|
|
|
மூட நம்பிக்கை- பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகர சிந்தனைகளோடு வளர வேண்டும் |
|
|
|
Saturday, 10 May 2008 |
|
மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகரச் சிந்தனைகளோடு மாணவர்கள் உருவாக வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த புதன்கிழமை (07.05.08) நடைபெற்ற தமிழீழ மாணவர் அமைப்பின் வெளியீடான "கடுகு" மாத சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் அவர் பேசியதாவது:
இன்று மகிழ்ச்சியான நாள். இந்தப் போர்க்காலச் சூழ்நிலையில் தான் எமது மாணவர்களின் நலன் கருதி எமது மாணவர்கள் சமூகத்தின் எதிர்கால நலன் கருதி "கடுகு" என்னும் சஞ்சிகை வெளியிடுவது மாணவர்களாகிய உங்களுக்கு பெரிய பயனாக இருக்கும்.
இன்று சிறிலங்கா அரசு, எமது தாயகப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற எமது மாணவர்களுக்கான வளங்களை அனுப்புவதில் பல தடைகளைப் போட்டு வருகின்றது.
மாணவர்களுக்குத் தேவையான பாடசாலைப் பொருட்கள் வருவதற்கு தடை உள்ளது.
அறிவியல் ரீதியாக தொழில்நுட்பக் கருவிகளையும் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசு தடை விதித்துள்ளது.
எமது இனத்தின் பலமான சக்தி வாய்ந்த இந்த மாணவர் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பல தடைகளைப் போடுவது மட்டுமல்ல- எமது எல்லைகளில் இருந்து வடக்கே வட போர்முனையிலும் தெற்கே மன்னார்- மணலாறு- வவுனியா போன்ற களமுனைகளில் இருந்து எதிரியானவன் எமது மண்ணை நோக்கி முன்னேற முயற்சிக்கின்றான்.
சிங்களப் பேரினவாதம் தமிழினத்தை நோக்கி துப்பாக்கிகளை நீட்டியவாறு உள்ளது.
ஜம்பது ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டால் சிங்களப் பேரினவாத அரசு குறிப்பாக எமது இனத்தை அழிக்கவேண்டும் என்பதில் அதிலும் குறிப்பாக எமது மாணவச் செல்வங்களை அழிக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாக கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றது.
ஒரு நீண்டகால செயற்திட்டத்தில் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று சிங்கள அரசு செயற்பட்டு வருகின்றது.
இது எமக்கு வரலாறு கற்றுத்தரும் பாடமாக உள்ளது.
வரலாறு கற்றுத்தரும் பாடங்களை நாம் கற்க வேண்டும்.
வரலாறு கற்றுத்தருகின்ற பாடத்தை நாம் கற்கத் தவறுவேமாயானால் நாம் அழிக்கப்படுவோம்.
வரலாறு ஊடாகத்தான் எமது விடுதலைப் போராட்டம் உருவாக்கம் பெற்று இன்று பெரிய தேசிய விடுதலைப் போராட்டமாக பரிணாமங்களைப் பெற்றுள்ளது.
தொடக்கத்தில் எமது கல்வி மீதுதான் சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
எமது தேசிய இனத்தின் பலமான தூண்களாக- பலமான சக்திகளாக இருப்பது மாணவர்கள்தான்.
மாணவர்களை அழிப்பதன் மூலம் தமிழினத்தை அழிக்கலாம் என்ற பேரினவாத சிந்தனையின் அடிப்படையில்தான் கல்வித்தடை- பொருளாதாரத்தடை- இராணுவ ரீதியான தாக்குதல் ஆகியன தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் எமது மாணவர்கள் வகை- தொகையின்றி கைது செய்யப்படுகின்றனர்.
வகை தொகையின்றி காணாமல் போகின்றனர்.
ஒரு இனத்தின் பெரிய பலமான சக்தியாக இருக்கின்ற மாணவர் சமூகத்தை அழிக்க வேண்டும் என்ற சிறிலங்காவின் மிகக் கொடுமையான இன அழிப்பு நடவடிக்கையை தான் இது எடுத்துக்காட்டுகின்றது.
உலகத்தில் எந்தவொரு இனத்தின் பலமான சக்தியாக இருப்பது மாணவர் சமூகம்.
அந்த மாணவர் சமூகம் அறிவியல் ரீதியாக வளர்வதனை எந்த ஒரு பேரினவாத சக்தியும் விரும்பாது.
ஒடுக்கப்படுப்படுகின்ற சமூகத்தின் மாணவர் சமூகம் அறிவியல் ரீதியாக வளர்வதன் ஊடாக அது விடுதலை நோக்கியதாக பயணிக்கும். அந்த இனத்தின் விடுதலைப் போராட்டம் பலம் பெறும்.
இந்த உண்மை பேரினவாத சக்திகளுக்கு நன்கு தெரியும்.
