|
சிறிலங்காவின் ஐந்தாவது சனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு களத்தில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுவது இறுதியாகிவிட்டது. இதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். அதாவது கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் ஜே.வி.பியுடனான உடன்பாடு ஏற்பட்டபின் கூட்டுச் சேர்ந்து உருவாக்கிய கட்சியின் சார்பில் அதன் சின்னமாகிய வெற்றிலைச் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை முன்னரே அறிவித்துவிட்டு இந்த வருடம் சனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் எனப்போராட்டம் நடத்தியது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் யார்? என்பது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. சனாதிபதி வேட்பாளராக மகிந்தராஜபக்ஷ அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அவர் ஜே.வி.பியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டமையால் அவர் வேட்பாளராக நியமிக்கப்படாது போகலாம். சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பார் என்றெல்லாம் பரபரப்பாகச் செய்திகள் வெளிவந்தன. இறுதியில் அவை எவையும் நடைபெறாது மகிந்தராஜபக்ஷவே வேட்பாளராக நியமிக்கப்பட்டு விட்டார். இங்கு மகிந்தராஜபக்ஷ சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கைச் சின்னத்திலோ அல்லது பொதுசன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்திலேயோ போட்டியிடாது, ஜே.வி.பி-சு.க. கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் (அதாவது வெற்றிலைச் சின்னத்தில்) போட்டியிடுவது கவனிக்கத்தக்கது. அதாவது மகிந்த ராஜபக்ஷ சனாதிபதி சந்திரிகாவை முற்றாகப் புறக்கணித்து விட்டதை இது காட்டுவதாகக் கொள்ளலாம். அதாவது கடந்த ஜுலை மாதம் கைச்சாத்திடப்பட்ட பொதுகட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் முறிவடைந்த கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவிட்டதானது. அதனையே காட்டுகிறது எனக் கொள்ளலாம். ஜே.வி.பி-சு.க. கூட்டணி கடந்த ஜுலையில் முறிவடைய பொதுக்கட்டமைப்பு வெளிப்படையான காரணமேயொழிய அது உண்மைக் காரணம் அல்ல. ஏனெனில் அக்கட்டமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மனப்பூர்வமான எண்ணம் சனாதிபதி சந்திரிகாவுக்கு இருக்கவில்லை. கூட்டமைப்பு ஆட்சி உருவாகிய நாள் முதல் இறுதிக்கணம் வரை தனக்குத் தொல்லை கொடுத்த. அவமானப்படுத்திய ஜே.வி.பியிடம் பணிந்து போகத் தயாரில்லாத நிலையில் சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெறவும் அதேவேளை ஜே.வி.பியை ஒரு சிறந்த காரணத்தைக்காட்டி வெளியேற்றிவிடவும் சந்திரிகா பொதுக்கட்டமைப்மைப் பயன்படுத்திக் கொண்டார். அதேவேளை ஜே.வி.பி. அன்று இந்தக் கூட்டமைப்பிலிருந்து முற்று முழுதாக வெளியேறி இனி உறவே இல்லை என்று முடிவெடுத்து விடவில்லை. அதாவது சு.கவின் தலைமை மாற்றம் வரை அல்லது அதில் அதிகாரமாற்றம் ஏற்படும் வரையேயான தற்காலிக ஏற்பாடாக ம.ஐ.சு.மு.விலிருந்து வெளியேறியது. பொதுக்கட்டமைப்பை சனாதிபதி கைவிட்டாலும் வெற்றி, கையொப்பமிட்டாலும் இலாபமே என்ற ரீதியிலேயே ஜே.வி.பியின் இந்த வெளியேற்றம் ஏற்பட்டது. ம.ஐ.சு.மு.யில் அங்கம் வகிக்கும் வரை அதிலிருந்து வெளியேறிவிடப் போவதாக மிரட்டிவந்த ஜே.வி.பி அதிலிருந்து வெளியேறும் போது விரைவில் இணைந்து செயற்படும் காலம் வரும் எனக் கூறியது. அதேபோல் ஜே.வி.பி வெளியேற விரும்பினால் வெளியேறலாம் என சனாதிபதி சந்திரிகா கூற ஜே.வி.