக்கத் தூதுவர் அந்த வைபவத்தில் அறிவித்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பிளேக் தெரிவித்திருந்த கருத்துகளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்குமென்று நம்புகின்றோம். `கடந்த பல மாதங்களாக இலங்கை அரசாங்கம் முக்கியமான சில வெற்றிகளைச் சாதித்திருக்கிறது. கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றியமையும் அண்மையில் விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை நடுக்கடலில் மூழ்கடித்தமையும் வேறு பல சம்பவங்களும் முக்கியமான இராணுவ வெற்றிகளைக் குறிக்கின்றன. ஆனால், இந்த இராணுவ வெற்றிகள் இராணுவ வழிவகைகளின் ஊடாக நெருக்கடியை வெற்றி கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை வளர்க்கும் வகையிலான ஆசையை அரசாங்கத்துக்கு ஊட்டக்கூடாது' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வு முயற்சிகள் பற்றிப் பேசிக் கொண்டு இராணுவ வழிவகைகளின் ஊடாக இன நெருக்கடியை வெற்றிகொள்ள முடியுமென்ற நம்பிக்கையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக பெருமளவில் இராணுவ உதவிகளைச் செய்துகொண்டு இராணுவத் தீர்வு சாத்தியமானதேயல்ல என்று போதனை செய்வதில் இருக்கக்கூடிய அபத்தத்தை அமெரிக்கத் தூதுவர் புரிந்துகொள்வார் என்று நாம் நம்பவில்லை.

இராணுவத் தீர்வில் நம்பிக்கை வைக்காதிருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தைத் தூண்டக்கூடிய அல்லது நிர்ப்பந்திக்கக்கூடிய நடவடிக்கைகளை அமெரிக்கா உட்பட வல்லாதிக்க நாடுகள் மேற்கொள்ளத் தவறியதன் விளைவாகவே இன்று இலங்கை நிலைவரம் முன்னென்றுமில்லாத அளவுக்குப் படுமோசமாக சீர்குலைந்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்தை சமாதான பேச்சுவார்த்தைகளுக்குப் போகுமாறு தூண்டுவதுபோல காட்டிக்கொண்டாலும், உண்மையில் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களினால் விடுதலைப் புலிகள் பலவீனமடைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பையே அமெரிக்கா கொண்டிருக்கிறது என்ற உண்மை புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் அரசியல் மற்றும் இராணுவ நிகழ்வுப் போக்குகள் மேலும் படுமோசமான சீரழிவுத் திசையில் சென்றுகொண்டிருப்பதை தடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் முன்னரங்கப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற வல்லாதிக்க நாடுகள் எதையுமே உருப்படியாகச் செய்யுமென்று தமிழ் மக்கள் இனிமேலும் எதிர்பார்ப்பது விவேகமானதல்ல.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..