|
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீது இனவாத வெறித்தனத்துடன் சிறிலங்காப் படைத்தரப்பு நடாத்திய மனிதப்படுகொலை காஞ்சிரங்குடாப்படுகொலை. அது மீண்டுமொரு ஆண்டை நிறைவாக்கி இன்றைய தினம் நினைவு கூரவைத்துள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீது இனவாத வெறித்தனத்துடன் சிறிலங்காப் படைத்தரப்பு நடாத்திய மனிதப்படுகொலை காஞ்சிரங்குடாப்படுகொலை. அது மீண்டுமொரு ஆண்டை நிறைவாக்கி இன்றைய தினம் நினைவு கூரவைத்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் போர்க் காலத்தில் தமிழ் மக்கள் பேரினவாதிகளால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். பல்வேறு தமிழினப் படுகொலைகள் இடம் பெற்று இரத்தக் கண்ணீர் சிந்திய மண்,தங்க வேலாயுதபுரம் படுகொலை, வீரமுனைப் படுகொலை, கல்முனைப் படுகொலை, திராய்க்கேணிப் படுகொலை என எக்க சக்கமான படுகொலைகள் அம்பாறை மாவட்டத்தைச் சிவக்க வைத்தது. தமிழ் மக்களின் பாரம்பரிய பூமியான அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களை சிறுபான்மையினமாக்கி நிலஅபகரிப்புச் செய்வதை அடிப்ப டையாக வைத்து படுகொலைகளும், சூழ்ச்சித்திட்டங்களும், வகுக்கப்பட்டதை கடந்த கால வரலாறுகள் தொட்டுக் காட்டுகின்றன. இந்த வகையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அம்பாறை மாவட்ட மக்கள் இயல்பு வாழ்வை சீர் செய்வதற்கு தயாரான போது வாழ்வைச் சீர்குலைக்கும் வலை விரிப்புக்கள் பல்வேறு வடிவங்களில் வீழ்ந்தன. இந்தக் கால கட்டத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற போர்வையில் தடுப்புக் காவலில் வாடும் தமிழ் இளைஞர்கள் களுத்துறை சிறையில் உண்ணாவிரதமிருந்தனர். அரசோ இவ்விடயத்தில் பாராமுகமாகவிருந்தது. இதேவேளை சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட மேகலா சிறிதரன் படுகொலையைக் கண்டித்தும், கோமாரி அரசியல்துறைப் பொறுப்பாளர், மற்றும் ஒரு போராளி காஞ்சிரங்குடா அதிரடிப்படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அகிம்சை வழிப்போராட்டத்துக்குத் தயாரானார்கள். கடந்த 2002ம் ஆண்டு ஒக்டோபர் 09ம் திகதி காஞ்சிரங்குடாப் படைமுகாம் வரை சென்று திரும்புவதாக தீர்மானிக்கப்பட்ட அமைதிப் பேரணி படைமுகாமிற்கு அண்மித்ததும் இனவாத வெறித்தனத்துடன் இருந்த விசேட அதிரடிப்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆறு பாடசாலை மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இருபத்திரெண்டு பேர்வரை காயமடைந்தனர். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் நடந்த தமிழினப் படுகொலையால் அம்பாறை அழுதது@ தமிழ் மக்கள் கொதித்தெழுந்தனர். ஆயினும் சமாதானத்தை சீர்குலைத்து விடக்கூடாது என்ற பொறுமையும், எதிர்பார்ப்பும் அப்போது மக்களிடம் அதிகளவு இருந்தது. இப்படுகொலையைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதும் இதுவரை அவர்கள் சிறிலங்காவின் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை. காஞ்சிரங்குடாவில் ஆரம்பித்த அரச படைகளின் வெறியாட்டம் இன்னும் தொடர் கதையாகிக் கொண்டு செல்கின்றது. எத்தனை போராளிகள், எத்தனை பொது மக்கள், சிங்களப்படைகளின் சிங்களப் புலனாய்வுத் துறையினரின், புலனாய்வுப் பிரிவுகளோடுள்ள ஒட்டுப்படைகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகி விட்டார்கள். இந்தக் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா? அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? மிகப் பெரியதொரு மனிதப்படுகொலையை சமாதான சூழல் என்ற போர்வையில் செய்து கொண்டிருக்கு சிங்கள அரசை சர்வதேச சமூகம் கண்டிக்காது இருப்பது கவலையளிக்கின்றது. மறுபுறம் வெளிவிவகார அமைச்சர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மட்டும் பெரிதுபடுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரபட்ச மான நடவடிக்கையை வெளிக்காட்டுகின்றது. எனவே தமிழ் மக்களுக்கு எதிராக காஞ்சிரங்குடா தொடக்கம், இற்றைவரை நடந்துள்ள படுகொலைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் எடுத்து அரசு மீது தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் பட்சத்தில் அது நடுநிலைத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமையும் என காஞ்சிரங்குடாப் படுகொலை நாளில் வலியுறுத்துகின்றோம். ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம்
|