|
கிழக்கின் முதலமைசர் தெரிவில் இறுதி நேரத்திலும் இழுபறி தொடர்ந்ததால் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒத்திவைத்துள்ளார். இதனை அரச தலைவர் செயலக வட்டாரங்களும் உறுதி செய்தன.
கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு துணைப்படைக் குழுத்தலைவர் பிள்ளையானுக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் முதலமைச்சர் யார் என்பதைத் தெரிவு செய்வதற்காக இன்று மாலை அரச தலைவர் செயலகத்தில் முக்கிய கூட்டம் நடைபெற்றது.
அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கிழக்கின் முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவையே நியமிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைச்சர்களும் பிள்ளையானையே நியமிக்க வேண்டும் என்று அரச தலைவரும் விடாப்பிடியாக நின்றதால் கூட்டத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பங்கிடுமாறும் முதலில் இரண்டு வருடங்கள் பிள்ளையான் முதலமைச்சராக பதவியேற்கட்டும் என்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த யோசனைக்கு முஸ்லிம் அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் முஸ்லிம் அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்காது முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வினை மகிந்த ராஜபக்ச ஒத்திவைத்தார்.
அரச தலைவரின் இந்த நடவடிக்கையால் முஸ்லிம் அமைச்சர்களிடையே இந்த விவகாரம் பெரும் பூதாகாரமாக உருவெடுத்திருக்கின்றது.
நெருடல் இணையம்
|