|
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான குழுவின் முக்கிய நபருக்கு தொடர்புகள் இருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:
அரச தலைவர் செயலகத்தை நோக்கிய எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடுத்து நிறுத்துவதற்கான முற்னேற்பாடுகளில் சிறிலங்காவின் கலகம் அடக்கும் காவல்துறையினர் கொழும்பு புறக்கோட்டையில் உள்ள லோட்டஸ் வீதியில் பெரும் ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான கடுமையான உத்தரவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
காவல்துறையினர் அன்று இரு பிரதான நிகழ்ச்சிகளுக்காக தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஒன்று எதிர்க்கட்சியினரின் ஊர்வலம். இரண்டாவது கிழக்கு மாகாண சபை முதல்வரின் பதவியேற்பு நிகழ்விற்கான பாதுகாப்பு வழங்குதல் என்பனவற்றுக்கு ஆகும்.
பேலியகொட காவல் நிலையத்தைச் சேர்ந்த பெருமளவிலான காவல்துறையினர் பேருந்து மற்றும் முச்சக்கர வாகனங்கள் சகிதம் நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
காவல்துறையினாரின் மற்றும் இரண்டு வாகனங்கள் கலகம் அடக்கும் நீர்ப் பீரங்கிகளைக் கொண்டிருந்தன. அப்பகுதியின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
துணை இராணுவக்குழுவின் தலைவரான பிள்ளையானும் அவரது குழுவினரும் கொழும்பு ஹில்டன் ஆடம்பர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு அண்மையாக காவல்துறையினரின் காவலரண் ஒன்றும் உள்ளது.
வரப்போகும் ஆபத்தை காவல்துறையினர் சரியாக கணித்திருந்தாலும் அவர்கள் அதற்காக மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானது அல்ல.
மதியம் 12.00 மணியளவில் அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகனம் அந்த இடத்தைக் கடந்து சென்றதனைத் தொடர்ந்து, வெடிமருந்து பொருத்தப்பட்ட உந்துருளி ஒன்று வேகமாக வந்து காவல்துறை பேரூந்துடன் மோதியது. பெரும் வெடியோசை எழுந்தது.
இத்தாக்குதலில் 8 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதுடன், 94-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்த காவல்துறையினாரில் பெருமளவானோர் பேலியகொட காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள்.
பல வாகனங்களும் சேதமாகியதுடன், அமைச்சரின் வாகன சாரதியும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்.
அமைச்சரின் வாகனம் பிள்ளையான் குழுவினரின் முக்கயஸ்தர்களை ஏற்றிச் சென்றதாக குண்டுதாரி தவறுதலாக கருதி விட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த உந்துருளி முன்னரும் அப்பகுதியால் சென்றதனை காவல்துறையினர் அவதானித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
இதனிடையே தனது இலக்கிற்கு காத்திருந்த தாக்குதலாளி அது கிடைக்கவில்லை என்றதும் காவல்துறை வாகனத்தின் மீது மோதிவிட்டாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு 4 கிலோ சீ-4 வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் ஹபரணையில் நடைபெற்ற தாக்குதல் போன்றது இது. அதன் போது 100-க்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்துடன், அதே அளவானோர் காயமடைந்திருந்தனர். அதிகளவான படையினர் கூடும் இடங்களை விடுதலைப் புலிகள் தமது தாக்குதலுக்கு தெரிவு செய்து வருகின்றனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்திய உந்துருளியின் உரிமையாளர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனா என அழைக்கப்படும் விஜயபாலன் ஜெயெந்திரன் என்னும் அந்நபர் பிள்ளையான் குழுவின் முக்கிய உறுப்பினர் ஆவார். இவர் திருகோணமலையில் செயற்பட்டு வந்தவர்.
இத்தாக்குதலில் பிள்ளையான் குழுவை சேர்ந்தவர் தொடர்புபட்டுள்ளதால் அதன் விசாரணைகளை திசை திருப்ப அரசு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளில் இருந்து திருகோணமலை காவல்துறையினர் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். விசாரணைகள் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|