பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பலியானோர் தொகை 40 ஆயிரத்தை எட்டுகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 11 October 2005

25 இலட்சத்துக்கும் அதிகமானோர் இருப்பிடமின்றி பரிதவிப்பு பலியானோர் தொகை 40 ஆயிரத்தை எட்டுகிறது
 பாகிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் 30 ஆயிரத்திற்கும் 40 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட தொகையினர் பலியாகியிருப்பதாக யுனிசெப்பும், பாகிஸ்தானின் சிரேஷ்ட அரச அதிகாரியும் நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்துள்ள அதேசமயம் பூமியதிர்வினால் சின்னாபின்ன மடைந்த கிராமங்கள், நகரங்களைச் சேர்ந்த பல இலட்சக்கணக்கான மக்கள் தற்காலிக கூடாரங்களில் காயத்துடனும், பசிமயக்கத்துடனும் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருக்கின்றனர்.

வீதிகள் யாவுமே இடிபாடுகளால் மூடிக்கிடப்பதுடன், மின்சாரம், நீர்விநியோகம் என்பன முழுமையாகத் துண்டிக்கப்பட்டுவிட்டன.

25 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக புகலிடம் தேவைப்படுவதாக ஐ.நா.எச்சரித்துள்ளது. பூமியதிர்வால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்குவியல்களும் இடிபாடுகளும் மூடியிருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உணவு, குடிநீர் விநியோகத்தை வான்மார்க்கமாகவே பாகிஸ்தான் இராணுவத்தினர் கொண்டு செல்கின்றனர். ஆப்கானிஸ்தானிலிருந்து 8 ஹெலிகொப்டர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.

`30,000 - 40,000 வரையிலான மக்கள் இறந்திருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் எமக்குத் தெரிவித்திருக்கிறது' என்று இஸ்லாமாபாத்திலிருந்து யுனிசெப்பின் பேச்சாளர் யூலியா ஸ்மினா லே வேர்டன் நேற்றுத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 சதவீதமான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பலியானோர் தொகை 40 ஆயிரத்தை எட்டுமெனவும் 60 ஆயிரம் பேர்வரை காயமடைந்திருப்பதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத அரச அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.

`முழுத் தலைமுறையுமே துடைத்தெறியப்பட்டுவிட்டது'

பூகம்பத்தினால் பாகிஸ்தானின் முழுச் சந்ததியினருமே துடைத்தெறியப்பட்டுவிட்டனர் என்றும், மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்போர் சிறுவர்களே எனவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சௌகத் சுப்தான் தெரிவித்தார்.

முஸாபராபாத்தில் மீட்புப் பணியாளர்கள் சிறுவர்களின் சடலங்களை மீட்டெடுத்த போதும் அவர்களின் உடல்களை உரிமை கோருவோர் எவருமில்லை. இது அவர்களின் பெற்றோர் உயிருடன் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் கவலையுடன் அவர் கூறினார்.

பாகிஸ்தானுக்கு உதவ சர்வதேச நாடுகள் ஏற்பாடு

இதேவேளை, பாகிஸ்தானுக்கு உதவியளிப்பதற்கான முயற்சியில் உலகத் தலைவர்கள் நேற்று ஈடுபட்டனர்.

மீட்புக் குழுக்கள், ஹெலிகொப்டர்கள், மருத்துவ உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முடுக்கி விடப்பட்டன.

8 உறுப்பினர்களடங்கிய ஐ.நா.குழு மீட்புப் பணிகளில் ஒத்துழைப்பு வழங்க களம் இறங்கியுள்ளது.

துருக்கி, சீனா, பிரிட்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் இக் குழுக்களில் அங்கம் வகிக்கின்றனர்.

நடமாடும் வைத்தியசாலைகள், தூய்மையான நீர், கம்பளங்கள் என்பன உடனடியாகத் தேவைப்படுவதாகவும் ஹெலிகொப்டர்களும் அதிகளவில் தேவை என்றும் ஐ.நா.மனிதாபிமான நடவடிக்கை அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பெருந்தொகையானோரை பூகம்பம் காவுகொண்டிருக்கும் அதேசமயம், இந்தியாவின் வடபகுதியில் 650 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலும், 4பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் தலைநகர் முஸாபராபாத் பகுதியில் சுமார் 2 ஆயிரம்பேர் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குளிரால் நடுங்கியவாறு உடனடி நிவாரண உதவிக்கு இவர்கள் ஏங்குவதாக ஏ.பி.செய்திஸ்தாபன நிருபர் கூறுகிறார். இங்குள்ள அநேக கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. கொங்கிரீட் கற்களை அகற்றி இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை தேடும் பணியில் பாகிஸ்தான் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

3 நாட்களாக தமக்கு உண்ண எதுவும் கிடைக்கவில்லையெனவும் ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளை மட்டுமே நிவாரணப் பணியாளர்கள் தந்ததாகவும் முகமட் உல்லா கான் (50 வயது) என்பவர் தெரிவித்தார். கால் முறிந்த நிலையில் அவரின் மனைவி அருகில் இருந்ததாக நிருபர் கூறுகிறார்.

