பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow மகிந்தவினதும் ரணிலினதும் கவனத்துக்கு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மகிந்தவினதும் ரணிலினதும் கவனத்துக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 11 October 2005

ஆசியா அபிவிருத்தி அடைந்து வருகின்றது. சீனா வியப்புக்குரிய வகையில் அபிவிருத்தி அடைந்து வருகிறது. இந்தியாவும் இதற்கு சளைக்காத வகையில் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. எனினும், ஒப்பீட்டளவில் வேற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுடன் பார்க்கும் போது இலங்கையில் அபிருத்தி மிகவும் மந்த கதியிலேயே இடம் பெறுகின்றது.

அவ்வாறு அபிவிருத்தி அடையும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கு விஜயம் செய்து விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் பொருளாதாரத்தைக் காணும் போது கண்ணீர் பெருகுகின்றது. ஓர் அழகான நாடு நல்ல மனிதர்கள் உள்ள நாடு. அனைவரையும் அன்போடு உபசரிக்கும் நாடு என்று சர்வதேச அரங்கில் புகழ் பெற்றிருந்த நாடு இன்று சாபக்கேடுக்கு உள்ளாகி விளங்குகின்றது. இன்று எமது தேசம் வறுமையில் வாடும் நாடாகும், அன்று அனைவரும் முகம் மலர்ந்து வாழ்ந்த நாடு. இன்று அனைத்தும் மறைந்து விட்டது. இன்று நாம் மாற்றாரிடம் கையேந்தி வாழ்ந்த போதிலும் கோபமும் ஆவேசமும் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்த சாபக்கேடுக்கான காரணகர்த்தாக்கள் பலர். இதற்காக நாம் எவர் மீது குற்றஞ் சுமத்த வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

ஆசிய பிராந்தியத்தில் அபிவிருத்தித் துறையில் ஓர் ஒளிவிளக்காகப் பிரகாசிக்கும் திறமை எமக்கு இருந்தது. பிராந்திய நாடுகளுக்கு முன்மாதிரியாக வழிகாட்டும் திறமை எமக்கு இருந்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நாம் ஆசிய நாடுகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்தோம். சிறந்த வாழ்க்கைத் தரம், கல்வியறிவு, மிகச்சிறந்த சிவில் நிர்வாகம் ஆகிய துறைகளில் நாம் ஜப்பானுக்கு மாத்திரமே அடுத்தபடியாக இருந்தோம். இந்தியாவுக்குப் பின்னர் இலங்கைககு சுதந்திரம் வழங்குமாறு காலனித்துவ ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் அளவுக்கு திறமை வாய்ந்த ஓர் சிவில் நிர்வாகம் எம்மிடம் இருந்தது.

அன்று கொழும்பு நகரம் மாநகரங்களுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய பின்பற்றக்கூடிய ஓர் சிறந்த நாடாக, சிங்கப்பூர் பிரதமர் லீ டுவான் யூ அன்று இலங்கையை வர்ணித்திருந்தார். அன்று உயர் நிலையில் இருந்த நாம் இன்று ஏன் இவ்வாறு தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கிறோம்?

உங்களுக்குத் தெரியுமா?

கடந்த ஓர் சகாப்தமாக இலங்கையில் தனியார் துறையானது சலுகைகள் நீக்கப்பட்ட நிலையிலும் கூட பொருளாதார அபிவிருத்தியில் ஒரேயொரு மாபெரும் சக்தியாகவும் பொறிமுறையாகவும் விளங்கியது. எனினும், வெளிநாட்டவர்கள் தமக்குக் கிடைக்கும் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இலங்கையர்களுக்கு எதுவும் கிடைக்க வில்லை. இது உள்நாட்டு மக்களின் ஊக்கத்தை மழுங்கடிப்பதாகவே இருக்கின்றது. சிறிய, நடுத்தர மற்றும் பாரியளவிலான வெளிநாட்டுக் கம்பெனிகள் தமது நிறுவனங்களை மூடி ஊழியர்களை நிர்க்கதியான நிலைக்குத் தள்ளியுள்ளன. உள்நாட்டு வங்கிகள் அந்நிய செலாவணித் துறையில் அடிமட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இலங்கை சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்கு அதிகமான காலம் கடந்துள்ள போதிலும் எமது சிந்தனைகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? நாம் எமது திறமைகளை இனங்கண்டுள்ளோமா? பெரும்பாலான நாடுகள் சட்டதிட்டங்கள் மூலம் ஏகபோக உரிமைகளை வரையறுத்துள்ளன. எனினும், வறிய நிலையிலிருக்கும் எமது நாடு வெளிநாட்டு ஏகபோக உரிமைகளை ஊக்குவித்து ஊக்குவிப்புகளையும் வழங்கியுள்ளன. அதற்கான சில உதாரணங்கள் பின்வருமாறு.

