|
மாவீரர் தினத்துக்கு முன் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குதல் எதுவும் நடத்தலாமென அரசு கருதுகிறது. அவ்வாறானதொரு தாக்குதல் மூலம் புலிகள் பாரிய வெற்றிகள் எதனையும் பெற்றுவிடக் கூடாதென்பதில் அரசு மிகவும் அக்கறையாக உள்ளது.
புலிகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் தெற்கில் அரசின் எதிர்காலத்திற்கு ஆபத்தாகி விடுமென்பதால் இந்த அரசின் இன்றைய மூலதனம் யுத்தத்திலேயே உள்ளது.
வடபோர் முனையில் படையினர் தற்போது இரு பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்த வாரம் வரப்போகும் புலிகளின் மாவீரர் தினத்திற்கும் வடக்கே பெய்துவரும் மழைக்கும் படையினர் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
மாவீரர் வாரத்தில் புலிகள் எங்காவது பாரிய தாக்குதலை நடத்தி பெருவெற்றி பெற்றுவிடலாம். கடும் மழை பொழிவதால் புலிகளுக்கெதிராக பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலையென இரு பெரும் நெருக்கடிகளைப் படையினர் சந்திக்கின்றனர். இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்காகவே வடக்கே தற்போது படையினர் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வடக்கே, வன்னியில் அல்லது மணலாறில் அல்லது யாழ்.குடாவில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தலாமென படையினர் எதிர்பார்க்கின்றனர். இதனால், புலிகளின் திடீர் தாக்குதல்கள் நடைபெறலாமெனக் கருதப்படும் பகுதிகளில் படையினர் தினமும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தங்கள் முன்னரங்க நிலைகள் மீது புலிகளே தாக்குதல்களை நடத்துவதாக படையினர் கூறிக்கொண்டு தாங்களே புலிகளின் நிலைகள் மீது தினமும் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். புலிகளுக்கெதிரான பாரிய நடவடிக்கைகள் சாத்தியப்படாதென்பதை படையினர் உணர்ந்துள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களிலும் சிறுசிறு குழுக்களாகவும் சென்று புலிகளின் பகுதிகளில் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
புலிகளின் பாரிய தாக்குதல்கள் இடம்பெறலாமெனக் கருதப்படும் இடங்கள் மீது தொடர்ச்சியாகவும் இடைவிடாதும் ஆட்லறி ஷெல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. புலிகள் பாரிய தாக்குதலொன்றை நடத்துவதற்கு அவகாசமோ அல்லது வாய்ப்போ கொடுக்காத விதத்தில் வடக்கே சகல பகுதிகளிலும் படையினரின் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
புலிகள் தாக்குதல் சமரொன்றில் ஈடுபடும் நிலையிலிருந்து தங்களை தற்காப்பு நிலைக்குள் வைத்திருக்கும் நோக்கிலேயே படையினர் தினமும் வன்னியிலும் யாழ். குடாநாட்டிலும் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீதும், அவர்களது விநியோகப் பாதைகள் மீதும், அவர்கள் ஒன்று திரளும் இடங்கள் மீதும் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல்களையும் மோட்டார் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
அதேநேரம், வன்னிக்குள் புலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அவர்களது போர்த் தயாரிப்புக்களை குழப்பும் விதத்திலும் தினமும் விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் விமானத் தாக்குதலொன்றில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமையானது விமானப் படையினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான மேலும் பல தாக்குதல்கள் மூலம் புலிகளின் ஏனைய தலைவர்களையும் தளபதிகளையும் இலக்கு வைக்க முடியுமென்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. புலிகள் இதுவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தாதது வன்னிக்குள் விமானப் படையினரின் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
போர் விமானங்கள் ஒன்று இரண்டாவது புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால் வன்னிக்குள் விமானப்படையினரின் தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்திருக்கும். தாக்குதல் நடத்த முற்படும்போது ஏவுகணை குறித்த அச்சத்தில் விமானிகளும் இலக்குகளை தவறவிடும் வாய்ப்புள்ளது. ஆனால், புலிகளிடமிருந்து இதுவரை எவ்வித அச்சுறுத்தலுமில்லாததால், தாக்குதல் நடத்தாவிடினும் புலிகளை மிரட்டும் நோக்கிலும் போர் விமானங்கள் அங்கு பறந்து திரிகின்றன.
இதுவரை காலமும் இல்லாவிட்டாலும் தமிழ்ச்செல்வனின் இழப்பின் பின்னாவது விமானப்படை விமானங்கள் வன்னி வான் பரப்புக்குள் நுழைவதை தடுக்க வேண்டுமென்ற எண்ணம் புலிகளுக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் அங்கு மேலும் பல தாக்குதலுக்கு விமானப் படையினரை உற்சாகப்படுத்தும் அதேநேரம் போர் விமானங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களின் அவசியத்தையும் புலிகளுக்கு இது உணர்த்தியிருக்கும்.