3 மாடிக் கட்டிட உரிமையாளரான உல்லாகானின் இல்லம் தரைமட்டமாகிவிட்டது. மூன்றாவது மாடியில் தங்கியிருந்ததால் அவர்களின் 10 பேரடங்கிய குடும்பம் உயிர்தப்பிவிட்டது. மலைப் பகுதியில் எனது பிள்ளைகள் தற்போது நிரந்தர வெளியில் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை என்று அந்தத் தந்தை கூறினார்.

நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அனர்த்தம் என்று பூகம்பம் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப், உடனடியாக உதவுமாறு உள்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு உடனடியாக (ஞாயிற்றுக்கிழமை) பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி புஷ் எந்த வழியில் என்றாலும் முடிந்த வரை உதவ விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.

`பல்லாயிரக் கணக்கானோர் இறந்தும், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்தத் தருணத்தில் அமெரிக்கா உதவ விரும்புகிறது என்று தனது ஓவல் அலுவலகத்தில் இருந்து புஷ் அறிவித்திருக்கிறார்.

பல நகரங்கள், கிராமங்கள் அடியோடு நாசமாகிவிட்டன. ஜக்லரி, குபால் கார், ஹரிகால் பனியாலி போன்ற கிராமங்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் பாதி அழிந்துவிட்டது என்று பாகிஸ்தான் அமைச்சர் பைசர் ஷயத் கூறினார். நிலக்கசிவால் பல கிராமங்கள் அப்படியே மூழ்கிவிட்டன. அவற்றில் வசித்த மக்கள் உயிரோடு புதைந்தனர்.

பிணங்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். கிரேன்கள் மற்றும் பொக்ரைன் எந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளை அகற்றினார்கள். அப்போது தோண்டத் தோண்ட பிணங்களாக வந்தன. பாகிஸ்தானில் காஷ்மீர் முழுவதும் பிணக்குவியலாகக் காட்சியளிக்கிறது.

பாகிஸ்தானில் பூகம்பத்தின் தாக்கும் ரிச்டர் அளவு கோலில் 7.6 வரை இருந்தது. இதுபோன்ற பயங்கர பூகம்பத்தை பாகிஸ்தான் சந்தித்தது இல்லை என்று கூறப்படுகிறது. பூகம்பத்தால் நாசமான நகரங்கள் மயானமாகக் காட்சியளிக்கின்றன.

வீடுகள், கட்டிடங்கள், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தவர்களில் ஒரு சிலர் நேற்று குற்றுயிராக மீட்கப்பட்டனர்.

இஸ்லாமாபாத்தில் இடிந்து விழுந்த 19 மாடிக் கட்டிடத்தில் மீட்புப் பணி ஞாயிறுடன் முடிவடைந்துவிட்டதாக கடைசியாகக் கிடைத்த தகவல் கூறுகிறது. அந்த மீட்புப் பணியில் பிரிட்டனைச் சேர்ந்த மீட்புப் படையினரும் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு இடையில் இருந்து 85 பேர் காயங்களுடன் உயிரோடு மீட்கப்பட்டதாகவும், 19 பேர் பிணமாக மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யூரி நகரம் சுடுகாடுபோல் காட்சியளிக்கிறது. அங்கு இறந்த உடல்களை சுற்றி உறவினர்கள் அமர்ந்து கதறி அழும் காட்சி நெஞ்சை பிழிகிறது. மக்கள் விடியவிடிய வீதிகளிலும், பொட்டல் வெளிகளிலும் பதற்றம், பீதியோடு இரவைக் கழித்தனர். பாலக்கோட் என்ற நகரில் இருந்த 3 பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அங்கு இருந்த 350 மாணவ, மாணவிகள் பலியானார்கள். அவர்களது உடல்கள் ஞாயிறு மீட்கப்பட்டன. மாணவர்களின் உடல்களைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

கட்டிடங்கள், வீடுகளின் இடிபாடுகளுக்கு உள்ளே இருந்து மரண ஓலங்களும், முனகல் சத்தமும் கேட்கிறது. ஆனாலும், இடிபாடுகளை அகற்றி அங்கு சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இஸ்லாமாபாத்தில் கரம் உஸ்மான் என்ற பொலிஸ் அதிகாரி கூறும்போது இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தைகளையும், 35 வயது நபரையும் நான் மீட்டு அம்புலன்சில் சேர்த்தேன் என்றார்.

இஸ்லாமாபாத்தில் தரை மட்டமான 19 மாடிக் கட்டிடத்தை ஜனாதிபதி முஷாரப், பிரதமர் சவுகத் அலியும் சென்று பார்த்தனர். பாதித்த மற்ற பகுதிகளை ஞாயிறு முஷாரப் ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார்.


rajan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..