|
|
|
அரசை ஜே.வி.பி. காப்பாற்றியது ஏன்? |
|
|
|
Sunday, 16 December 2007 |
|
வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஒருவாறு அரசு தப்பிப்பிழைத்துவிட்டது. 47 பெரும்பான்மை வாக்குகளால் அரசு வெற்றிகண்டதாக பெருமை கொண்ட போதிலும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது ஜே.வி.பி.யின் ஒத்துழைப்பு இன்றி 118 வாக்குகளை பெற்றுக்கொண்டுவிட்டு மூன்றாவது வாசிப்பில் ஜே.வி.பி. ஒதுங்கி நின்று ஆதரவளித்த நிலையிலும் 114 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இது அரசுக்கு ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
ஜே.வி.பி. முன்னைய நிலைப்பாட்டையே மூன்றாவது வாசிப்பிலும் எடுத்திருந்தால் அரசு தோற்கடிக்கப்படுவதற்கு மேலதிகமாக மேலும் மூன்று வாக்குகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கும். ஜே.வி.பி. இம்முறையும் எதிர்த்திருக்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவியுள்ள 17 பேரில் பலர் அரசுக்கு எதிராக வாக்களிக்கத் தயார் நிலையில் காணப்பட்டனர்.
அத்துடன் அநுர பண்டாரநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈழவேந்தன் உட்பட நால்வரும் வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தால் வெள்ளிக்கிழமை நிச்சயமாக அரசு படுதோல்வியை சந்தித்திருக்கும்.
அந்த வகையில் பார்க்கும்போது அரசு மயிரிழையில் உயிர் தப்பி இருப்பதாகவே நோக்கவேண்டியுள்ளது. அரசுக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதாக காட்டிக்கொள்கின்றபோதிலும் ஆளும் தரப்பில் இருக்கும் பல கட்சிகள் மத்தியில் அரசு குறித்த திருப்தியற்ற போக்கு இன்னமும் நீடித்த வண்ணமே காணப்படுகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய இரண்டு மலையகக் கட்சிகளுக்குள் அரசு குறித்த முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதேபோன்று முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் குமுறிக்கொண்டிருப்பதையும் அறிய வருகின்றோம்.
ஜே.வி.பி.யை பொறுத்தவரையில் அது ஒரு போதிலும் இப்போதைக்கு அரசு கவிழ்க்கப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அரசின் வெற்றியை அது உறுதி செய்து கொண்டதன் பின்னரே வெறும் கண்துடைப்புக்காக எதிர்த்து வாக்களித்தது. அன்று எதிர்த்தவர்கள் ஏன் இம்முறை எதிர்க்க முற்படவில்லை. அன்று எதிர்த்தவர்கள் ஏன் இம்முறை எதிர்க்க முற்படவில்லை. உண்மையிலேயே தமது பாராளுமன்ற இருப்பை உறுதி செய்து கொள்வதிலேயே ஜே.வி.பி. கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. ஜே.வி.பி. ஒரு தேர்தலை எதிர்கொண்டு தனித்துப் போட்டியிடுமானால் அக்கட்சியால் ஐந்து ஆசனங்களையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியானதாகும். சுதந்திரக் கட்சி கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தயவு காரணமாகவும் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் விருப்பு வாக்குகளாலேயுமே ஜே.வி.பி. 38 உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்றது. அத்துடன் பதவிக்காலம் முடிவதற்கிடையில் பாராமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் கை நளுவிப் போய்விடுமே என்ற அச்சமும்தான் ஜே.வி.பி. அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான பிரதான காரணங்களாகும்.
இன்றைய அரசின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் குறிப்பிட்ட 2010 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடக்கும்போது கூட ஜே.வி.பி.ஒருபோதும் தனித்து இயங்கப் போவதில்லை. காரணம் அதன் மீதான மக்கள் நம்பிக்கை இன்று பூஜ்ய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே ஆகும். இறுதி நேரத்தில் ஏதோவொரு சாட்டுக் காரணத்தை முன்வைத்து மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பின்னால் தாவிக் கொண்டே தேர்தலுக்கு முகம் கொடுக்கும் என்பது தான் உறுதியானதாகும்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் எடுத்த முடிவு குறித்த அரசிலும் அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சில்லறைச் சலசலப்பைக் காட்டிய போதிலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் ஹக்கீமின் நடவடிக்கைக்கு வரவேற்புக் காட்டியுள்ளது.
