|
* வெள்ளவத்தை குண்டுவெடிப்பு கிளப்பியிருக்கும் கேள்விகள்
விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையானது சமாதான முயற்சிகளுக்கு எதிரானவர்களுக்கு மிகவும் வாய்ப்பாகிவிட்டது. புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை உச்சமடையச் செய்வதுடன் சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்வதே இவர்களது நோக்கமாகும். அத்துடன், புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் எனப் பிரசாரம் செய்யும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அதற்கான பழியும் புலிகள் மீதே சுமத்தப்பட்டும் வருகிறது.
கிழக்கில் தொடரும் தாக்குதல்களும் கொழும்பில் நடைபெறும் சம்பவங்களும், எந்தத் தரப்பு இதன் பின்னணியிலுள்ளதென்பதை தெளிவுபடுத்தும். ஆனாலும், எங்கு தாக்குதல் நடைபெற்றாலும் வழமைபோல் புலிகளின் பேரில் அவற்றைப் பதிவு செய்து விடுவதில் அரசும், படைத் தரப்பும் ,சிங்கள, ஆங்கில ஊடகங்களும் போட்டி போடுகின்றன. கடந்த வாரம் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பெருமளவு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் பொதுமக்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐந்து பேர்வரை கொல்லப்பட்டும் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். கிழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படும் தமிழ் குழுக்களே தங்கள் தாக்குதலை பொது மக்களுக்கெதிராக திருப்பிவிட்டு அங்கு குழப்பத்தை ஏற்படுத்த முற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதே இவர்களது நோக்கமெனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. புலிகளே இந்தத் தாக்குதல்களை நடத்துவது போன்றதொரு மாயையை ஏற்படுத்துவதே இவர்களது நோக்கமாகும். கல்முனையில்கூட இருமுஸ்லிம்கள் சுடப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். அந்தத் தாக்குதலை புலிகளுடன் தொடர்புபடுத்தி மிக மோசமான பிரசாரத்தில் ஈடுபடும் அப்பகுதி அரசியல்வாதிகள், அதனை ஜனாதிபதித் தேர்தலுடனும் தொடர்புபடுத்துவதுதான் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க. வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது. இந்தக் கொலையைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி அதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புபடுத்தி பின்னர் அதனை ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்புபடுத்துவதன் நோக்கமென்ன என்ற கேள்வியும் எழுகிறது. கிழக்கில் தமிழ் - முஸ்லிம்களுக்கிடையிலான சாதாரண பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முஸ்லிம் பொதுமக்களை புலிகள் சந்தித்து சுமுக நிலை உருவாக்கப்படும் போதும் தேர்தல் காலங்களிலும் முஸ்லிம்களை உணர்ச்சிவசப்படச் செய்யும் சம்பவங்கள் நடைபெறுவதை எவரும் மறந்துவிடமாட்டார்கள். அரசியல் இலாபம் தேட முயல்வோரின் இந்த நடவடிக்கைகள் அங்கு நிலைமையை மேலும் மோசமடையச் செய்தே வருகிறது. இதுபோல்தான் கொழும்பிலும் இடம்பெறும் சம்பவங்கள் பலவற்றுடன் புலிகளை தொடர்புபடுத்தி விடுகிறார்கள். இதனால் சம்பவமொன்றின் சூத்திரதாரிகள் தப்பித்து விடுகிறார்கள். எந்தச் சம்பவம் நடைபெற்றாலும் அதனைப் புலிகள்தான் செய்திருப்பார்களென்ற கோணத்திலேயே விசாரணைகளும் நடைபெறுவதுடன் இவற்றில் எப்படியாவது புலிகளைச் சிக்கவைத்துவிடவேண்டுமென்ற நோக்கிலுமே விசாரணைகள் நடைபெறுகின்றன. இதனால் இந்தச் சம்பவங்களுடன் உண்மையாக தொடர்புடையவர்கள் மிகச் சுலபமாகத் தப்பிவிடுகின்றனர். கடந்த வியாழக்கிமை வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் `தினமுரசு' பத்திரிகை அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் குண்டுவெடித்துள்ளது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் அந்தரங்கச் செயலாளர் அன்ரனிப்பிள்ளை ஜெயராஜா என்பவர் பயன்படுத்தும் வாகனத்துக்குள் பொருத்தப்பட்டிருந்த, மிகவும் சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் அந்த வாகனம் சின்னாபின்னமாகி விட்டது. அன்ரன் ஜெயராஜ், டக்ளஸின் அந்தரங்கச் செயலாளர் என்பதுடன் ஈ.