|
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை தெரிவாவதற்கு கடும் எதிர்ப்பு ஐரோப்பிய நாடுகள் சில தீவிரம் |
|
|
|
Sunday, 18 May 2008 |
|
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கவுன்ஸிலிற்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை மறுதினம் புதன்கிழமை நியூயோர்க்கில் நடைபெறவுள்ள அதேவேளை, ஐரோப்பிய நாடுகள் சில இத் தேர்தலில் இலங்கைக்கு எதிராகப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன என்றும் கூறப்படுகின்றது.
ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு மறைமுகமாகப் பிரசாரம் செய்து வருகின்றன என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில நாடுகள் பரஸ்பர உதவி அடிப்படையில் இலங்கைக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ள போதிலும் நடைபெறப்போவது இரகசிய வாக்கெடுப்பு என்பதால் இந்த வாக்குறுதி எவ்வளவு தூரம் உண்மையில் முன்னெடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருக்கும் எனக் கூறப்பட்டது.
இதேவேளை, மனித உரிமைக் கவுன்ஸிலில் ஆசிய நாடுகளுக்கான ஆசனத்திற்காக இலங்கையும் பாகிஸ்தானும் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய நாடுகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நான்கு ஆசனங்களுக்காக ஜப்பான், பஹ்ரெய்ன், தென்கொரியா, கிழக்கு திமோர், பாகிஸ்தான், இலங்கை ஆகியன போட்டியிடுகின்றன.
ஜப்பான், தென்கொரியா, பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள இராஜதந்திரிகள் கிழக்கு திமோரிற்கான வாய்ப்பை முற்றாக நிராகரித்துள்ளனர். இதன் காரணமாக இறுதி ஆசனத்திற்குப் பாகிஸ்தானும் இலங்கையும் போட்டியிடவேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான சூழ்நிலை உருவாவது இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் முரண்பாடு மிகுந்த மாற்றத்தைத் தோற்றுவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநலவாய அமைப்பு பாகிஸ்தான் மீது விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் எனக் கோரி இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் இலங்கை கடுமையாக வாதாடியிருந்தது.
மனித உரிமை அமைப்புகள் மற்றும் மேற்குலக நாடுகளின் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இலங்கை, சர்வதேச அளவில் தனக்குப் போதிய ஆதரவுள்ளதை நிரூபிப்பதற்காக மனித உரிமை கவுன்ஸிலில் மீண்டும் இடம்பெறுவதில் உறுதியாகவுள்ளது.
அமைச்சர்கள் ரோஹித போகொல்லாகம, ஜி.எல். பீரிஸ் போன்றவர்கள் இலங்கை மீண்டும் தெரிவுசெய்யப்படுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும் மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு எதிராக கடும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.
நெருடல் இணையம்
|