முக்கியமாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதை எதிர்பார்த்தார்களோ அதனை உரிய முறையில் ரவூப் ஹக்கீம் நிறைவேற்றியுள்ளார். கிழக்கிலங்கை முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் முஸ்லிம் சமூக அமைப்புகளும் ஜம் இய்யதுல் உலமாவும் அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுத்த பகிரங்கமான வேண்டுகோளை ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள் கடப்பாட்டுடன் நிறைவேற்றியிருக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய மதிப்பளிக்காத அரசுடன் தொடர்ந்தும் ஒட்டிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கப் போகின்றது என்ற கேள்வி அண்மைக் காலமாக எழுப்பப்பட்டு வருகின்றது. இதுவரை காலமும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குச் செவிமடுக்காமலிருந்த அரசு பட்ஜட் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தில் அவசர அவசரமாக முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்து மீண்டுமொரு தடவை வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.
இதனை தலையில் சுமந்து கொண்டு முஸ்லிம் பிரமுகர்கள் நாம் வென்றுவிட்டோம் என மார்தட்ட முயன்றால் அதைவிட படுமுட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்த சில நாட்களில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு உட்பட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய போது அளித்த வாக்குறுதிகளை இன்னமும் முஸ்லிம் சமூகம் மறந்துவிடவில்லை.
மௌலவி ஆசிரிய நியமனத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென அன்று ஜனாதிபதி அளித்த வாக்குறுதி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் கிடப்பில் போடப்பட்டதாகவே இருந்தது. கடந்த வாரத்தில் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ மீண்டுமொரு உத்தரவாதத்தைத் தான் தந்துள்ளார். கடந்த தடவையும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத்தான் கூறியிருந்தார்.
ஆனால் நடக்கவில்லை இம்முறை ஜனவரியில் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தி முதலாம் தவணை முடிவதற்குள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறிஉறுதியளித்துள்ளார். முக்கியமாக இம்முறை முன்னைய அமைப்புகளை விட இந்த விடயத்தில் கூடுதல் கரிசனைகாட்டியது ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ் அமைப்பாகும்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத்தீர்க்க வேண்டுமென கலாநிதி யூசுப் மரிக்காரின் தலைமையிலான ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ் அரசை ஆணித்தரமாக வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது. ஏதோ மீண்டுமொரு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் வரை ஒரு நப்பாசையுடன் இதனையும் முஸ்லிம் சமூகம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அது அப்படி இருக்கும் போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இருப்பு குறித்த அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. முஸ்லிம்களின் விவசாய காணிகள் பறிப்பு, சமூகத்தின் விகிதாசாரத்தை சீர்குலைப்பதற்கான சிங்கள குடியேற்றம் என்பன மிக வேகமாகவே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்புகளும் மக்களும் என்னதான் கூக்குரல் எழுப்பினாலும் சாட்டுப்போக்குக் கூறி மூடி மறைக்கப்படுவதோடு சிங்களக் குடியேற்றம் மறைமுகமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாகவே உள்ளது.
போதாக்குறைக்கு முஸ்லிம்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் அல்லவெனவும் அவர்கள் சவூதி அரேபியாவுக்குப் போக வேண்டுமெனவும் ஹெலஉறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரோ தன் இனவாத விஷக்கருத்துக்களை கக்கியுள்ளார்.
முஸ்லிம்கள் பௌத்த சின்னங்களை பலாத்காரமாக அழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியள்ளார்.
இந்த நாட்டின் முஸ்லிம்களையும் தமிழ் மக்களையும் குறிப்பாக மலையக தமிழ் மக்களையும் இந்த மண்ணின் மக்களாக ஏற்கவே மறுக்கும் ஒரு இனவாதக்கருத்துக்கள் வேகமாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை தாம் கண்டும் காணாத நிலையில் இருக்க முடியாது. உரியமுறையில் ஒன்றுபட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறுவோமானால் தமிழ், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் மிகவும் பயங்கரமானதாகவே அமைந்துவிடும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது அரசியல் இருப்புக்காக முட்டி மோதிக் கொண்டிராமல் சமூகத்தின் அரசியல் இருப்பையும் தாயக இருப்பையும் உறுதி செய்வதற்காக ஒன்றுபட்டே ஆக வேண்டும். யார் இதனைச் செய்ய வேண்டும். யாருடைய பெயர் வெளிவரவேண்டும் என்று பேசிக் கொண்டிராமல் யார் குற்றியாவது அரிசியானால் சரி என்ற திறந்த மனநிலை முஸ்லிம் தலைமைகளிடமும் சமூகத்திடமும் வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறிவைக்கின்றோம்.
நெருடல் இணையம்
|
|