|
ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியில் ஒரு புறம் இனவாதம் கக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருமே அடிக்கடி சிறுபான்மை கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைத்துவங்களை அணுகி தமக்கு ஆதரவு தருமாறு கோரி வந்தனர். அதேவேளை, சிறுபான்மைக் கட்சிகளும், தாம் சார்ந்த மக்களின் நலன் கருதி, நீண்ட பட்டியலை முன்வைத்து ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமது குறைநிறைகளைக் கூறி வந்தனர். எவ்வாறெனினும் நாட்டில் சமாதானம் நிலவ வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சிறுபான்மைக் கட்சிகள் ஏகமனதான தீர்மானத்தைக் கொண்டிருந்தன என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கவில்லை. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு வருவதும், மாறி மாறி பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள், இனப்பிரச்சினையை தேர்தல் வெற்றிக்கானதோர் ஆயுதமாகவே பயன்படுத்துவதும் இந்த நாட்டின் புதிய விடயமல்ல. இருந்தபோதிலும் சமாதான நடவடிக்கைகள், முயற்சிகளில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தாங்கள் எந்தளவு தூரம் சமாதான முயற்சிகளின்பால் ஆர்வம் கொண்டவர்கள் என்பதை வெளி உலகிற்குக் காட்டும் வகையிலேயே ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேல் மாகாண மக்கள் முன்னணி என்பன தங்கள் ஒட்டுமொத்தமான ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க, சமாதானம் தொடர்பில் தனது கொள்கைத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்திருந்ததுடன், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தமது ஒட்டுமொத்தமான ஆதரவை வழங்கியுள்ளன. நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும், தேசிய அபிவிருத்திக்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதே கருத்தையே அடியொற்றிக் கூறியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சொல்வதைச் செய்பவர் ரணில் அவரின் வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார். எது எவ்வாறிருப்பினும், சிறுபான்மை கட்சிகளை அடக்கி ஒடுக்கி, எள்ளிநையாண்டி செய்யும் பேரினவாதிகளுக்கும், அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் சமாதானத்தின் அவசியத்தையும் தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தையும், அதேவேளை அவர்களும் புறக்கணிக்கப்படக் கூடியவர்கள் அல்லர் என்ற யதார்த்தத்தையும் உணர்த்தும் வகையிலேயே மேற்படி கட்சிகளின் தீர்மானம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இதுவரை தனது திட்டத்தை நேர்சீராகப் பகிரங்கப்படுத்தாத நிலையில், அவருடன் கூட்டுச்சேர்ந்துள்ள சிறிய தென்பகுதி அரசியற் கட்சிகளின் விஷம் கக்கும் பேச்சுக்களும், நடவடிக்கைகளுமே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒருவித வெறுப்புணர்வை தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இவர்களின் ஆதரவு தேவையற்றது என்ற பேரினவாதக் கட்சிகள் பகிரங்கமாகக் கூறி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இக்கட்டானதோர் சூழ் நிலைக்கு மத்தியிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அமையவுள்ளது என்ற யதார்த்தத்தையும் எவரும் மறந்து போகக் கூடாது. தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருப்பினும், தமிழ் பேசும் மக்கள், பேரினவாதிகளின் அழுத்தங்கள் காரணமாக ஒன்று பட்டுள்ளமை சர்வதேச உலகிற்குப் பெரும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதேவேளை, சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாட்டில் அவர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளும் இனிமேல் குறைவின்றித் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இவை அனைத்துக்கும் அப்பால், தமிழ் பேசும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒன்றிணைந்த முடிவை எடுத்துள்ள இக் கட்சிகள், இதேபோன்று தமிழ் மக்களை நசுக்கும் வகையில் கொண்டு வரப்படும் அவசரகாலச் சட்டத் தின்போது மாத்திரம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலையில் செயற்படுவது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருவதையும் மறந்து போகக் கூடாது. "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்பதை இந்த நாட்டின் பேரினவாதிகள் உணர்ந்து கொள்வது அவசியம். virakesarai
|