பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow சாத்தியமற்ற சமாதானச் சூழல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சாத்தியமற்ற சமாதானச் சூழல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 11 October 2005

சிறிலங்கா அரசு தேசவிரோத சக்திகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்கள் சுதந்திரமாகப் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதியில் கொலை கலாசாரங்களை நடாத்தி வரும் போது சமாதானத்துக்கான சூழலை உருவாக்கவோ, அல்லது தமிழ் மக்கள் சமாதானத்தின் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவோ முடியாது.

தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான சூடு தென்னிலங்கையில் பிடித்திருக்கின்றது. இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றியை நோக்கிப் பிரசாரங்களை முடக்கிவிட்ட போதும், போர் நிறுத்தத்தை உறுதியானதாக்கி, இயல்பு நிலையை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பினை அவர்கள் வழங்கவில்லை.

இது இங்கு கவனிக்க வேண்டிய விடயம். தற்போது சமாதானச் சூழல் மறைந்து செல்கின்றது. படைத் தரப்பினர் அவசரகாலச் சட்டம் என்ற விதியைப் பாவித்துத் தமிழ் மக்கள் மீது தமது வன்முறைக் கலாசாரங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழ் மக்கள் மத்தியில் துளியளவும் சமாதானம் மீதான நம்பிக்கையை உருவாக்காது.

சுற்றி வளைப்புக்கள், சோதனைக் கெடுபிடிகள் போர்க் காலச் சூழலில் எவ்வாறு இருந்ததோ, அதே சூழல் தான் தற்போதும், தொடர் கதையாகிச் செல்கின்றது. போர் நிறுத்தத்தின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களை மெல்ல மெல்ல மறைத்து, இறுக்கமான சூழலைத் தோற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளையே சிங்களப் பேரினவாத அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

சமாதானச் சூழலை மீளவும் உருவாக்குவதானால் போர் நிறுத்த உடன்பாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதில் அரச தரப்பு நடைமுறைப்படுத்தத் தவறியதால் தான் நிலைமை மோசமாவதற்குக் காரணம். படைத் தரப்புப் புகலிடம் வழங்கித் தமிழ் மக்களுக்கு எதிராக ஒட்டுப்படைகளை ஏவிக் கொலைக் கலாசாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளுமானால் உடன்பாடு எட்டப்படுவது கடினமானது. இவ்விடயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பல தடவைகள் சிறிலங்கா அரசுக்கும், நோர்வே, கண்காணிப்புக் குழு, சர்வதேச சமூகத்துக்கும் தெரியப்படுத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ் மக்களுக்குத் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கொலைகளைப் புரியும் ஒரு குழுவினரை வைத்துக் கொண்டு சமாதானம் குறித்துப் பேசுவதால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இதற்கான தீர்வு காணப்பட வேண்டியது காலத்தின் அவசியம்.

ஏனெனில் தற்போது தேர்தலில் குதித்து இருக்கும் இரு பிரதான கட்சி வேட்பாளர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்ச இவ்விடயம் குறித்து எதுவுமே பேசவில்லை. ஒரு வேளை இவர் ஜனாதிபதினால் இந்தக் குழு வினருக்குப் பாலூட்டி வளர்க்கும் சூழல் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

அதேவேளை ரணில் விக்கிரம சிங்கா அவர்கள் தான் ஜனாதிபதியானால் போர் நிறுத்தம் முறையாக அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால் தேசவிரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவது குறித்து எவ்வித கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் இவர்கள் நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பார்க ளானால் சமாதானச் சூழலை உருவாக்கி விட முடியாது.

ஒட்டுப் படைகளை வைத்துக் கொண்டு அரசு சமாதானச் சூழலைச் சீர்குலைக்கின்றது. என்ற குற்றச்சாட்டுத் தமிழர் தரப்பால் முன் வைக்கப்பட்ட போது, அதனை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா மறுத்திருந்தார். அவ்வாறான எவ்வித குழுக்களும் எங்களிடமில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் படையினருடன் இக்குழு இயங்கிவருவது என்பது பல்வேறு சம்பவங்களின் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூட இக்குழுவினரை நேரடியாகக் கண்டுள்ளனர். அப்படி இருந்தும் ஒரு ஜனாதிபதியவர்கள் உண்மைக்குப் புறம்பான வகையில் பொய் பேசுவது பொருத்தமான சமாதானச் சூழலை உருவாக்காது.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தான் கொலை கலாசாரத்தை மேற்கொள்கின்றார்கள் என்ற தவறான பிரசாரத்தை சர்வதேச சமூகத்தில் பரப்பித் தமிழ்த் தேசியத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த அரசு முனைகின்றது. இது தொடர்பாகத் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே சமாதானச் சூழலை உருவாக்குவதானால் முதலில் ஒட்டுப் படைகள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும். இதனை அரசு செய்யத் துணியாத வரை சமாதானம் சாத்தியமற்றது.


eelanatham.batti
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..