|
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்த்தான் அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடபில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்புக்கள், ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான பேச்சுக்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் அரசு மேலதிக படைத்துறைப் பயிற்சிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
படைத்துறை கொள்வனவுகள் தொடர்பான பேச்சுக்களும் வெற்றியளித்துள்ளன. பாகிஸ்தான் இராணுவத்தின் கூட்டுப்படைத் தலைமைப் பணிப்பாளர் ஜெனரல் ரறிக் மஜீட் சிறிலங்காப் படைத்துறைக்கான பயிற்சி ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தானின் ஆயுத நிறுவனங்களுக்குச் சென்றிருந்த சரத் பொன்சேகா, அவற்றினைப் பார்வையிட்டுள்ளதுடன் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி லெப். ஜெனரல் சயீட் சபாகட் கூசேனை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
இந்தப் பயணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரிகள் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எல்.ஏ.டி.அமரதுங்க, பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் குறுப் கப்டன் அஜந்த டி சில்வா, சரத் பொன்சேகாவின் இராணுவ உதவியாளர் லெப். கேணல் ஆர் விஜயசுந்தர ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
சிறிலங்கா அரசிற்கு இராணுவ உதவிகளை வழங்கி வரும் 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. ஏனைய இரு நாடுகள் இந்தியா, சீனா ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|