பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow பேரினவாத முனைப்புக்கு வலுச்சேர்க்கும் இடதுசாரிகள்!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பேரினவாத முனைப்புக்கு வலுச்சேர்க்கும் இடதுசாரிகள்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 14 October 2005

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்ட மேடைகளில் இப்போது விசித்திரமான ஒரு காட்சியைக் காணக் கூடியதாக இருக்கிறது. இதுகாலவரை எதிரும் புதிருமாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனை( ஜே.வி.பி.)யின் தலைவர்களும் ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவர் வாசுதேவ நாணயக்கார போன்ற பழைய இடதுசாரிக் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் அருகருகே அமர்ந்திருந்து அந்நியோன்யமாக அளவளாவி ராஜபக்‌ஷவுக்கு மக்களின் ஆதரவைக் கோருகிறார்கள்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுடன் கடல்கோள் நிவாரணப் பொதுக்கட்டமைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடுவதைத் தடுப்பதற்காக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டங்களை நடத்தி அரசியல் குழப்பநிலையைத் தோற்றுவித்த போது ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் நிலைப்பாட்டுக்கு முழுமையான ஆதரவை அளித்த அதே பழைய இடதுசாரித் தலைவர்கள் அதே பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கையை ரத்துச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தும் உடன்படிக்கையை பிரதமருடன் செய்து கொண்டவர்களுடன் இணை ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஜே.வி.பி. யினாலும் ஜாதிக ஹெல உறுமயவினாலும் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்கிக் கொண்ட பிரதமரின் தேர்தல் பிரசாரக்களம் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலானதாக மாறியிருக்கும் நிலையில், பழைய இடதுசாரிக் கட்சிகள் பிரதமரை எந்த அடிப்படையில் ஆதரிக்க முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. அதற்குப் பதில் அளிப்பதில் இந்த இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆரம்பத்தில் அசௌகரியத்தை எதிர் நோக்கினார்கள் என்பது வெளிப்படையானது. அந்த அசௌகரியங்களையும் மீறி அவர்கள் இப்போது பிரதமரை ஆதரிப்பதற்கு மேலும் விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

நான்கு காரணங்களுக்காக இடதுசாரிக் கட்சிகள் ராஜபக்ஷவை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு விவகார, தேசிய நல்லிணக்க அமைச்சருமான டியூ குணசேகர ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றில் தெரிவித்திருந்தார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அரசியல் சக்திகளின் சமநிலையை நோக்கும் போது ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ராஜபக்ஷவை வெற்றி பெற வைப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்துக்குச் சாதகமாக அச்சமநிலையை மாற்ற முடியும் என்பது குணசேகர தெரிவித்த முதல் காரணம். இரு பிரதான அரசியல் கட்சிகளையும் நோக்கும் போது அவற்றில் ஐக்கிய தேசியக் கட்சி (தற்போது உலகம் பூராவும் நிராகரிக்கப்பட்டு வருகின்ற ) நவதாராளவாதக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றது. பிரதமர் மக்கள் சார்புப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு உறுதி பூண்டிருக்கின்றார் - இது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கூறும் இரண்டாவது காரணம். ஐ.தே.க. வின் வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விட ராஜபக்‌ஷ கூடுதலான அளவுக்கு மக்களுக்கு நெருக்கமானவராகவும் தேசத்தின் துடிப்பை உணர்ந்து கொள்ளக் கூடியவராகவும் இருப்பதாகவும் குணசேகர தெரிவித்திருக்கின்றார். அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், 1970 ஆம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பல தடவைகள் பதவி வகித்த ராஜபக்‌ஷவுக்கே ஒரு தனிநபரென்ற வகையில் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்பது நான்காவது காரணம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கூறிய காரணங்களில் பொருளாதாரக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டதே விமர்சனத்திற்கு குறைந்தபட்சமேனும் எடுக்கக் கூடியதொன்று என்பது எமது அபிப்பிராயம். 1994 இல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக திருமதி குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அதற்கு முன்னர் 17 வருடங்களாக ஐ.தே.க. அரசாங்கங்கள் பின்பற்றிய திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடுமையாகக் கண்டனம் செய்தார். இடதுசாரிக் கட்சிகளும் அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்தன. ஆனால், திறந்த பொருளாதாரக் கொள்கை அதே வீச்சில், சில சந்தர்ப்பங்களில் முன்னரைவிட முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டதையே நாடு கண்டது. இன்று மக்கள் சார்பு பொருளாதாரக் கொள்கைகளை ராஜபக்‌ஷ முன்னெடுக்க உறுதி பூண்டிருப்பதாக குணசேகர கூறுகின்றாரெனினும், சகல தரப்பினரையும் சாந்தப்படுத்தும் விபரீதமான போக்கொன்றை வெளிக்காட்டும் பிரதமர் வர்த்தக சமூகத்தின் நலன்களுக்கு எதிராக திறந்த பொருளாதாரக் கொள்கையில் இருந்து மாறுதலான கொள்கையொன்றை முன்னெடுப்பதற்கு துணிச்சல் கொள்வார் என்பது கேள்விக்குறியே. திருமதி குமாரதுங்கவை ஆதரித்த இடதுசாரிக் கட்சிகளினால் அவரது 11 வருடகால ஆட்சிக்காலத்தில் பொருளாதாரக் கொள்கைகளில் எந்தவிதமான செல்வாக்கையும் செலுத்தக் கூடியதாக இருக்கவில்லை என்பதை குணசேகர மறுக்கமாட்டார் என்று நம்புகிறோம்.

இத்தடவை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் களத்தில் பிரதான விவாதப் பொருளாக விளங்குவது தேசிய இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கிய சமாதான முயற்சிகளேயாகும். பிரதமருடன் அணி சேர்ந்து நிற்கும் ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் அவரது தேர்தல் பிரசாரத்தை பெருமளவுக்கு சமாதான முயற்சிகளுக்கு எதிரான அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே முன்னெடுத்து வருகின்றன. சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் எந்தவொன்றையுமே அங்கீகரிக்கத் தயாரில்லாத இச் சக்திகளின் ஆக்கிரமிப்புக்குள்ளான பிரசார மேடைகளில் இருந்து கொண்டு சமாதான முயற்சிகளுக்கு ஆதரவாக எந்தவொரு காரியத்தையும் பழைய இடதுசாரிக் கட்சிகளினால் செய்யமுடியும் என்று நம்புவதற்கில்லை. ஜே.வி.பி. தலைவர்களுடன் ஒரே மேடையில் நின்று கொண்டு குணசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்ற இடதுசாரித் தலைவர்கள் பிரதமருக்கு ஆதரவைத் தேடுவதன் மூலம் தென்னிலங்கை அரசியலில் இன்று காணப்படும் பேரினவாத முனைப்புக்கு மாத்திரமே வலுச்சேர்க்க முடியும்.


thinakkural
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..