|
தமிழர் தயாகத்தில் தமிழீழ பெண்கள் வலிமையும் பலமும் வீர உணர்வும் பெற்று மிளிர்கின்றனர். இந்த வீரத்தையும் எழுச்சியையும் ஊட்டி வித்தாகிச் சென்றவர்தான் 2ம் லெப்.மாலதி. இவரது தாயக விடுதலைக்கான நேசிப்பு, தலைவரின் மீதான பற்றும் தமிழ்பெண் குலம் இன்று தலை நிமிர்வுடன் வாழ்வதற்கான சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது.
எமது தாயக விடுதலைப் போராட்டம் தோற்றம் பெறுவதற்கு முன் எமது தமிழ் பெண்கள் பாரம்பரிய சமய, சம்பிரதாயக் கட்டுப்பாடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். அது அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அடைய முடியவில்லை. ஆண்களுக்கு இருக்கின்ற சமத்துவம் என்பது பெண்களைப் பொறுத்தமட்டில் இல்லாதிருந்தது. எனினும் தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்தி முன்னெடுத்த வேளை பெண்களுக்கான சமத்துவத்தையும் வழங்கினார். பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாக,கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாக தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது அவா என தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்திருந்தார். அதனை நிறைவாக்கும் வகையில் ஆயிரமாயிரம் பெண்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். அகப்பை, சமையலறை, திருமணம் என்ற கட்டுக்குள் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடங்கி விடாமல் அவர்கள் சுதந்திரமாக தமது திறனை விடுதலைப் போராட்ட வாயிலாக வெளிப்படுத்தினர். களமுனைகளில் எதிரிகளை திணறடிக்கும் படையணிகளாக அவர்கள் அணிவகுத்தனர். சோதியா, மாலதியின் படையணிகளின் போரியல் ஆற்றலும், திறனும் சிங்கள படைகளுக்கு பலத்த அடிகொடுத்திருக்கின்றது என்றால் வியப்பில்லை. அது மட்டுமன்றி கடற்புலிகளாக, கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளில் வங்கக் கடலில் கடல் புறாக்களாக இந்த மகளிர்கள் எமது தாயக தேசத்தை காவல் காத்துள்ளனர். கனரக ஆயுதங்களை தோளில் சுமந்து எதிரிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து சண்டைக் களங்களில் புரிந்த தீரத்தை நெஞ்சுமறக்குமா? அதற்கு ஒருபடி மேல் சென்று உயிராயுதமாக எதிரிகளின் இலக்குகளை அழித்து தாயக தேசத்தில் இவர்கள் சரித்திரம் படைத்து நிற்கின்றனர். தேசியத் தலைவரும் பெண்குலத்தின் பெருமைகளை மேம்படுத்துவதற்காக தமிழீழ மகளிர் அரசியல்துறை என்ற ஒரு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தினார். இன்று தமிழீழ நிர்வாக அலகுகளில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அத்தனை துறைகளிலும் பெண்களின் பங்களிப்பும், சாதனையும் மிளிந்து இருக்கிறது என்றால் வியப்பில்லை. இதே வேளை விடுதலைப் போராட்டம் தமிழீழ பெண்களின் கனதியான பங்களிப்பு, தேசிய உணர்வின் மூலம் ஒட்டுமொத்த மானிட குலத்தையுமே உசுப்பி விட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் தாயக தேசத்தில் தமிழ் பெண்கள் சிங்களப் பேரினவாதப்படைகளின் காமப்பசிக்கு இரையாக்கப்பட்டனர். வடக்கே கிருசாந்தினி, சாரதாம்பாள், கிழக்கே கோணேஸ்வரி உட்பட எத்தனை பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்? எத்தனை ஆயிரம் பெண்கள் கணவனை இழந்து வாழ்கின்றனர்? ஆனால் மீண்டும் ஒரு தடவை ஈழப்போர் மூழுமாகவிருந்தால் எதிரிகள் எமது தாய்க் குலத்துக்கு அருகே மூச்சு விடமுடியாதளவிற்கு இன்று வலிமை பெற்று வருகின்றோம். மகளிர்கள் தற்போது தற்காப்பு போர் பயிற்சி பெற்று வருகின்றனர். இது எதிர்காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கு உறுதுணை புரியும். எனவே 2ம் லெப்.மாலதி தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தேசியத்தலைவரின் பாதையில் களமாடி விடுதலைக்கான முதல் பெண் மாவீரர் என்ற பெருமையை புகட்டி வித்தாகியுள்ளார். இவரது நினைவு நாள் தமிழ் தேசிய பெண்கள் எழுச்சி நாளாகவும் தாயக தேசமெங்கும் கொண்டாடப்படுகின்றது. இன்றைய நாளில் எமது தேசத்தின் விடியலுக்கான பாதையை நோக்கி தாயக மகளிர் அனைவரும் அணிதிரள வேண்டுவோமாக. மட்டக்களப்பு ஈழநாதம்
|