|
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டு வரும் நிலையில் உள் விவகாரங்கள் மற்றும் குத்து வெட்டுக்கள் என்பன மெல்ல அரங்கேறத் தொடங்கியுள்ளன. அரசியலில் அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்ற பெரும் அங்கலாய்ப்புக்கு மத்தியில் மக்கள் காணப்படுகின்றனர்.
வழமைபோன்று இத் தடவையும் தேர்தலில் இனப்பிரச்சினை விவகாரம் சூடு பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதேவேளை நாட்டின் இனப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சு.க.ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இருக்கும் திட்டங்கள் என்ன? என்பதை அவர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஐ.தே.க. கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா கேட்டதையே நாமும் கேட்கிறோம் என்றும் ஐ.தே.க. அழுத்தியுரைத்துள்ளது. சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்னும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேர் சீராக முன் வைக்க முடியாதுள்ளது என்பதையே ஐ.தே.க. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுட்டிக் காட்டி வருவதுடன் தேசிய இனப் பிரச்சினைக்கு பிரதமர் மகிந்தவினால் முன் வைக்கப்படும் தீர்வு என்ன என்றும் பகிரங்கப்படுத்துமாறு கோருகின்றது. இந்நிலையில் ஜே.வி.பி.யின் கொள்கையுடன் ஒரு போதும் இணங்க முடியாது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் வெளி விவகார அமைச்சருமான அநுரா பண்டார நாயக்க திட்டவட்டமாக கூறியுள்ளார். ஜே.வி.பி. யினரின் கொள்கையினை ஏற்றுக் கொண்டால் எமது நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது. சுனாமி நிவாரண பொதுக் கட்டமைப்பினை ரத்துச் செய்ய வேண்டுமெனவும், விடுதலைப் புலிகளுடன் பேசக் கூடாது எனவும் ஜே.வி.பி. கூறுகின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அநுரா பண்டார நாயக்கா குறிப்பிட்டுள்ளார். கட்சி பிளவுபட்டு விடக் கூடாது என்பதற்காகவே மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தாமே முன்மொழிந்ததாகவும் கூறியுள்ள அநுரா பண்டாரநாயக்கா எவ்வாறெனினும் ஜே.வி.பி.யின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மீண்டும் கூறியிருக்கிறார். தேசிய ரீதியான கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஓரளவு கடைப் பிடித்து வருவதுடன் சிறுபான்மை, மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற உறுதியான போக்கு இருந்து வருவதையும் முற்றாக மறுக்க முடியாது. ஆனால் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் தங்கள் இனவாதப் போக்குகளையும் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கும் வகையிலான திட்டங்களையும் சுதந்திரக் கட்சிக்குள் புகுத்த முனைவதே சுதந்திரக் கட்சியைக் கட்டி வளர்த்தோருக்கும், அதன் அபிமானிகளுக்கும் தர்மசங்கடமான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, சுனாமி நிவாரணப் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உதவ முடியாது போனது என்ற ஆதங்கம் உண்மையில் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரரான அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவுக்கும் இருந்து வருவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். யதார்த்த சிந்தனையுடன் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கா கூறியுள்ள கருத்துக்கள், உள் வீட்டுக் கொந்தளிப்பை மெல்ல வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ள அதேவேளை, நாட்டின் அரசியல் எதிர்காலம் மிகுந்த கேள்விக்குறியாக மாறியிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தான் இனவாதம், மதவாதம் பேசி வாக்கு வேட்டையில் ஈடுபடப் போவதில்லை என்று கூறியுள்ளார். இந்த நாட்டில் மீண்டும் இனவாதம், மத வாதம் என்பன தலை தூக்கி அதன் மூலம் நாடு சீரழியக்கூõடது என்பதில் அரசியல் வாதிகள் அனைவரும் கவனம் செலுத்துவது இன்றியமையாதது. எவ்வாறெனினும் தேசிய இனப்பிரச்சினை தீர்வின் பின்னணியில் தெரிவிக்கப்படும் கருத்துக்களும், சிறுபான்மை மக்களை புறந்தள்ளி எதனையும் சாதித்து விடலாம் என்ற முனைப்புக்களும், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தைத் தோற்று வித்துள்ளன. இனவாதிகளின், சமாதானத்தை சீர் குலைக்கும் வகையிலான கருத்துக்கள் எங்கே மீண்டும் நாட்டில் யுத்தத்தைத் தூண்டிவிடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மக்களைக் கவரும் வகையில் இன வாதத்தைத் தூண்டும் பிரசாரங்களே இறுதியில் இனக் கலவரங்களுக்கு வித்திடுவதுடன் நாட்டையும் பேரழிவுப் பாதையை நோக்கி நகர்த்திச் செல்கின்றது. வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் ஜனாதிபதிவேட்பாளர்கள், நாட்டினதும் மக்களினதும் அமைதி குறித்து சிந்திப்பது இன்றியமையாதது. ஏற்கனவே அரசியல் ரீதியான குத்து வெட்டுக்களாலும் கழுத்தறுப்புக்களாலும் இந்த நாடு சிக்கித் தவிக்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு இரு தசாப்த காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் யுத்தமா? சமாதானமா? என்ற கேள்வியே நீடித்து வருகின்றது. எவ்வாறெனினும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் பின்னணியில் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகி விடக் கூடாது என்பதே அனைவரதும் விருப்பமாகும்.
virakesarai
|