சுங்கவரியற்ற வர்த்தக நிலையங்கள்

வெளிநாட்டவர் ஒருவருக்குக் கேள்விப்பத்திரம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறன ஓர் பொருத்தமற்ற நிலையில் சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஓர் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றார்கள். இந்த வெளிநாட்டுச் செல்வந்தர் தனது மொத்த விற்பனவு வருமானம் 150 மில்லியன் அமெரிக்க டொலர் என (15 பில்லின் ரூபா) மிகவும் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்கின்றார். இதனால் இலங்கை வருடாந்தம் பெரும் தொகையான அந்திய செலாவணியை இழக்கின்றது. இதன் மூலம் பொதுத் திறைசேரி தனது வருமானத்தை இழப்பதுடன் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு தமது உற்பத்திப் பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகின்றது. இலங்கையர்கள் புத்திசாலித்தனமானவர்கள் என்பதுடன் அவர்களுக்கு சில்லறை வர்த்தக நிலையங்களை நடத்தும் திறமையும் இருக்கின்றது.

பிரீமா

பிரீமா தொழிற்சாலைக்கு ஏகபோக உரிமையை வழங்கும் பொருட்டு நாம் எம்மிடம் இருந்த ஒரேயொரு தொழிற்சாலையையும் மூடி விட்டோம். எல்லையற்ற வரிச்சலுகை, சுங்க வரிச்சலுகை என்பன பிரீமா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. கோதுமைத் தானியங்களைக் கொள்வனவு செய்யும் பொருட்டு மானியம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை கோதுமை மாவை இறக்குமதி செய்து பாணின் விலையைக் குறைக்கக் கூடிய நிலைமைக்குத் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் கோதுமை மா இறக்குமதி மீது சுங்க வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பண்டங்கள் சேகரிக்கப்படுவதற்கு எதிராக சட்டங்களை விதிக்குமாறு வர்த்தக சபை கோரிக்கை விடுத்திருப்பதை கௌரவ தலைவர்களே நீங்கள் அறிவீர்களா? இதன் மூலம் எந்தப் பலனும் கிடைக்க வில்லை. எனினும் சில மாதங்களுக்கு முன்னர் பிரீமா நிறுவனத்தின் கட்டளைப்படி கோதுமை மா சேகரிப்புக்கு எதிராக 25% சுங்கவரி விதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்களா?

இந்தியன் எண்ணெய் கம்பெனி

இந்திய எண்ணெய்க் கம்பெனியின் செயலாற்றுத் திறமையினால் அதன் பங்கு விற்பனையானது எதிர்பார்த்த அளவினையும் விட அதிகரித்தது. ஏகபோக உரிமையைப் பெறுமளவிற்கு இந்த நிறுவனம் வெற்றியடைந்திருப்பதற்கான காரணம் அரசின் கருணை மானியமே. தற்போது அவர்களால் தமது மொத்த முதலீட்டுத் தொகையை வட்டியுடன் அந்நிய செலாவணியாக தமது நாட்டுக்கு அனுப்பிவைக்க இயலும். இதன் மூலம் எமது திறைசேரிக்குக் கிடைக்க விருந்த மானியமும் இல்லாமல் போகின்றது.

செல்காஸ்

இலாபம் ஈட்டக் கூடிய வாய்ப்பு செல்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தகவல்களின் படி உள்நாட்டு முதலீட்டாளரான லாப் காஸ் கம்பெனிக்குப் பல இடையூறுகளும் அநீதிகளும் இழைக்கப்பட்டுள்ளன. செல்காஸ் கம்பெனியால் வழங்கப்படும் தரம் குறைந்த காஸினால் பெரும்பாலான தொழிற்சாலைகள் நட்டம் அடைந்துள்ளன.

செல்டெக்ஸ்

உராய்வு எண்ணெய்க்கான சந்தை வாய்ப்பு பெற்றோலிய நிறுவனத்திடமிருந்து வாபஸ் பெறப்பட்டு செல்டெக்ஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பெனி பணம் சம்பாதித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றது.