ஆகவே தான் சிங்களப் பேரினவாத அரசு- 50 ஆண்டுகளுக்கும் மேலாக எமது இனத்தின் மீது பல கொடுங்கோண்மையான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடுகின்றது.
எமது இனத்தை அழிக்க முழு இராணுவப் பலத்தையும் எம்மை நோக்கித் திருப்பி விட்டிருக்கின்றது.
இதற்குப் பல வல்லாதிக்க சக்திகள் துணை போகின்றன.
உலகத்தில் உள்ள பல வல்லரசுகள் இன்று சிறிலங்கா அரசுக்குப் பக்கபலமாக நிற்கின்றன.
சிறிலங்கா அரசுக்கு துணை போகின்ற இந்த வல்லரசுகள் உலக வரலாற்றில் பல விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்காக அழிப்பதற்காக துணை போன வரலாறு இருக்கின்றது.
ஆனால் அந்த விடுதலைப் போராட்டங்களை அவர்களால அழிக்கமுடியாமல் போனது.
மாறாக தேசங்கள் விடுதலை பெற்றுத்தான் இருக்கின்றன.
போர் என்பது வெறுமனே ஆயுதம் தாங்கியதானது மட்டும் அல்ல.
போர் என்பது வெறுமனே வான் குண்டுவீச்சு அல்லது துப்பாக்கியால் சுடுவது மட்டுமல்ல.
பல வடிவங்களில் அந்த இன அழிப்பு எம்மை நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக எமது இனத்தின் இளம் சமூகத்தை நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கின்றது.
ரோம் கிரேக்கத்தை ஆக்கிரமித்தது. ஆனால் கிரேக்க நாகரீகம் ரோமை ஆக்கிரமித்ததா என்று அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் பழமொழி ஒன்றை சொல்வார்கள்.
2000 ஆம் ஆண்டுகளுக்கு மேலாக நாடு இல்லாமல் தமது தேசத்தை விட்டு அகதிகளாக திரிந்த யூத இனம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
அவர்கள் எதுவும் இல்லாமல் உலகம் முழுக்க அகதிகளாக இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் எங்கே- எங்கே எல்லாம் அகதிகளாக இருந்தார்களோ எந்த- எந்த தேசத்தில் புலம்பெயர்ந்திருந்தார்களோ அங்கே எவ்வளவு சவால்களுக்கு மத்தியில் தமக்கான கல்வி நிலையங்களை உருவாக்கி, தமது மொழியியல் ஆய்வுகளை- ஆராய்ச்சிகளை பல நூல் வடிவங்களின் ஊடாக யூத இளம் சமூகத்திற்கு யூத மொழியில் யூத பண்பாட்டையும் யூத மொழியையும் யூத வரலாற்றையும் கற்பித்தார்கள்.
அதன் ஊடாக 2000 ஆம் வருடங்களுக்கு மேலாக நாடு இல்லாமல் இருந்த இனம் இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கியிருக்கின்றது.
உலகத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுத்த யூத இனம் இன்று ஒரு தேசத்தை உருவாக்கி உள்ளது.
அங்கே உள்ள இளம் சமூகம் மட்டுமல்ல வயது வேறுபாடில்லாமல் அனைத்து மக்களும் ஒருமித்த ஒரே சக்தியாக தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எமது மக்கள் இன்று புலம்பெயர்ந்திருந்தாலும் எமக்குப் பெரிய பலமாக இருக்கின்றனர்.
புலம்பெயர்ந்திருக்கின்ற எமது உறவுகள் பல கல்வி நிலையங்களையும் பல நிறுவனங்களையும் உருவாக்கி ஒரு சக்தி மிக்க பலமான ஒரு தமிழ்த் தேசிய இனமாக அங்கே இருக்கின்றனர்.
இங்கே நாம் பலமான ஒரு தேசியக் கடமையின் கீழ் ஒரு பலமான போராட்டத்தை இந்த அரசுக்கு எதிராக எவ்வளவு வல்லரசுகள் துணை போனாலும் எங்கள் மக்கள் பின்புலமாக இருக்க நாம் ஒரு பெரிய போராட்டத்தை நடத்துகின்றோம்.
சிங்களப் பேரினவாதத்தை பற்றி உலகம் முழுவதும் நன்றாகப் புரிந்து கொள்கின்ற காலம் கனிந்து வருகின்றது.
உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் முக்கியமாக எமது இயக்கத்தை தடை செய்த நாடுகள், சிறிலங்கா அரசின் மீது மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக சுமத்துகின்றன.
சிங்கள அரசின் மீது அந்த நாடுகள் சுமத்துகின்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அது சுயநிர்ணய உரிமையில்தான் போய் நிற்கும்.
