|
கார்த்திகை மாதம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில் அந்த மாதத்தின் நினைவுகளையும் அசைவுகளையும் இன்று சர்வதேச சமூகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது. ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் அதில் பெறும் வெற்றி, அதனைத் தொடர்ந்து மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் ஆற்றவிருக்கும் மாவீரர்தின உரையும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக நோக்கப்படுகின்றது.
கார்த்திகை மாதம் தமிழ் மக்களின் வாழ்வியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய மாதம்! இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை கார்த்திகை மாதத்தில் வருகிறது. புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி வழிபாடு செய்து அதனைக் கொண்டாடுவர். அதனைத் தொடர்ந்து கார்த்திகைத் தீபமும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையென்றால் அது வியப்பில்லை. இந்தத் தீபத் திருநாளில் வீடுகளில், ஆலயங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுவது தொன்றுதொட்டுப் பேணப்பட்டு வரும் தமிழர்களின் மரபு. ஆனால் விடுதலைப் போராட்டமும் அதன் எழுச்சியும் தமிழர் வாழ்வியலில் தீபாவளி, கார்த்திகைத் தீபத் திருநாளைவிட மேலும் இரு நாட்களை சிறப்புக்குரிய நாட்களாக அலங்கரித்து நிற்கின்றது. கார்த்திகை 26ம் நாள் தமிழ் மக்கள் கொண்டாடி மகிழும் குதூகல நாளாகி விட்டது. அதுதான் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினம். இந்தத் தன்னிகரில்லா தலைமகன் வல்வெட்டித் துறை மண்ணில் பிறந்திரா விட்டால் தமிழினம் இப்போது எவ்வாறு இருக்குமோ? சிந்திக்க வேண்டிய விடயம். இந்த ஒப்பற்ற தேசியத் தலைவரது பிறந்தநாள் ஈழத் தமிழ் மக்களால் மட்டுமல்ல உலகத்தில் வாழும் தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் திருநாளாக உள்ளது. இதற்கு மறுநாள் 27ம் திகதி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சரித்திரத்தில் மிக முக்கிய நாள். அதுதான் மாவீரர்தின நாள். தமிழீழ விடுதலைக்காக பதினேழாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களைப் பூஜிக்கும் புனிதமான நன்நாள். இந்தத் திருநாளில் தேசியத் தலைவர் ஆற்றும் மாவீரர் உரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும் தேசியத் தலைவர் ஆற்றும் உரையும், அதில் செறிந்து கிடக்கின்ற கருத்துக்களும் எதிர்காலத்தின் அசைவுகளை வெளிப்படுத்துபவை. இவ்வளவு பெறுமதி வாய்ந்த மாவீரர் தின உரையை சர்வதேச சமூகமே ஆவலுடன் எதிர்பார்ப்பதும் உண்மை. இவ்வருடம் மாவீரர் தினத்திற்கு முன்னதாக கார்த்திகை 17ம் திகதி சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தவகையில் இம்மாதத்தில் அவதானிப்பு ஆழமாக்கப்பட்டுள்ளது. சமாதானச் சூழலைத் தகர்த்தெறிந்து மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கான சூளுரையுடன் இனவாத சக்திகள் ஓரணி திரண்டுள்ளனர். பேரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி, ஹெல உறுமய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் கருத்துக்களின்படி தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அவர் ஒரு போதும் விரும்பவில்லை. அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்த அவருடன் இணைந்திருக்கின்ற பேரினவாதக் கட்சிகள் விரும்பமாட்டாது. ஒருவேளை இனவாதக் கட்சிகளின் கூட்டுடன் மகிந்த ஜனாதிபதியானால் இந்த நாட்டில் நிலமை மோசமடைந்து போரை உடனடியாக ஆரம்பிப்பதற்கான சூழலையே ஏற்படுத்தும். இதேவேளை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமாதான முயற்சிகளை தொடரப் போவதாகக் கூறுகிறார். ஆனால் தெளிவாக தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய எந்தவிடயத்தையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை. மாறாக படையினரை ஒருங்கிணைத்த படையணியை உருவாக்கப் போவதாகக் கூறும் ரணில் விக்கிரமசிங்கா ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும் இணைத்தே சமாதான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். இது ஒரு தெளிவில்லாத தன்மையை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் இனவாதக் கூட்டுடன் பிணைந்து நிற்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ரணிலின் சமாதான முயற்சிகளுக்கு எந்தளவிற்கு இதய சுத்தியுடன் ஒத்துழைப்பு நல்கப் போகிறது என்பது கேள்விக்குறி. இவை தவிர சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டி விடுதலைப் புலிகளுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூட ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கலாம். ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் வெறும் உதிரிகள். வெற்றி பெறுவது என்பது சாத்தியமற்றது. எனவே இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவரே வெற்றிபெற வேண்டும். அது இனவாத சக்திகளின் கூட்டுடன் களமிறங்கும். மகிந்தவா? அல்லது சமாதானத்தை தொடரப் போவதாகக் கூறி சிறுபான்மைக் கட்சிகளின் துணையுடன் குதித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்காவா? என்பதை காண கார்த்திகை மாதம் 17ம் திகதி வரை தான் பொறுத்திருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளதாகக் கருதப்பட்டாலும் தென்னிலங்கை சமூகம் எதைவிரும்புகின்றது என்பதும் இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம். ஒரு வேளை பேரினவாதிகளின் இனவாதப் பிரசாரம் தென்னிலங்கை மக்களிடையே பலமான தாக்கத்தை உருவாக்கி வெற்றிக்கு வழி கோலுமானால் தென்னிலங்கைத் தலைமைத்துவங்களுடன் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தை என்று ஏமாந்து விடுவதற்குத் தயாராகவில்லை. எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் அதன் பின்னர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுப்பவர் சமாதான முயற்சிகள் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்கின்ற ஒரு சூழலில்தான் மாவீரர்தின உரை அமையப் போகிறது. அது எதனை உணர்த்தப் போகின்றது என்பதே இங்கு முக்கியமாக சிந்திக்கின்ற விடயம். தற்போது தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் தமிழீழ எழுச்சிப் பிரகடனம் மூலம் ஒரு வேண்டுகையை சர்வதேச சமூகத்திற்கு விடுத்துள்ளனர். அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்கக் கோரியுள்ளனர். சிங்கள ஏகாதிபத்தியம் மற்றும் பௌத்த மேலான்மை வாதமும் முதன்மைப் படுத்தப்பட்டு சிறுபான்மையினங்கள் அடக்கியாளப்படுகின்றனர். இலங்கையின் ஆட்சி அதிகாரம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளின் கைகளிலிருந்து சிங்களத் தலைமைகளின் கைகளுக்கு மாறி ஐம்பது வருடங்களைக் கடந்து விட்டது. அன்று தொட்டு தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு சிறிலங்கா ஆளும் தரப்பு விரும்பவில்லை. அகிம்சைவழிப் போராட்டங்கள் தோல்வியடைந்ததன் பயனாகவே தமிழ் மக்கள் தனியான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக சுதந்திர தமிழீழத்திற்காகப் போராட ஆரம்பித்தார்கள். அந்தப் போராட்டம் இன்னும் நின்றுவிடவில்லை. சமாதானப் பேச்சுக்கள் என்பது தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தினைப் பின்தள்ளும் அல்லது காலதாமதப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்றரை வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் சமாதானத்தில் ஏற்பட்ட முன்னேற்றமென்ன? விடை பூச்சியம். தமிழ் மக்கள் இரத்தத்தையும் சதையையும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். இன்னும் இந்நிலை தொடரக்கூடாது என்பதற்காக சமாதானத்தை ஏற்படுத்துமாறு விடுத்த வேண்டுகைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்ட நிலையில் வவுனியாவில் தமிழ்த் தேசிய எழுச்சிப் பிரகடனம் மூலம் தமது நிலைப்பாட்டைத் மக்கள் தெளிவுபடுத்தியிருந்தனர். இதற்கு வலுவூட்டும் வகையில் மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் தேசிய எழுச்சி மாநாடுகளும், யாழ் நகரில் பொங்குதமிழ் நிகழ்வும் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளன. பல இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பிரிந்து செல்வதே ஒரேவழி எனவும் சர்வதேச சமூகம் இதனை அங்கீகரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். திருமலை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் விரைவில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடுகள் நடைபெறவுள்ளன. ஒட்டுமொத்தத்தில் தமிழர் தாயக நிலப்பரப்பிலுள்ள தமிழினம் முழுவதும் பிரிந்து செல்வதே ஒரே வழியென சர்வதேச சமூகத்திற்கு உணர்வு ரீதியாக வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் அதனை அங்கீகரிப்பது சர்வதேச சமூகத்தின் மனிதாபிமான கடப்பாடாகும். ஆனால் அண்மைக் காலமாக சர்வதேச சமூகத்தின் பார்வை சிங்களப் பேரினவாத சக்திகளின் கருத்துக்களுக்கு உள்வாங்கப்பட்டு பக்கச்சார்பான ஒரு நடவடிக்கைகள் கையாளப்பட்டுள்ளன. அதாவது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்திருக்கும் பயணத் தடை சர்வதேச சமூகம் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. இந்நிலையில் சிங்கள தேசம், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு தாயகமெங்கும் தற்காப்புப் பயிற்சிகளை தீவிரமாக பெற்று வருகின்றனர். தமிழீழ கடற்படையின் துணைப்படையினர் பயிற்சிப் பாசறைகளை முடித்துக் கொண்டு அணி அணியாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சிறுதுள்ளி பெருவெள்ளம் போல் தமிழினத்தின் பலம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பலம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு தலைவா| என தமிழர் தாயக மக்கள் பல்வேறு வேண்டுகைகளை விடுத்து வரும் நிலையில் மாவீரர்தின உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. அரசியல் ஆய்வாளர்கள் விமர்சகர்கள் ஏன் சர்வதேச சமூகம் கார்த்திகை மாதம் நடக்கப் போகின்ற நிகழ்வுகளுக்காகக் கார்த்திருக்கின்றன. தேர்தல் முடிவும் மாவீரர்தின உரையில் தேசியத் தலைவரது அசைவுமே எதிர்காலத்தில் விதியை நிர்ணயிக்கப் போகின்றன. இன்னும் பொறுமையைக் கடைப்பிடிப்பாரா? அல்லது பொறுத்தது போதும் பொங்கி எழு தலைவா என ஆணையிட்டுக் காத்திருக்கும் மக்களின் விருப்பை நிறைவேற்றுவாரா? எனவே எதுவோ அதனைத் தீர்மானிக்கின்ற மாதமாக எதிர்வரும் கார்த்திகை மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக மிளிரப் போகிறது.
பிரவீனா
|