பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow வாக்குறுதிகளும் நிபந்தனைகளும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வாக்குறுதிகளும் நிபந்தனைகளும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 06 October 2005

வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்காக வழங்கப்படுபவையல்ல. அவை தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுபவை' என இலங்கையின் முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்ததை நினைவுபடுத்துவதாகவே தற்போதைய அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவதுடன் பிரசாரங்களும் தீவிரமடையப் போகின்றன. இந்த நிலையில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் ஏட்டிக்குப் போட்டியாக வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்ற முடியாதவை என்பதைத் தெரிந்திருந்தும் அவை தொடர்பான பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றின் நேற்றைய அறிவிப்புடன் பிரதான இரு முகாம்களிலும் அணிவகுத்து நிற்கும் அரசியல் சக்திகள் எவை என்பது பெருமளவுக்குத் தெளிவாகியிருக்கின்றது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பேரினவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் உடன்படிக்கைகளைச் செய்திருக்கின்றார்.

மறுபுறத்தில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இ.தொ.கா.மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருப்பதனால், அவற்றின் ஆதரவைத் தனதாக்கிக் கொண்டிருக்கின்றார். சிறுபான்மையினரது வாக்குகளை இதன்மூலம் அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் ரணில் விக்கிரமசிங்க உள்ளார்.

தேர்தலுக்காகச் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகளோ, வழங்கப்படும் வாக்குறுதிகளோ ஒரு போதும் நிறைவேற்றப்படுவதில்லை என்பதை இலங்கையின் அரசியல் வரலாற்றை நன்கு படித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். மக்களுடைய வாக்குகளைக் கவர்வதற்காக ஜனரஞ் சகமான வாக்குறுதிகளை வழங்கும் பாரம்பரியத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தான் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தார்.

1956 இல் எப்படியும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் அளித்த வாக்குறுதியின் விளைவுகளை இன்றும் நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. தான் அதிகாரத்துக்கு வந்தால் 24 மணி நேரத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரப் போவதாக அப்போது அவர் அறிவித்தார். சிங்கள மக்களிடம் அமோக ஆதரவை இது அவருக்குப் பெற்றுத்தந்திருந்தது என்றாலும்கூட, அதனை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கை, சிங்களம் மட்டும் என்ற கோஷத்தின் தவறை பண்டாரநாயக்கவே உணர்ந்து கொண்டதைப் பிரதிபலித்தது. ஆனால், அவர் ஊக்குவித்த பேரினவாதம் அந்த உடன்படிக்கையைக் கிழித்தெறிவதற்கு அவரை நிர்ப்பந்தித்தது. பின்னர் அந்தப் பேரினவாதமே அவரைச் சுட்டுக் கொன்றது. பண்டாரநாயக்கவின் வாக்குறுதி பொதுத்தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு துணை புரிந்தது என்பது உண்மைதான். ஆனால், அது நிறைவேற்றக் கூடியதாக இருக்கவில்லை.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் திருமதி குமாரதுங்கவுக்கு ஜே.வி.பி.யின் ஆதரவு தேவையாக இருந்தது. தன்னை ஒரு பெரிய சக்தியாகக் காட்டிக் கொண்ட ஜே.வி.பி.யும் இத்தேர்தலில் போட்டியிட்டு தன்னுடைய பலவீனத்தைப் பகிரங்கமாக்க விரும்பவில்லை. அந்த நிலையில் சந்திரிகாவுக்கு ஆதரவளிக்க ஜே.வி.பி. முன்வந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் ஜே.வி.பி. முன்வைத்த நிபந்தனை. அதற்கான ஒரு வருட காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. திருமதி குமாரதுங்கவும் அதனை ஏற்றுக் கொண்டார். தேர்தலில் மகத்தான வெற்றியையும் பெற்றுக் கொண்டார். கடந்த பதினொரு வருட காலத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக எந்த ஒரு நகர்வையும் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க மேற்கொள்ளவில்லை.

இவை நமது நாட்டுத் தேர்தல் வரலாற்றில் இரண்டு சம்பவங்கள் மட்டும்தான். எந்தவொரு தேர்தலிலாவது வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா? தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளிப்பதில் தமது திறமையை வெளிப்படுத்தும் அரசியல் வாதிகள் தேர்தலின் பின்னர் அவற்றை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்களைக் கூறுவதில் தமது திறமையை வெளிப்படுத்துவதுதான் வழமை.

இப்போது இரண்டு பிரதான வேட்பாளர்களுமே ஏட்டிக்குப் போட்டியாக வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகளைக் கவரும் வகையில், `பராக்கிரமபாகு யுகத்தை மீண்டும் கொண்டுவருவேன்' என ரணில் சொன்னால், பதிலடியாக `விவசாயக் கடன்களை ரத்துச் செய்வேன்' என மகிந்த ராஜபக்‌ஷ கூறுகின்றார்.

இதேபோல ஒரு வருடத்தில் இரண்டு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும்போது, அவரது வாக்குறுதிகள் பலவற்றைக் காணமுடியும். வாக்குறுதிகளில் நிறைவேற்றக் கூடியவை எவை என்பதைப் புரிந்து கொள்ளும் திறமை இப்போதும் மக்களுக்குள்ளது. அனுபவம் அவர்களுக்குக் கற்றுத்தந்த பாடம் அது. வாக்குறுதிகளும் நிபந்தனைகளும் நிறைவேற்றப்படுவதற்காகவல்ல என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதை அரசியல்வாதிகள் தெரிந்துகொள்வது அவசியம்.


thinakkural
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..