|
திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் சிறிலங்காப் படையினரின் வழங்கல் கப்பல் இன்று அதிகாலை 2:23 மணியளவில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காப் படையினரையும், ஆயுதங்களையும் ஏற்றிச் செல்லக்கூடிய படையினரின் வழங்கல் கப்பலான ஏ-520 இன்று சனிக்கிழமை அதிகாலை 2:23 மணியளவில் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை கடற்புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவின் கடற் கரும்புலி கொமாண்டோ அணியினர் நடத்தியுள்ளனர்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கும் காங்கேசன்துறையில் இருந்து கொழும்புக்கும் சிறிலங்காப் படையினரையும், படையினருக்கான ஆயுதங்கள், படைப் பொருட்கள் மற்றும் வெடிபொருட்களையும் ஏற்றி- இறக்கும் பணியில் இக்கப்பல் ஈடுபட்டு வந்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கப்பல்களை தாக்கியழிக்கும் முழுமையான பணியிலும் இக்கப்பல் ஈடுபட்டிருந்தது.
யாழ். குடாநாட்டுப் படையினருக்கான வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் தாக்கியழிக்கப்பட்ட இக்கப்பல் 80 மீற்றர் நீளம் கொண்டது.
தாக்குதலுக்கு இலக்கான இக்கப்பல் 13 நிமிடங்களில் மூழ்கிவிட்டது என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினாரின் ஆழ்கடல் நடவடிக்கையில் முக்கிய பங்குவகித்த போர்க் கப்பல்களுக்கு வழங்கல்களை வழங்கிவந்த இரு விநியோகக் கப்பல்களில் ஏ-520 விநியோகக் கப்பலும் ஒன்று.
யாழ். குடாநாட்டில் நிலை கொண்டுள்ள 40,000-க்கும் அதிகமான படையினருக்கான ஆயுதம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திலும் மூழ்கடிக்கப்பட்ட்ட "இன்வின்சிபிள்" கப்பல் முக்கிய பங்காற்றி வந்தது.
அதிகாலை 2:20 மணியளவில் நடைபெற்ற நீருக்கடியிலான இத்தாக்குதலில் கப்பலின் அடிப்பகுதி கடுமையாக சேதமடைந்து மூழ்கி விட்டதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மார்ச் 22 ஆம் நாள் நாயாறு கடற்பரப்பில் நீருக்கு அடியில் நடைபெற்ற தாக்குதலில் கடற்படையினரின் டோராப் பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|