பி.டி.பி.யின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரென்றும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக ஈ.பி.டி.பி. உடனடியாகவே கூறிவிட்டது. அரச ஊடகங்களும் சிங்கள - ஆங்கில ஊடகங்களும் புலிகள் மீதே குற்றச்சாட்டைச் சுமத்தினாலும் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், இதற்கு யார் காரணமென உடனடியாகக் கூறமுடியாதெனக் கூறிவிட்டனர். ஈ.பி.டி.பி. யின் பிரதான அலுவலகம் பார்க் வீதியிலுள்ளது. இந்த வீதியிலும் அலுவலகப் பகுதியிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுள்ளன. இதேபோன்றே நெல்சன் வீதியில் `தினமுரசு' அலுவலகத்தின் பாதுகாப்பும் அண்மைக் காலங்களில் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகள் சகிதம் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் `தினமுரசு' அலுவலக முன்புறத்தில் 24 மணிநேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில்தான் அன்ரன் ஜெயராஜும் தங்கியிருக்கின்றார். அவரது வாகனமே இதுவாகும். முதல்நாள் மாலை ஐந்து மணியளவில் அவ்விடத்தில் நிறுத்தப்பட்ட வாகனத்தினுள்ளேயே மறுநாள் காலை 7.45 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. நேரக் கணிப்பு குண்டே இதுவெனப் பொலிஸார் கூறுகின்றனர். வழமையாக 7.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் அவர், அன்று வாகனச் சாரதி வருவதில் ஏற்பட்ட தாமதத்தால் 7.45 மணியாகியும் செல்லவில்லை எனவும் அவ்வேளையிலேயே வாகனத்திற்குள்ளிருந்த குண்டு வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், மிகவும் சக்தி மிக்க குண்டு இந்த வாகனத்தினுள் எவ்வாறு பொருத்தப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியுள்ள விசாரணையாளர்கள், வழமையாகச் செல்லும் நேரத்திற்கு இவர் ஏன் செல்லவில்லை என்பது குறித்தும் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈ.பி.டி.பி.யின் பாதுகாப்பிலுள்ள வாகனமொன்றுக்குள் அதுவும் மிகவும் பாதுகாப்பு நிறைந்த இடத்திலும் 24 மணிநேர கண்காணிப்பு நிறைந்த இடத்திலும் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சக்திமிக்க நேரக் கணிப்புக் குண்டு எப்படி பொருத்தப்பட்டது என்ற கேள்வி விசாரணையாளர்களைப் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்துள்ளது. பொதுவாகவே ஈ.பி.டி.பி.யினர் தங்கள் பாதுகாப்பில் மிகக் கவனமாகவேயிருப்பர். டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்கும் போது அவரைச் சார்ந்தவர்களின் பாதுகாப்பு எப்படியிருக்குமெனச் சொல்லத் தேவையில்லை. அந்தளவிற்கு கவனமாயிருப்பவர்களின் வாகனத்தினுள் எப்படி குண்டு பொருத்தப்பட்டது என்ற கேள்விதான் விசாரணையாளர்களைக் குடைகிறது. பார்க் வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் கைது, இந்து சமய கலாசார அலுவலகம் முன்பாகச் சென்றவர் கைது, நெல்சன் பிளேஸில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்தவர் கைது என தினமும் பத்திரிகைகளில் செய்திகள் வருமளவிற்கு இப் பகுதிகள் பாதுகாப்பு நிறைந்தவை. அப்படியிருக்கையில் புலிகள் எவ்வாறு வந்து இந்தக் குண்டை பொருத்தியிருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதைவிட, குண்டு வெடித்த பின்தான் வாகனத்தினுள் அது பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதென்றால், வாகனத்திற்குள் சக்தி மிக்க குண்டைப் பொருத்தி ஒருவரை இலக்கு வைக்குமளவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள ஒருவருக்கு பாதுகாப்பு வழங்குபவர்கள் அங்கு இருக்கவில்லையா? இருந்திருந்தால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்திற்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லையா? அல்லது வாகனம் புறப்படுவதற்கு முன் வாகனத்தினுள் பாதுகாப்புச் சோதனை நடத்தவில்லையா? என்ற