ஒக்சிஜன்

நோர்வேயின் போட்டியால் கொக்கலையில் உள்ள உள்நாட்டுப் பீ.ஓ.ஐ.கம்பெனி (முதலீட்டுச் சபை) மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவை

எயார் லங்கா நிறுவனம் எமிரேட்ஸுக்கு வழங்கப்படும் போது ஐ.தே.க. கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதன் பின்னர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் பேச்சுவார்த்தையின் பொருட்டு தூதுக்குழுவொன்றை அனுப்பிவைத்தோம். எனினும், எமது தூதுக்குழுவினர் அந்த நாட்டினால் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை காரணமாக எதிர்பாராத பொறியொன்றில் சிக்கிக் கொண்டார்கள். எமிரேட்ஸில் இலங்கைப் பணிப்பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை இழக்க வேண்டும் என எமது தூதுக்குழுவினர் எச்சரிக்கப்பட்டிருந்தனர். எமது தூதுக்குழுவினர் மேலும் பல சலுகைகளை வழங்க வெறுங்கையுடன் வந்த போதும் அவர்களது பொதிகளில் பரிசுகள் நிறைந்திருந்தன. பேச்சுவார்த்தையின் சம்பிரதாயங்களோ உண்மைத்தன்மையோ இங்கு கடைப்பிடிக்கப்பட வில்லை.

உங்களுக்குத் தெரியுமா?

நாங்கள் தமிழீழவிடுதலைப் புலிகளுடன் அன்று தொடக்கம் இன்று வரை நடத்திவரும் பேச்சு வார்த்தைகள் நாட்டில் சமாதானத்துக்குப் பெரிதும் வழிவகுக்கும் என்பது தெளிவாக இருக்கின்ற போதிலும் அச்சம் அதற்குத் தடையாக இருக்கின்றது. அது மீண்டும் யுத்தம் ஏற்படுமோ என்ற அச்சமாகும். எனவே, ஓர் சமர் முனையில் பயன்படுத்தப்படும் சொல்லின்படி நாங்கள் அடிபணிந்தோம். சமாதானத்தை ஏற்படுத்தும் பொருட்டு நாம் பெரும் பலத்துடன் அணிதிரள வேண்டும் என்பதுடன் அதற்குத் திடமாக போராடுதலும் வேண்டும். தண்டனைகள் தொடர்பான எச்சரிக்கைகளுடன் கருத்துப் பரிமாறல்களும் இடம் பெறல் வேண்டும்.

தனியார் மயப்படுத்தல்

தனியார் மயமாக்கல் என்பது வெளிநாட்டாருக்கு தொழில் முயற்சிகளைக் கையளிப்பது அல்ல. அதற்குப் பதிலாக அரசுக்கும் போதியளவு உரிமையுடைய ஒருங்கிணைந்த பங்குடைமைகளை ஆரம்பித்தல் வேண்டும். இவ்வாறு ஆரம்பிக்கப்படும் நிறுவனங்கள் மூலம் அரசும் இலாபம் ஈட்டலாம். எனினும், முகாமைத்துவம் பூரணமாக தனியார் துறையைச் சார்ந்ததாக அமைதல் வேண்டும். அதன் பங்குகள் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் வெளி நாட்டாருக்கும் விற்பனை செய்யப்படல் வேண்டும்.

முதலீட்டுச் சபை

இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட வில்லை. இந்த சபைக்குப் பரந்த அதிகாரங்கள் இருக்கின்றன. இந்தச் சபை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதனால் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன. சில உதாரணங்கள் பின்வருமாறு: எமது நாட்டில் உற்பத்தியாகும் மற்றும் தாராளமாகக் கிடைக்கும் பொருட்களுக்கு சுங்கவரிச் சலுகை வழங்கப்படல், வெளிநாட்டு ஊழியர்களை எத்தகைய ஒழுங்கு முறைகளும் அற்ற வகையில் சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்குதல், பயிற்சி பெற்ற ஊழியர்கள் போதுமான அளவில் இல்லை என்ற அவர்களது வாதம் பலமற்றது. குறிப்பிட்ட கால வரையறைக்குள் தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்கல் வேண்டும். கட்டிட நிர்மாணத்துறையின் பொருட்டு பயிற்சி பெற்ற ஊழியர்கள் போதியளவில் இல்லையென்ற நிலைமையை எவ்வாறு சமாளிக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டிடக் கலைஞர்கள், கட்டிடங்களை நிர்மாணிக்கும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் ஆகிய இவை எல்லாம் வெளிநாடுகளிலிருந்து பெறப்படப்பட்டவையாகும். கட்டிடப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இலங்கையில் சிறந்த முறையிலான தொலைபேசி இயக்குனர்கள் இல்லை என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான தொழில் முயற்சிகளை இலங்கையில் அறிமுகம் செய்து வைப்பதன் பயன் யாது? பல வருடங்கள் கடந்தும் இந்திய தாதிமார்கள் அப்பலோ வைத்தியசாலையில் பணிபுரிந்து வருகின்றார்கள்.

இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கான காரணங்களிற் சிலவற்றை உங்களுக்குக் கூறினேன். ஓர் அரசு இலங்கையர்களின் திறமைகளை இனங்கண்டு கொள்ளத் தவறும் பட்சத்தில் அவர்களது சேவைகளைப் பெறாது வெளிநாட்டவர்களை மாத்திரம் ஊக்குவிப்பதன் மூலம் நாடொன்றை அபிவிருத்தி செய்ய இயலுமா? வெளிநாட்டவர்களுக்கல்ல உள்நாட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். எமது நாட்டில் நாம் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கூடாது. வேறு நாடுகளில் உள்நாட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதுடன் இலங்கையில் அவ்வாறான நிலைமைகள் காணப்பட வில்லை.

கௌரவ பிரமுகர்களே! அனைத்திலும் வெற்றி பெறும் பொருட்டு நாம் முதலாவது, எமது நாடு இரண்டாவதும் எமது நாடு என்ற முன்னுரிமை அடிப்படையில் செயற்பட வேண்டும். தலைவர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்பது ஜனநாயகத்தின் கோட்பாடல்ல. தலைவர்கள் சேவையாற்றுகிறார்கள் என்பதே ஜனநாயகத்தின் உண்மைக் கோட்பாடாகும்.

அவர்கள் நாட்டுப் பற்றுடன் சேவையாற்றுதல் வேண்டும். எமது நாடு செல்வம் மிக்கது. திறமை படைத்தவர்களை

செல்வமாகக் கொண்ட நாடு, இயற்கை வளம் மிக்கது, விவசாயத் துறைக்கான வளங்களைக் கொண்டது.

எமது நாடு இயற்கை எழில் மிகு தேசமாகும். உள்நாட்டு உற்பத்தி போதுமானதல்ல என்பதனால் இறக்குமதி செய்கின்றோம். 1973 இல் சுமார் ஐந்து இலட்சம் உல்லாசப்பயணிகள் இலங்கை வந்தார்கள். மூன்று தசாப்தங்கள் கடந்தும் நாம் இந்த இலக்கை அடையும் பொருட்டு பெரும் முயற்சி எடுத்து வருகின்றோம். எங்களால் மேலும் பல விடயங்ளை எழுத முடியும். எனினும், நீங்கள் ஏன் இதனைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம்.

எங்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனங்கள் தேவையில்லை. நீங்கள் எங்கள் நாட்டை உண்மையான அபிவிருத்திப் பாதையில் வழிநடத்திச் செல்வீர்கள் என்ற உறுதிமொழியும் உத்தரவாதமும் அர்ப்பணிப்புமே எமக்குத் தேவைப்படுகின்றது. வடக்கு தொடக்கம் தெற்கு வரை, கிழக்கு தொடக்கம் மேற்கு வரை, ஏழைகள், செல்வந்தர்கள், சலுகை பெற்றவர்கள், சலுகை பெறாதவர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி அனைத்து இலங்கை வாழ் மக்களின் ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.

இறுதியாக, ஜனாதிபதி தேர்தலை அடுத்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்குமாறு உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை நியமிக்கும் போது கட்சி ஆதரவாளர்கள் என்ற அணுகு முறையிலிருந்து விலகி வாக்காளர்கள் என்ற அடிப்படையில் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

நாங்கள் எமது நாட்டை நேசிக்கின்றோம்.

நாங்கள் எமது தலைவர்களை நேசிக்கின்றோம்.

இதனை நீங்கள் அறிதல் வேண்டும்.


எம். விக்கிரமசிங்க
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..