பி. வெளியேறும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஜே.வி.பி மீண்டும் தம்முடன் வந்து இணையக் கூடிய வகையிலேயே தமது செயற்பாடுகள் அமையும் எனக் கூறியிருந்தார். இவர்களின் இக்கூற்றுக்கள் பொது எதிரியாகிய ஜ.தே.கட்சியை முறியடிக்க இருதரப்புக்கும் ஒருவரை விட்டால் வேறு கதியில்லை என்பது புலனாகிறது. ஆனால் இவ்வாறு ஜே.வி.பியின் நிலையை நன்கு புரிந்திருந்தும் மகிந்தராஜபக்ஷ ஏன் ஜே.வி.பியின் 12 நிபந்தினைகளுக்கும் ஒப்புக்கொண்டார் என்பது குறித்து பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் ஒன்று தான் நேரடியாக இனவாதி என்றும் காட்டாமல் அதேவேளை ஜே.வி.பியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் இனவாதிகளைத் திருப்திப்படுத்துதல் இரண்டாவது சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நேரடியாக எதிர்க்காமல் அவரது ஆலோசனைகள் அல்லது அவரது விருப்பத்துக்கு மாறாகச் செயற்பட்டு அவரை மறைமுகமாக எதிர்த்தல் பொதுக்கட்டமைப்புத் தொடர்பில் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ஜே.வி.பிக்குமிடையேயான முரண்பாடானது. கௌரவப் பிரச்சினையே தவிர கொள்கைப் பிரச்சினையல்ல. எனவே சு.கவின் கொள்கைக்கு மாறாக அல்லாது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிப்பது என்பதில் சிரமம் இராது. தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஜே.வி.பி. அலட்டிக் கொள்ளாது விடப்போவதாகவும் கூறிவிட்டது. ஆனால் ஜாதிக ஹெல உறுமய தன்னுடனான ஒப்பந்தச் சரத்துக்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறும் வரை பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை. எனக் கூறுகிறது. ஆனால் ஜே.வி.பியோ தனது பிரச்சார மேடையில் ஜாதிக ஹெல உறுமய இடம்பெறக்கூடாது என்பதை இறுக்கமாகக் கடைப்பிடித்து வருகிறது. வேட்புமனுத் தாக்கல் திகதியும் முடிவுற்ற நிலையில் ஜாதிக ஹெல உறுமயவை வழிக்குக் கொண்டு வருவது மகிந்த ராஜபக்ஷவுக்கு சிரமம்மிக்கதாக இராது. இப்பொழுது மகிந்தவுக்குப் பிரச்சினை சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பண்டாரநாயக்க குடும்பத்தின் தீவிர ஆதரவாளர்களுமே. அவர்களும் இன்றைய சூழலில் ஒத்துழையாமை எனும் மென்போக்கான எதிர்ப்பைமட்டுமே காட்டக்கூடிய நிலையில் உள்ளனர். தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பு வெளிப்படுமானால் அவர்களிலும் பலரைத் தம்வசம் இழுத்துவிடலாம் என மகிந்த ராஜபக்ஷ நம்புகிறார் போல் தெரிகிறது. இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளாயினும் சரி, தேர்தல் விஞ்ஞாபனமாயினும் சரி, பெரிய மாற்றங்களைக் கொண்டதாக இல்லை. அதாவது 2001 டிசெம்பர் தேர்தலில் முன்வைக்கப்பட்ட- கடைப்பிடிக்கப்பட்ட அதே தந்திரோபாயங்களுடனேயே ஐ.தே.க. களத்தில் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். 5 வருடங்களில்10 இலட்சம் வேலை வாய்ப்புக்கள் போன்ற வாக்குறுதிகளே மேலதிகமாக உள்ளன. ஆனால் தான் சனாதிபதியாகத் தெரிவானால் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தி வருகிறார். அதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இணைத்துக் கொண்டே அந்த அரசாங்கம் அமையும் எனக் கூறிவருகிறார். அவரின் இந்தக் கூற்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஆசுவாசமளித்து அவரது தீவிர ஆதரவாளர்களை வசப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படக்கூடியதாகும். எவ்வாறு தான் சமாதானம் கூறிக் கொண்டாலும் எதிர்காலத்தில் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மகிந்தராஜபக்ஷவுக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் இவ்வளவு காலம் அவர் தாமதிப்பது மகிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னடைவான விடயமே. இப்பொழுது சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் பிரச்சாரமானது மந்தமான நிலையிலேயே இருக்கின்ற நிலையில் மகிந்தராஜபக்ஷவுக்கு ஜே.