மாவீரர் தினத்துக்கு முன் சில வெற்றிகளைப் பெற புலிகள் முனையக்கூடுமென படையினர் எதிர்பார்க்கின்றனர். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், அநுராதபுரம் விமானப்படைத்தளத்தில் ஏற்பட்ட பெரும் தோல்வியை பெரும்பாலும் மூடி மறைத்துவிட்டது. அநுராதபுரத்தில் படையினருக்கு பெருந்தோல்வி ஏற்பட்டாலும் அதற்கப்பால் புலிகளின் முக்கிய தலைவர்களைக் கூட மிகத் துல்லியமாக இலக்கு வைத்துத் தாக்கும் ஆற்றல் விமானப் படையினரிடமுள்ளதென்றதொரு தோற்றப்பாட்டை இத்தாக்குதல் தென் பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
விமானப் படையினரின் எத்தனை விமானங்களைப் புலிகள் அழித்தாலும் சரி அவற்றை மீளப்பெற்றால் புலிகளின் தலைவர்களை அழித்துவிடும் ஆற்றல் விமானப் படையினரிடம் உள்ளது போன்றதொரு நிலையை தெற்கில் அரசும் படைத்தரப்பும் ஏற்படுத்த முற்படுகின்றனர்.
அத்துடன், தெற்கே விமானப்படைத்தளங்களுக்கு வந்தால் மட்டுமே புலிகளால் இந்த விமானங்களை அழிக்க முடியுமென்றும் வன்னிக்குச் செல்லும் விமானங்களை அவர்களால் அழிக்க முடியாதென்ற எண்ணமும் தென்பகுதி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வன்னியில் விமானப் படையினர் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். உளவு விமானங்கள் 24 மணிநேரமும் பறந்து புலிகளின் நடமாட்டங்கள் குறித்த தகவல்களைத் திரட்ட முற்படுகின்றன. இதனால் புலிகளின் படையணிகளின் நகர்வுகளை பகல் வேளைகளில் மேற்கொள்வதில் புலிகளும் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.
போர் முனைகளில் புலிகள் பெருமெடுப்பில் ஒன்று திரள்வதைத் தடுப்பதற்கான தீவிர முயற்சிகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான படை முகாம்களில் ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் குவிக்கப்பட்டு புலிகள் ஒன்றுகூடும் இடங்கள் நோக்கி தொடர்ச்சியாக கடும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.
வன்னியில் அல்லது யாழ். குடாநாட்டில் பாரிய படை நகர்வுகளை மேற்கொள்வதில் படையினர் புதிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். வவுனியா முதல் மன்னார் வரையான முன்னரங்க காவல் நிலைகளிலிருந்தென்றாலும் குடாநாட்டில் முகமாலை முன்னரங்க நிலைகளிலிருந்தென்றாலும் மேற்கொள்ளப்படும் பாரிய படைநகர்வுகள் அனைத்தும் படுதோல்விகளைச் சந்திக்கலாமென்றதொரு அச்சம் படையினருக்கேற்பட்டுள்ளது.
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பல அடுத்தடுத்து அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு பெரும் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறிவந்தாலும் ஒவ்வொரு பெரும் சமர்களின் போதும் புலிகள் ஷெல்களையும், மோட்டார் குண்டுகளையும் மழைபோல் பொழிந்து நடத்தும் தாக்குதல்கள் படையினருக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.
புலிகளுக்கு பெரும் ஆயுதப் பற்றாக்குறையேற்பட்டுள்ளதால் அந்தப் பற்றாக்குறையை நீக்குவதற்காக புலிகள் சமாதானப் பேச்சுக்களுக்குச் சென்று கால அவகாசமொன்றை பெற்று அந்தக் காலப்பகுதியில் தங்களைக் கட்டியெழுப்ப முற்படக்கூடுமென அரசு நம்புகிறது. ஆனால், புலிகளோ, தங்கள் கை ஓங்காமல் பேச்சுவார்த்தைக்கு செல்லமாட்டார்களென்பது நிச்சயம். அதேநேரம் ஒவ்வொரு கடும் சமரின் போதும் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் குறித்தும் படைத்தரப்பு ஆச்சரியமடைந்துள்ளது.
புலிகளைத் தற்காப்பு நிலையில் வைத்திருப்பதே அவர்களது பாரிய தாக்குதல்களைத் தடுக்க ஒரே வழியென படையினர் கருதுகின்றனர். அவர்கள் பாரிய தாக்குதலை நடத்துவதற்கேற்ப கால அவகாசம் வழங்கிவிட்டால் அது தங்களுக்கு பேராபத்தாகி விடுமென்பதையும் படையினர் உணர்ந்துள்ளனர். இதனால், தங்கள் முன்னரங்க நிலைகளை நன்கு பலப்படுத்தியவாறு புலிகளின் நிலைகள் மீதும் அதற்கப்பால் குறிப்பிட்ட தூரம் வரையும் பலத்த ஷெல் தாக்குதல்களை நடத்தி புலிகளை அணிதிரளவிடாது தடுத்து தங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்த்து வருகின்றனர்.
யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை கிளாலி - முகமாலை - நாகர்கோவில் முன்னரங்க நிலைகளை அதிக உச்சளவில் படையினர் பலப்படுத்தியுள்ளனர். கிளாலி, மற்றும் முகமாலைக்கு பின்னாலுள்ள எழுதுமட்டுவாள் பகுதியிலும் படையினரின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மிகவும் பலம் வாய்ந்தவை. தற்காப்புச் சமருக்கு அவை மிகவும் ஒடுங்கலான, வாய்ப்பான பகுதிகளாயிருப்பதால் அவற்றை ஊடறுப்பதென்பது புலிகளுக்கும் பெரும் சவாலாகவேயுள்ளது.
கிளாலி, முகமாலைப் பகுதியிலும் முன்னரங்க காவல் நிலைகளை படையினர் மிகவும் வலுவாக அமைத்து அதனைப் புலிகள் ஊடறுக்க முயன்றால் அவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆட்லறிகள், மோட்டார்கள் மற்றும் பல்குழல் ரொக்கட் செலுத்திகளைத் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
படையினர் முகமாலையிலிருந்து தங்கள் பகுதிக்குள் முன்னேறுவதைத் தடுக்க புலிகள் பல்வேறு யுத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
மிகவும் குறுகலான அந்த நிலப்பிரதேசத்தில் தாக்குதல் சமரை நடத்துவது மிகவும் கடினமானது. அது தற்காப்புச் சமருக்கே வாய்ப்பான பிரதேசமாகும். இதனாலேயே, முகமாலையில் கடந்த வருடமும் கடந்த வாரமும் படையினர் மேற்கொண்ட பாரிய படைநகர்வுகளை புலிகள் மிக இலகுவாக முறியடித்தனர்.
கிளாலி மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளைத் தகர்த்து புலிகள் உள்ளே நுழைந்துவிட்டால் அவர்களை எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலைகளில் தடுத்து நிறுத்திவிட முடியுமென படையினர் நம்புகின்றனர். கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் புலிகள் முகமாலையில் பாரிய தாக்குதலைத் தொடுத்த போது அவர்களால் முகமாலை முன்னரங்க நிலைகளை தகர்த்தழித்துக்கொண்டு உள்ளே நுழைய முடிந்தது.
ஆனால், அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலைகளைத் தகர்த்தழிக்க முடியவில்லை. அதனைப் புலிகள் அழித்து உள்ளே புகுந்திருந்தால் அதற்கப்பால் புலிகளைத் தடுத்து நிறுத்துவதென்பது படையினருக்கு முடியாத காரியமாகியிருக்கும். இவ்வாறானதொரு நிலையில் கிளாலி பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் படையினர் உடனடியாகவே பின்வாங்க வேண்டியதொரு நிலையேற்பட்டிருக்கும்.
இதனால், முகமாலையில் புலிகளின் பிரதேசத்திற்குள் படையினர் நுழைவதோ அல்லது படையினரின் பிரதேசத்திற்குள் புலிகள் நுழைவதோ மிகவும் கடினமானதொன்றாகவேயுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமானால் ஆட்பலத்தையும் ஆயுத பலத்தையும் பெரிதும் அதிகரித்து பாரிய தாக்குதல்களை நடத்த வேண்டியிருக்கும். இதனை இரு தரப்பும் நன்குணரும். இதனால் தான் அண்மையில் முகமாலையில் படையினர் பாரிய தாக்குதலை நடத்தியபோது ஒரு போராளியை மட்டுமே இழந்து படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி புலிகள் அந்தப் படை நடவடிக்கையை முறியடித்தனர்.
வடக்கில் பெரும் தாக்குதலை நடத்த படையினர் திட்டமிட்டு வந்தாலும் மழை காலம் முடியும் வரை பொறுத்திருக்கவே முனைவர். முகமாலையைவிட வவுனியா அல்லது மன்னாரில் அல்லது மணலாறில் பாரிய தாக்குதலைத் தொடுப்பதன் மூலம் புலிகளுக்கு நெருக்கடியை கொடுக்க முயலலாம். இதனை எதிர்கொள்ள புலிகளும் தயாராயிருப்பதால், பாரிய படை நடவடிக்கையின் ஆரம்பத்திலேயே படையினர் பலத்த இழப்புக்களைச் சந்திப்பார்களானால் அது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகிவிடலாம்.
இந்தச் சூழ்நிலையில் மாவீரர் வாரத்திலும் மாரிகாலம் முடிவடையும் வரையிலும் படையினர் மிகக் கவனமாயிருப்பர். புலிகள் பாரிய தாக்குதல்கள் நடத்துவதைத் தடுப்பதற்காக படையினர் தொடர்ச்சியாக கடும் தாக்குதல்களை நடத்துவர். சிறுசிறு குழுக்களாகச் சென்று புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதலை நடத்துவர்.
இதனால், இந்தவாரம் முழுவதும் வடக்கே போர்முனையில் 24 மணிநேரமும் மோதல்கள் இடம்பெறப் போகிறது. புலிகளின் பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெறப்போகிறது. வன்னியில் விமானத் தாக்குதல்களும் தீவிரமடையப்போகிறது.
விதுரன்
|