|
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு,ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை யால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை வழமைக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசிய பேச்சால் காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசின் உளவுப் பிரிவும் கொதித்துப் போயுள்ளது.
காங்கிரஸ் தலைவர்களையும் மத்திய அரசின் உளவுப் பிரிவையும் ஒரே நேரத்தில் உ~;ணமாக்கும் விதத்தில் பிரபாகரன் பேசியதுதான் என்ன? மத்திய அரசின் உளவுப் பிரிவான 'ரோ' அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார் அவர்.
'தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து முதல்வர் வெளியிட்ட இரங்கற் பா, அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேசமடைந்து புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தினார். மேலும், காங்கிரஸ் காரியக் குழுக் கூட்டத்திலும் புலிகளின் ஆதரவு நிலையைக் கண்டித்து தீர்மானம் போடப்பட்டது.
அதன் பிறகும் தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிப்பது தொடர்ந்ததே தவிர, முற்றிலுமாக நின்றபாடில்லை. அதனால்தான், மத்திய இணையமைச்சர் இளங்கோவன், புலிகளுக்கு ஆதரவான பாதாகைகளை அப்புறப்படுத்த வேண்டுமென எச்சரித்தார். ஆனால், அவரது உருவப் பொம்மையே தூக்கிலிடும் அளவிற்கு புலிகளின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டியதைப் பற்றிய விவரம் மத்திய அரசுக்குச் சென்றவுடன் கவலையடைந்த மத்திய அரசு தனது அதிருப்தியை மாநில அரசுக்கு தெரிவித்தது.
அதன் எதிரொலியாகத்தான் கடந்த 26ம் திகதி அவசர அவசரமாக தமிழக பொலிஸ் இயக்குநர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். 'இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.' என்று அவர் கடுமையாக எச்சரித்ததன் விளைவாக தமிழகத்தில் புலிகள் ஆதரவுக் குரல்கள் அமைதியாகின.
ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்பு தமிழ்நாட்டில் அடங்கியிருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலை இப்போது வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் நிலைக்கு வந்தது தான் மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நேரத்தில் தான் புலிகள் அமைப்பு கடைப்பிடிக்கும் மாவீரர் தினமான நவம்பர் 27 ல் பிரபாகரன் என்ன பேசுகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தோம். கடந்தாண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு தனது பேச்சில் பிரபாகரன் தமிழ் நாட்டில் புரட்சியை உருவாக்கும் விதத்தில் இந்திய அரசைக் குறைகூறும் விதமாகவும் பேசியதுதான் மத்திய அரசைக் கவலையடைய வைத்தது.
பிரபாகரன் தனது பேச்சில் 'எமது மக்களின் இந்த நீதியான, நியாயாமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்கள தேசம் தொடாந்தம் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. மாறாக, எம் மண் மீதும் மக்கள் மீதும் பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வருகிறது. அறுபது ஆண்டு காலமாக அநீதி இழைக்கபட்டு அடக்கு முறைக்கு ஆட்பட்டு சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதி வாழ்வுமாக எம் மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவொரு அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு பாராமுகமாகச் செயற்படுகின்றது' என்று பேசியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பிரபாகரன் பேசியதுதான், தனிநாடு என்ற கோரிக்கையை தமிழ்நாட்டுத் தலைவர்கள் மறந்தே போய்விட்ட இந்த நேரத்தில் தமிழர்களுக்கென்று தனிநாடு உருவாக வேண்டுமென்ற பிரிவினை வாதத்திற்கு விதை தூவும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது என்பதுதான் மத்தி அரசை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
'பூமிப்பந்தெங்கும எண்பது மிலியன் (எட்டுக் கோடி) தமிழர் பரந்து வாழ்ந்த போதும் எமக்கென ஒரு நாடு இல்லாமமையால்தான் இந்தப் பரிதாப நிலைக்கு, இந்த மோசமான நிலைகமைக்கு காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவு கூறும் இன்றைய எழுச்சி நாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளாந்தெழுமாறு வேண்டிக் கொள்கிறேன்' என்று பேசியுள்ளார் பிரபாகரன்.
'எட்டுக்கோடி தமிழர்கள் என்று அவர் கூறுவது இந்தியாவிலுள்ள தமிழர்களையும் சேர்த்துத் தான் என்கிறபோதுதான் இந்தப் பேச்சின் மூலம் இந்தியா இறையாண்மைக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்று மத்திய அரசு கவலையுடன் பிரபாகரனின் பேச்சை ஆராய்ந்து வருகிறது' என்றார்.
பிரபாகரனின் இந்தப் பேச்சுக் குறித்தும் மத்திய ஜவுளித்துறை இணயமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம். நடாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்படடிருந்த போதும் பேசினார்.
'இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்ற எங்களுக்கு பிரபாகரன் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இங்கே நிம்மதியாக நாட்டுணர்வோடு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பற்றுகின்ற உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் இந்திய நாடு என்பது ஒரே நாடு. இதில், பல்வேறு கலாசாரங்கள், பலவேறு இனங்கள், பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் கூட நாங்கள் எல்லோரும் இந்தியர்கள் தான்.
இந்தியா இன்றைக்குப் பொருளாதார வளர்ச்சி பெற்று உலகத்திலேயே மிகச் சிறந்த நாடாக வருவதற்கான இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் அவருக்குத் தேவையில்லை.
இந்த நேரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கும் பாராட்டு தெரிவித்ததாக வேண்டும். புலிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி பல இடங்களில் காங்கிரஸ்காரர்கள் போராட்டங்களும் வீதி மறியல்களும் நடத்தியதன் பயனாக தமிழக அரசு இன்றைக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களைக் கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று சொல்லியும் விளம்பரங்கள் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக என் நெஞ்சார்ந்த நன்றிகளை தமிழக அரசுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
நன்றி : குமுதம் ரிப்போட்டர்.
ஒரு மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கக் கூட மத்திய அரசின் உத்தரவைப் பெறவேண்டிய அவலத்தில் தமிழரின் சுதந்திரம் அங்கு கொடிகட்டிப் பறக்கிறது. ஜெய் ஹிந்த்
நெருடல் இணையம்
|