வி.பியே கைகொடுக்கிறது. இவ்வாறான சூழ்நிலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பண்டாரநாயக்க குடும்ப ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை ஜேவி.பியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டுச்சேர்ந்து சுமார் 16 மாதங்கள் நடத்திய ஆட்சி குறித்து மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 14 மாத ஐ.தே.க வின் ஆட்சியில் சாதாரண மக்களுக்கு ஏதும் கிட்டாமையே 2004 இல் அதன் தோல்விகளுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அத்துடன் அத்தேர்தலின் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்க ஊழியர்களுக்கு பாரிய சம்பள உயர்வு, உரவிலை குறைப்பு விலைவாசி குறைப்பு, பட்டதாரிகள் வேலைவாய்ப்பு, உயர்தரம் கற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் அவற்றில் ஒருசில மிக குறைந்த வீதத்திலேயே நிறைவேற்றப்பட்டன. அத்துடன் சுனாமியால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் எதுவித நிவாரணமுமின்றி இன்னமும் துன்பமுற்று வருகின்றனர். இதேவேளை மகிந்தராஜபக்ஷ எவ்வாறு ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய என்பன தம்முடன் இணைந்து கொண்டதால் தமது வெற்றி குறித்த உறுதிப்பாடாக இருக்கிறாரோ அதேபோல் இ.தொ.கா., மு.கா., ம.ம.மு., மேல்மாகாண மக்கள் முன்னணி என்பன தம்முடன் இணைந்து கொண்டமை குறித்து ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சி கொண்டிருக்கிறார். அவர் வடக்கு கிழக்கில் தமக்கு கிடைக்கப்போகும் வாக்குகளைத் தவிர்த்தால் கூட பத்து இலட்சம் அதிகப்படியான வாக்குகள் தமக்குக்கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். இவ்வாறு இவ்விரு வேட்பாளர்களும் வெற்றி குறித்து நம்பிக்கையை வெளியிட்டு வந்தாலும் தேர்தல் களம் யாருக்கச் சாதகமானது என்பது குறித்து மதிப்பிடமுடியாத நிலையே காணப்படுகிறது. தென்பகுதி ஆய்வாளர்கள் முன்னர் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் மேற் காள்ளும் ஊகங்கள் கூட தெளிவற்ற குழம்பிய நிலையிலேயே உள்ளன. ஆனால் அவை தெளிவாக இருப்பினும் கூட சரியாக அமைந்துவிடுமென சிறிலங்காவைப் பொறுத்து கூறிவிடமுடியாது போர் நிறுத்தம் மூன்றரை வருடங்கள் நீடித்திருக்கின்ற நிலையில் அதனால் மக்களின் மனநிலை எவ்வாறு மாறுபட்டிருக்கின்றது. என்பதைப் பொறுத்தே வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படலாம் என்பது ஒருபுறம், மறுபுறம் விலைவாசி ஏற்றம், வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன குறித்த விவகாரமே தென்னிலங்கையில் ஆட்சியைத் தீர்மானிப்பது வழமையாகும். நாட்டை விற்காமல் பொருளாதாரக் கொள்கை என்று ஜே.வி.பி. வலியுறுத்துகிறது. இது சிறிலங்கா இன்றுள்ள நிலையில் சாத்தியமா? அவ்வாறான கொள்கையை கடைப்பிடிக்கும் வல்லமையும் திடமும் மகிந்த ராஜபக்ஷவுக்கு உண்டா? என்பதெல்லாம் இங்கு எழுகின்ற கேள்விகள் அல்லாவிடின் ஜே.வி.பி. உலகோடு ஒத்தோடத்தயார் நிலையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் கூட்டமைப்பு தொடர்வது போல அந்த ஆட்சியில் குத்து வெட்டுகளும் தொடர்வதைத் தவிர்க்க முடியாது. வேலவன்
|