|
அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கவும், சமாதான முயற்சிகளை முன்நோக்கி நகர்த்தவும் இணைத் தலைமை என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நோர்வேக்கு உதவும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 26 ஆம் திகதி வெளியிட்ட தீர்மானம் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஆளானது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகளில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை அனுமதிப்பதில்லையென எடுக்கப்பட்ட தீர்மானம் இலங்கை ஊடகத்துறையில் பல்வேறு சாதக பாதகமான நிலைப்பாடுகளின் கீழ் நோக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரகடனமானது நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு எனவும் படு தோல்வி எனவும் பேரினவாத சார்பு ஊடகங்கள் விமர்சித்தன. இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதுடன் இவை முற்று முழுதாகத் தவறானவை எனவும் நோர்வேயின் செயற்பாட்டுக்கு தாங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் நோர்வேயின் பங்களிப்பான இரு தரப்புகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளல், ஒரு பொதுப்படையான நிலைப்பாட்டை அடைவதற்கு அவர்களுக்கு உதவி புரிதல், இலங்கையைத் தொடர்ந்தும் வருத்தும் இனப்பிரச்சினைக்கு நீடித்த நியாயமான தீர்வு எட்டுவதற்கு செயற்படுதல் ஆகிய நோக்கங்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையிலும் இலங்கையில் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான பாதுகாப்பான சூழல் இல்லாமையினால் வெளி நாடொன்றிலேயே பேச்சுக்களை தொடர வேண்டுமென தமது விருப்பத்தை தெரிவித்துள்ள சூழலிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்படிப் பிரகடனமானது தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளில் கொண்டுள்ள ஆர்வத்தை பின்னடையச் செய்வதாக தமிழ் பேசும் மக்களும் தமிழ் தேசிய ஊடகங்களும் தொடர்ச்சியாக எடுத்துக் காட்டி வந்தன. இதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பல்வேறு தடைகளை கொண்டு வரவேண்டுமென்ற சிங்கள கடும் போக்காளர்கள் ஐரோப்பிய யூனியன் மீது பல்வேறு வற்புறுத்தல்களை மேற்கொண்டு வந்த நிலையில் சமாதானத்தின் மீது உண்மையான ஆர்வம் கொண்டுள்ள நோர்வே கடந்த காலங்களில் அதனை தடுத்து நிறுத்தி இலங்கையில் அமைதிச் சூழல் நீடிக்க வழிகோலியது என்பதனையும் மறந்து போக முடியாது. இவ்வாறானதோர் பின்னணியில் கடந்த 26 ஆம் திகதி ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட பிரகடனமானது தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்கும் அதிருப்திக்கும் ஆளானதுடன் ஐரோப்பிய யூனியனின் சமாதான முயற்சிகளில் சந்தேகங்கொள்ளவும் செய்துள்ளது. முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் பின்னணியில் இனவாதம் மிக மோசமாக கக்கப்பட்டு வருவதுடன் சிறுபான்மையின மக்களை ஓரங்கட்டும் முயற்சிகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை சற்றும் உணராத வகையில் சமாதான முயற்சிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையும் தத்தளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஐரோப்பிய யூனியனின் பிரகடனமானது பேரினவாதிகளுக்கு தீனி போடுவதாக அமைந்திருப்பதாக இந்த நாட்டின் சமாதான விரும்பிகள் மிகவும் மனம் நொந்து கூறி வந்தனர். அத்துடன் சமாதானத்தின் மீது உண்மையான அக்கறையுடைய சர்வதேச நாடுகள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்க வேண்டுமெனவும் குரல் எழுப்பி வருகின்றன. இவ்வாறான சூழலில் சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு சகல வழிகளிலும்நோர்வேக்கு உதவ தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளமை சமாதானத்தை நேசிக்கும் இந் நாட்டு மக்கள் மத்தியில் சற்று அமைதியைத் தோற்றுவித்துள்ளது. இலங்கையில் சமாதானம் ஏற்பட சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குவதாக சர்வதேச நாடுகள் ஒரே விதமான பல்லவியை பாடுவதும் அதற்கேற்ப பேச்சுக்களை மீள ஆரம்பிக்க தாங்கள் தயாராக இருப்பதாக மறு புறம் அரசாங்கம் ஒரே தாளத்தை போடுவதும் வழமையாகிவிட்டது. இதனால் தமிழ் பேசும் மக்கள் மிகுந்த விரக்திக்கும் வேதனைக்கும் ஆளாகி வருகின்றனர். அத்துடன் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறும் ஐரோப்பிய யூனியன் ஏன் புலிகளின் பிரதிநிதிகள் சமாதான நடவடிக்கைகளின் பொருட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்ற ஆர்வம் சர்வதேச நாடுகளுக்கு உண்மையிலேயே இருக்குமானால் பேச்சுவார்த்தை மேடைக்கு இருதரப்பினரையும் கொண்டு வருவதற்கான சம அழுத்தங்களைப் பிரயோகிப்பதுடன் பேச்சுக்கள் வெற்றியடைவதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும். மாறாக பேச்சுக்களுக்கு ஆதரவளிப்பதாக வெறுமனே கூறுவதில் எந்தவித பயனுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதே வேளை பல்வேறு நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துவரும் தமிழ் பேசும் மக்களின் நியாயமான அடிப்படை உரிமைகளை பேரினவாதிகள் மேலும் மோதி மிதிக்கும் வகையிலான சூழலுக்கு சர்வதேச நாடுகள் துணை போகக் கூடாது என்பதே தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். virakesari
|