|
சிறிலங்காவின் கிங்க் மேக்கர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள் என்று சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. தெரிவித்துள்ளது.சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக ஏ.எஃப்.பி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை:நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற உள்ள சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான முடங்கி நிற்கும் அமைதிப் பேச்சுக்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது.தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் அணிசேர்ந்து விட்டன.
இந்தச் சூழ்நிலை குறித்து அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் முன்னாள் ஆலோசகரும் அரசியல் நோக்கருமான ஹரி குணதிலக்க கூறுகையில், "இவை அனைத்தும் யார் அரச தலைவராவது என்பதை கடைசியில் தமிழர்களே நிர்ணயிப்பதை எடுத்துக் காட்டுகிறது. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்துக் கூறுவார்கள்" என்றார். சிறுபான்மை முஸ்லிம் கட்சி மற்றும் தோட்டத் தொழிலாளர் கட்சியின் ஆதரவை பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கே பெற்றுள்ளார். ஆனால் யாரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக அவர்கள் தரப்பிலிருந்து எதுவித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. பெரும்பான்மை தீவிரவாத சிங்கள இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பி.யின் ஆதரவை ஆளும் கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச பெற்றிருக்கிறார். இந்த நிலையில் "இனப்பிரச்சனை தொடர்பான பன்முக விடயங்கள் நாளுக்கு நாள் உருவாகின்றன" என்று சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சுனந்த தேசப்பிரிய கூறுகிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்காவிட்டாலும் அவர்களே தீர்மானிக்கிற வலுவான சக்தியாக இருக்கிறார்கள் என்றும் சுனந்த தேசப்பிரிய கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை அரசியல் கட்சிகளை பிரித்துக் கொள்ளும் நிலையில் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளே தொகுப்பாக இருப்பதால் அவர்களே கிங்க் மேக்கர்களாக இருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் வாக்காளர்களுக்கு கிடைக்கும் சமிக்ஞைதான் தேர்தல் களத்தில் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கருதுகின்றனர். ஏ.எப்.பி. நிறுவனத்துக்கு கடந்த மாதம் நேர்காணல் அளித்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், இனப்பிரச்சனையை மையமாக வைத்து இரு கட்சிகளினது வேட்பாளர்களும் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைவதாக சாடியிருந்தார். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கிய ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இதற்கு மாறாக அரசாங்கம் முன்வைத்திருக்கும் கூட்டாட்சி முறை போன்றவை இல்லாத நிலையில் அமைதிப் பேச்சுகளை தொடங்கப் போவதாக மற்றொரு வேட்பாளர் மகிந்த ராஜபக்ச கூறி வருகிறார். அமைதி முயற்சிகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாக நேற்று புதன்கிழமை தெரிவித்தனர். இந்த நிகழ்வுகள் எப்படியிருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் யாரும் மீண்டும் யுத்தப் பாதைக்கு திரும்பப் போவதில்லை என்பதே யதார்த்தம் என்கிறார் கொள்கை வகுப்பாளர் ஒருவர். யுத்த நிறுத்த ஒப்பந்தம் தற்போது ஆபத்தான நிலையில்தான் இருக்கிறது. ஆனால் யுத்தம் ஏற்படும் என்பது குறித்து நாளையோ அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னோ எவரும் பேசப்போவதில்லை என்றும் அவர் கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி தெரிவிக்கிறது. puthinam
|