|
மட்டக்களப்பு மாநகர எல்லையைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதாக சுதந்திரமானதும்ää நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
பாரிய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாத போதிலும் மிகக் கடுமையான வாக்கு மோசடிகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது. மட்டக்களப்பு கிளிவெட்டி பிரதேசத்தில் வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்காளர் அட்டைகளை பறித்துச் சென்றதாகத் தெரியவருகிறது.
பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அநேக வாக்களிப்பு மையங்களிலிருந்து வாக்காளர்களை வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பலவந்தமாக அழைத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதற்கு எதிராக பாதுகாப்பு படையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றது.
கல்லடி பிரதேச வாக்களிப்பு மையத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவருக்கு நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வாக்காளர்களை அனுமதிக்கக் கூடாதென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகக் காணப்பட்ட படுவன்கேனி பிரதேசத்தில் இதுவரை 15 பேர் மட்டுமே வாக்களித்துள்ளதாகத் தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வாக்களிப்பு மையங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் சமூகமளித்திருக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வாக்களிப்பு மையங்களின் கடமையாற்ற வந்த 14 பிரதிநிதிகளை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் அமைப்பைச் சேர்ந்த நிஸ்பா சபார் தெரிவித்துள்ளார். குறித்த பிரதிநிதிகள் எதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ளனர் என்ற விபரம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வித வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும் தற்போது மாவட்டத்தில் மிக சுமூகமான முறையில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு இணைப்பதிகாரி சிரிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 2.00 மணி வரை மட்டக்களப்பு நகரில் 35 வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும்புறநகர்ப் பகுதியில் 50 வீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகாத போதிலும் மட்டக்களப்பு புறநகர்ப் பகுதிகளில் மிகமோசமான தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நெருடல் இணையம்
|