எமது உரிமைகள் மீறப்படுகின்றன. நாம் அகிம்சை வழியில் போராடி அந்த உரிமையைப் பெறப்போகின்றோம் என்று அப்போது கூறினார்கள்.
ஆனால் அனைத்துலக சமூகமோ அல்லது உலகமோ அதனைப் பார்க்கவில்லை.
ஆனால் இன்று 50 வருட காலத்திற்குப் பிறகு தான் சிங்கள அரசு மீது மனித உரிமை என்ற பேரில் உலகம் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றது.
அனைத்துலக ரீதியாக வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு அமைய எமது இனம் சுயநிர்ணய உரிமைக்குத் தகுதியுடைய இனமாகும்.
எமது போராட்டம்- தகுதியுடைய போராட்டமாகும்.
என்னதான் சிறிலங்கா அரசாங்கம் தடை செய்தாலும் என்னதான் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டாலும் அந்தச் சவால்களை முறியடிப்போம்.
எமது மாணவச் செல்வங்களை நாம் அறிவியல் ரீதியாக உயரிய அனைத்துலக தரத்திற்கு வளர்த்து எடுப்பதற்கு நாம் அனைத்தையும் செய்வோம்;.
இதற்காக அண்மையில் தேசியத்தலைவர் என்னை அழைத்து, இங்கு திறமையாக சித்தியடைந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும்படியும் அவர்களின் கல்வியைத் தொடர்ச்சியாக கண்காணித்தும் அவர்களுக்கு அவ்வப்போது என்ன செய்ய வேண்டுமோ அந்தந்த உதவியைச் செய்யவேண்டும் என்றும் அன்பான வேண்டுகோளை எனக்கு விடுத்திருந்தார்.
இளம் போராளிகளுக்குக் கூட அறிவியல் ரீதியான கல்வித்திட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அறிவியல் ரீதியாக எமது போராளிகள் அனைத்துலக தரத்திற்கு வளர்ந்திருக்கின்றனர்.
அறிவியல் ரீதியாக இளம் போராளிகள் பல விஞ்ஞானிகளின் பலத்துக்கு வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.
அண்மையில் போர் நிறுத்த காலத்தில் அனைத்துலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருக்கின்ற எமது உறவுகள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்கள் கூட இங்கே வந்து பல்துறை சார்ந்த எமது பிரிவுகளின் சில வேலைகளை, அந்த வேலைகளின் பிரதிபலிப்புக்களை பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டனர்.
ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில் இல்லாத வளர்ச்சி அறிவியல் வளர்ச்சி. இந்தப் போராட்டச் சூழலில் தலைவரின் காலத்திலேயே எமது இனத்தில் பெரியதொரு சக்திமிக்க கருவாக விருட்சமாக வளர்ந்து வருகின்றது.
எமது சமூகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும், விடுதலை இயக்க உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது வீடுகளில் இருந்தாலும் சரி, கிராமங்களில் இருந்தாலும் சரி, இளம் சமூகம் அறிவியல் ரீதியாக பலமான சமூகமாக வர வேண்டும் என்பதில் எமது தலைவர் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.
கிராமங்களில் ஏழைத்தாய்மார்கள் இருக்கின்றனர். தந்தையரை இழந்த குடும்பங்கள் இருக்கின்றன. வேலைக்காக அல்லது தொழில் வாய்ப்புக்காக செல்லும் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு போசாக்குள்ள உணவுகளை ஊட்டி நல்ல சக்திமிக்க அறிவியல் சமூகமாக வளர்த்து எடுக்க வேண்டும் என்பதற்காக, எமது தேசியத் தலைவரால்- எவ்வளவு தான் பொருளாதார நெருக்கடிக்குள் முகம் கொடுத்தாலும்- எவ்வளவு தான் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தாலும்- அதற்காக நிதி ஒதுக்கி அதற்கான வேலைத்திட்டங்கள் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசம் அனைத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கப்படுவது மட்டுமல்ல- அடிப்படை கல்வி வழங்கப்படுவது மட்டுமல்ல- எதிர்காலத்தில் அவர்கள் தொழிநுட்ப ரீதியாக- அறிவியல் ரீதியாக வளர்வதற்கான கல்விகள் ஊட்டப்படுவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
"கடுகு" போன்ற சஞ்சிகைகள் எமது இளம் சமூகத்தை அறிவியல் ரீதியாக அவர்களின் அறிவு சாதாரண அறிவாக அல்லாமல் சமூக நலன் சார்ந்த அறிவாக சுயநலத்தை விட்டு சமூக நலன்சார்ந்த அறிவியல் ரீதியாக புரட்சிகரமான சிந்தனையை உள்ளடக்கியதாக வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேசியத் தலைவருக்கு இருக்கின்றது.