கேள்விகளும் எழுகின்றன. இவை எதுவுமே நடைபெறவில்லையென்பதால், அன்ரன் ஜெயராஜுக்கு பெரியளவில் பாதுகாப்பு அச்சுறுத்தலிருக்கவில்லை எனக் கருதமுடியும். எங்காவது வெளியில் செல்லும்போது மட்டும் இவருக்கு ஒருசிலர் பாதுகாப்பு வழங்கிவந்திருக்கக்கூடும். இதனால், இவ்வாறான ஒருவரை எவராவது இலக்கு வைப்பதாயின் வேறு வழிகளில் (துப்பாக்கிகளைப் பயன்படுத்தி) இலக்கு வைத்திருக்க முடியும். ஆனால், வாகனமே சிதறிப் போகுமளவிற்கு சக்திமிக்க குண்டை வாகனத்திற்குள் பொருத்தி ஏன் இவரைத் தாக்க முயலவேண்டுமென்ற கேள்வியும் விசாரணையாளர்கள் மத்தியில் எழக்கூடும். இதேநேரம், ஜெயராஜுக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலிருந்ததென்றால் அவரது வாகனத்தை ஏன் வீதியோரத்தில் முதல் நாள் மாலை முதல் மறுநாள் காலைவரை எந்தவித பாதுகாப்புமின்றி நிறுத்திவைக்க வேண்டும். இந்த வாகனத்தை பாதுகாப்பான இடமொன்றில் நிறுத்திவிட்டு இவர் பயணம் செய்யும் போது அதனை அங்கிருந்து எடுத்து வந்து பயணிக்க முடியுமல்லவா? இதைவிட, நெல்சன் வீதியில் பாதுகாப்பு எதுவுமில்லை, பாதுகாப்பு கண்காணிப்புமில்லையென்று வைத்துக் கொண்டால், இவரது வாகனத்துள் குண்டைப் பொருத்தித்தான் இவரைத் தாக்க வேண்டுமா? பாதுகாப்பு இல்லாத தினமுரசு அலுவலகத்திற்குள் சென்றே இவரைத் தாக்கியிருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது. இதைவிடுத்து அந்த வாகனத்துள் குண்டை வைத்து அது பயணிக்கும் போது வெடித்து வீதியில் செல்பவர்களுக்கும் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்துமளவிற்கு யார் இந்தக் குண்டைப் பொருத்தியிருப்பார்கள்? மேலும், இந்த வாகனத்தை இவர் பயன்படுத்துவதும், தினமுரசு அலுவலகத்தில் இவர் தங்கியிருப்பதும், தினமும் 7.30 மணிக்குத்தான் இவர் புறப்படுவாரென்பதும் தெரிந்தவர்கள் யார்?இது ஈ.பி.டி.பி. யினருக்குத் தெரிந்திருக்கும் அல்லது இவரைத் தாக்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் இவர் இந்த வாகனத்தில் பயணம் செய்யும் போது இவரது வாகனத்திற்கு வேறு வாகனங்கள் பாதுகாப்பு வழங்கிச் செல்வதற்கான சாத்தியமில்லை என்பதால் , இவரை வேறுவிதங்களில் கூட சுலபமாக இலக்கு வைத்திருக்க முடியும்? ஆனால், பாதுகாப்பு மிக்கதும் 24 மணிநேர கண்காணிப்பு உள்ளதுமானதொரு பகுதிக்கு வந்து அந்தப் பாதுகாப்பு கண்காணிப்பையும் மீறி எப்படி வாகனத்தினுள் குண்டைப் பொருத்த முடியும்? வழமைபோல், புலிகள்தான் குண்டைப் பொருத்தினார்களென்று கூறினால் இது குறித்த விசாரணை குண்டு வெடித்த சில நிமிடங்களிலேயே முடிந்து விடும். அவ்வாறில்லாது, வேறு எவராவது இதனைச் செய்யும் சாத்தியமிருக்கலாமென விசாரணையாளர்கள் கருதினால் இதன் பின்னணியிலிருந்தவர்கள் யாரெனக் கண்டுபிடிக்க முடியும், அத்துடன், இது போன்ற பாதுகாப்பு ஓட்டைகள் குறித்தும் பொலிஸாரால் அறிந்துகொள்ள முடியும். புலிகள் மீதான பயணத்தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம், புலிகள் அரசியல் கொலைகளை நிறுத்த வேண்டுமெனவும் கூறியிருந்தது. ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையையும் மீறி புலிகள் தலைநகரில் தங்கள் அரசியல் எதிரிகளை இலக்கு வைக்கிறார்கள் என்ற பிரசாரத்திற்குக் கூட இதுபோன்ற சம்பவங்களை பலரும் பயன்படுத்தவும் கூடும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையானது ஜனாதிபதித் தேர்தலில் இனவாதிகளின் பிரசாரத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஜே.வி.பி., ஹெல உறுமய மற்றும் இனவாத அமைப்புகளும் சிங்கள, ஆங்கில மற்றும் அரச ஊடகங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடை அறிவிப்பை தங்களுக்கு மிகவும் சார்பாக பயன்படுத்துகின்றனர். தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களும் இவ்விடயத்தில் இவர்களுக்கு கைகொடுக்கிறார்கள். இந்த நிலைமைகள் போர் நிறுத்த உடன்பாட்டை எந்தளவிற்கு பேணிப்பாதுகாக்கப் போகின்றது என்பதுதான் இன்றைய மிகப் பெரும் கேள்வியாகும்.
vithuran
|