|
இலங்கையிலிருந்து செயற்படும் செய்தி இணையத்தளங்களைக் கண்காணித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்காக அரசு விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டைப் பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மீது இவ்வாறான குற்றச்சாட்டைச் சுமத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை, சுதந்திர ஊடக இயக்கமும்"லங்கா டிசென்ட்' இணையத்தளமும் வாபஸ் பெறவேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் வாபஸ் பெறப்படாவிட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பவை வருமாறு:
பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கையொன்று குறித்து எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. "லங்கா டிசென்ட்" இணைய செய்தித் தளத்தில் வெளியாகிய செய்தியை அடிப்படையாக வைத்தும் அதன் ஆசிரியரால் எழுதப்பட்ட கடிதத்தைச் சுட்டிக்காட்டியும் இணையத்தளங்களைக் கண்காணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தனியான பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளது என்ற "லங்கா டிசென்ட்' டின் பொய்யான குற்றச்சாட்டை சுதந்திர ஊடக இயக்கம் தானும் வெளியிட்டிருந்தது.
இணையத் தளங்களை எவ்வாறு செயலிழக்கச்செய்வது என்பது குறித்துப் பரீட்சார்த்த முயற்சிகளையோ அல்லது ஆய்வுகளையோ மேற்கொள்ளவேயில்லை என பாதுகாப்பு அமைச்சு உறுதியாகத் தெரிவிக்கின்றது. இதேபோன்று சுதந்திர ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இடத்திலிருந்தோ அல்லது இலங்கையின் வேறு பகுதிகளிலிருந்தோ, வேறு நாடுகளிலிருந்தோ இணையத்தளங்களைக் குழப்புவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் இதற்காக எவரும் பணியில் அமர்த்தப்படவுமில்லை "லங்கா டிசென்ட்" தெரிவித்துள்ள சில கருத்துகள் விவாதத்திற்குரியவை என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ள போதிலும் , பாதுகாப்பு அமைச்சிடம் இந்த விடயம் குறித்து ஆராயாமல் ,பிழையான குற்றச்சாட்டைத் தனது அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டமை கவலைக்குரியது.
இதேபோன்று பத்திரிகையாளர்களின் முக்கிய கடமையான ஆராய்ந்து உறுதிப்படுத்தலை மேற்கொள்ளாமல்,ஊடகங்களும் இதற்கு பரந்துபட்டமுக்கியத்துவம் அளித்தமை கவலைக்குரியது.
"லங்கா டிசென்ட்" டின் பிழையான ஆரம்ப அறிக்கையும் சுதந்திர ஊடக அமைப்பின் அறிக்கை மூலம் உள்ளூரிலும் வெளியூரிலும் கிடைத்த பிரசாரங்களும்,இவ்வாறான அறிக்கைகள் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|