|
கருணா மீது போர் குற்றத்தை சுமத்தும் வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளது |
|
|
|
Thursday, 15 May 2008 |
|
பிரித்தானிய அரசாங்கம், விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்;படும் கருணாவுக்கு எதிராக போர் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
போலி கடவுச்சீட்டுடன் பிரித்தாணியாவுக்குள் பிரவேசித்தார் என்றக்குற்றச்சாட்டின் பேரில், கருணா 2007 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி மெட்ரோபொலிடன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து கருணாவுக்கு எதிராக போர் குற்றச்சாட்டை முன்வைக்கவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்தன. எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பிரித்தானியா, கருணாவை இலங்கைக்கு நாடு கடத்த தற்சமயம் முடிவெடுத்துள்ளது. இந்தநிலையில், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆசிய பிராந்திய பணிப்பாளர், பிரட் அடம்ஸ்,பிரித்தானிய பொன்னான வாய்ப்பை தவறிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருணா 1990 ஆண்டுக்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சுமார் 400 இலங்கை காவல்துறையினரை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாரிய துன்புறுத்தல்களை மேற்கொண்டார். அத்துடன் 1990 ஆம் ஆண்டுக்காலத்தில் அவர் சுமார் 200 பொதுமக்களை கொலை செய்தார் போன்ற குற்றச்சாட்டுகளை ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் முன்வைத்துள்ளது. இந்தநிலையில், 2005 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் முன்னாள் படைவீரரான பார்யடி சர்வார் சர்டாட்டுக்கு , அவர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட போர் குற்றங்களுக்காக பிரித்தானிய நீதிமன்றம் தண்டனை வழங்கியமையை ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே கருணாவை பிரித்தாணிய மண்ணில் இருந்து அனுப்பும் முன்னர் அவர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவது தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் ஆராயவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நெருடல் இணையம்
|