ஒரு தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் பல முற்போக்குச் சிந்தனைகளை முற்போக்குக் கற்பித்தலை உள்ளடக்கிய ஒரு நூலாக இது வரவேண்டும் என்பதில் எமது தேசியத் தலைவர் பெரிய எதிர்பார்ப்புக்களோடு இருக்கின்றார்.
சமூக மாற்றத்திற்கான அடித்தளங்களையிடும் கருத்துக்களை இங்கே சேர்க்க வேண்டும்.
விடுதலைக்காகப் போராடுகின்ற ஒரு இனத்திற்கு புரட்சிகரமான கருத்துக்களும் பலமான ஆயுதங்கள் தான்.
அந்தக் கருத்தியல் ஆயுதங்கள் ஊடாக நாம் பெரியதொரு புரட்சிகரமான சமூக மாற்றத்திற்கான அடித்தளத்தை நிறைவாக இடலாம்.
இதன் ஊடாகத்தான் எமது தேசிய இனத்திற்கு விடுதலையும் கிடைக்கும். அதன் ஊடாகத்தான் நாம் எல்லோரும் சமத்துவம்- சகோதரத்துவம்- சுதந்திரம் என்ற சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் தேசத்தைக் கட்டி எழுப்பலாம்.
"கடுகு" சாதாரண ஒரு கடுகாக இல்லாமல் மிகவும் புரட்சிகர சிந்தனையாக விடுதலைப் போராட்டத்திற்கும் பெரிய ஆதாரமாக இருக்கின்ற ஒரு நூலாக வெளிவரும். தொடர்ந்து வெளிவரவேண்டும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் எமது மாணவர்களின் எண்ணங்களை மாணவர்களின் சிந்தனைகளை வேறு திசைக்கு மாற்றி விடுதலைப் போராட்டத்தில் இருந்து மக்களை அன்னியப்படுத்துகின்ற வேலையை சிறிலங்கா அரசு நுட்பமாக திட்டமிட்டு வருகின்றது.
எமது இனத்தை அழித்து ஒழிப்பதற்கான ஒரு பெரிய நாசகார நடவடிக்கை.
எமது மாணவர் சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஏனெனில் நீங்கள் ஒரு பெரிய பலமான தேசியத் தலைவரின் காலத்தில் இருக்கின்றீர்கள்.
நீங்கள் இந்த யுகத்தில் இந்தக் காலத்தில்- இந்தக் குடி மாணவர்களாக கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் சாதாரண மாணவர்களாக இருக்கக்கூடாது. சாதாரண இளைஞர்களாக இருக்கக்கூடாது.
நீங்கள் இந்த விடுதலைப் போராட்டத்தில் பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்களும் பங்காளிகள் தான்.
ஒடுக்குமுறையாளர் வானில் இருந்து குண்டு வீசுகின்றான் என்றால் எமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான்.
தமிழீழத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களையும் நாம் போராளிகளாகத்தான் பார்க்கின்றோம்.
புரட்சிகர சிந்தனை மிக்க, புரட்சிகரக் கொள்கை கோட்பாடுகளை பின்பற்றுகின்ற மாணவர் சமூகமாக இருக்க வேண்டும்.
பிற்போக்குக் கொள்கைகளை தூக்கி எறிய வேண்டும். மூட நம்பிக்கைகளை தூக்கி எறிய வேண்டும்.
புரட்சிகரமான ஒரு பலமான நல்ல சிந்தனைகளோடு வளர வேண்டும் என்றால் எமது மாணவர்கள் மத்தியில் இத்தகைய சஞ்சிககைள் மிக, மிக முக்கியம்.
ஒரு பெரிய புரட்சியை- புரட்சிகர சிந்தனைகளை உருவாக்கக்கூடிய சஞ்சிகைகள் முக்கியம்.
நீங்கள் அதன் எழுத்தாளர்களாக மாற வேண்டும். உங்கள் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிக்கு பலம் ஊட்டுகின்ற பல சிந்தனைகளை தூண்டக்கூடிய, கருத்துக்களாக உள்ளடக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
"கடுகு" சஞ்சிகை தமிழீழத்தில் தான் வெளியிடப்படுகின்றது, தமிழீழ மாணவர் அமைப்பால் வெளியிடப்படுகின்றது.
உங்களின் திறமைகள்- சக்திகள் அனைத்தையும் வெளியில் கொண்டு வருவதற்கு இது ஒரு சந்தர்ப்பம்.
உங்களுக்கு இப்படியான சந்தர்ப்பம் இந்தத் தலைவரின் காலத்தில் தான் கிடைக்கும். ஆகவே நான் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்.
கடுகை வாசிப்பது மட்டுமல்ல அதன் பங்காளிகளாக அதன் எழுத்தாளர்களாக நீங்கள் வர வேண்டும்.
எதிர்காலத்தில் எமது சமூகத்தை வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்றது என்றார் பா. நடேசன்.
நெருடல் இணையம்
|
|