|
சிறிலங்காப் படை நடவடிக்கை தொடர்பான எந்தத் தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்ற புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று களமுனைகளில் உள்ள படை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இராணுவத்தின் இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இந்த சிறப்பு அறிவித்தலை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேககா பிராந்திய தளபதிகளின் ஊடாக அனுப்பியுள்ளார்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இராணுவத்தில் இருந்து தகவல் கொடுப்போர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதில் நேரடியாக ஈடுபடுவோர் மற்றும் நேரடியற்ற முறையில் தகவல் கொடுப்போர் போன்றவர்கள் அடங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அண்மையில் முகமாலையில் நடைபெற்ற பெரும் சமர் தொடர்பான தகவல்களை பல ஊடகங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூட்டுப்படை நடவடிக்கை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி டொனால்ட் பெரேரா இராணுவத்தின் உணர்திறன் மிக்க தகவல்கள் எவ்வாறு ஊடகங்களை சென்றடைகின்றன எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் இராணுவத்தின் புலனாய்வுத்துறையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று ஊடகத்துறையை எவ்வாறு சென்றடைந்தது எனவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருந்தது.
முன்னரும் பல தடவைகள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டாம் என இராணுவத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|