பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஆரையம்பதியில் துணைப்படையால் 3 முஸ்லிம்கள் சுட்டுப் படுகொலை: ஊரடங்குச் சட்டம் அமுல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 22 May 2008

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவால் 3 முஸ்லிம்கள் இன்று பிற்பகல் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனால் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. சிறிலங்கா காவல்துறையினரின் ஊடரங்குச் சட்டம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பிள்ளையான் குழுவினரின் முக்கிய உறுப்பினரும் ஆரையம்பதி பிள்ளையான் குழுப் பொறுப்பாளருமான சாந்தனும் அவரது பாதுகாவலரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த காத்தான்குடியில் துணைப்படைக் குழுவினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவின் ஆதிக்கம் நிறைந்த ஆரையம்பதியில் முஸ்லிம்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஆரையம்பதி சந்தைப் பகுதியிலும் முஸ்லிம் ஒருவரை துணைப் படைக்குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளதுடன் முஸ்லிம்களின் கடைகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
 
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆரையம்பதியில் தொலைத்தொடர்பு நிலையம் நடத்தி வந்த மன்சூர் என தெரியவந்துள்ளது. ஏனைய இருவரதும் பெயர் விபரங்கள் கிடைக்கவில்லை.

துணைப்படைக் குழுவின் தாக்குதலில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வாள் வெட்டுக்காயங்களுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கும் இலக்காகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதி செய்ய முடியவில்லை.

இதேவேளை மட்டக்களப்பு மருத்துவமனைக்கு இன்று 5 சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 2 சடலங்கள் பிள்ளையான் குழு உறுப்பினர்களினது என்றும் ஏனைய 3 சடலங்களும் பொதுமக்களினது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவங்களை அடுத்து காத்தான்குடியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

ஊடரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் துணைப்படை பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் வீதிகளில் நடமாடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் ஊடாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் வீதிகளில் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊடரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் காத்தான்குடி உள்ளிட்ட மட்டக்களப்பு  நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

வீதிகளில் கலகத் தடுப்பு காவல்துறையினரும் படையினரும் கவச வாகனங்கள் சகிதம் குவிக்கப்பட்டுள்ளனர். தனியாரின் போக்குவரத்து வாகனங்கள் படையினரின் பலத்த பாதுகாப்புடன் சென்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடிக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் படையெடுப்பு

காத்தான்குடியில் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரசின் சில முக்கிய பிரமுகர்களும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள இணைந்துள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்களுமே காத்தான்குடிக்குச் சென்றுள்ளனர்.

நாளை முஸ்லிம்களின் தொழுகை நாள் ஆதலால் தொழுகை முடிந்த பின்னர் பிள்ளையான் குழுவுக்கு எதிராக அங்குள்ள முஸ்லிம்கள் செயற்படக்கூடும் என்ற அச்சம் தற்போது அரச உயர்மட்டத்தில் எழுந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

சமாதானக்குழு ஏற்படுத்த முயற்சி

இதேவேளை பிள்ளையான் குழுவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலை தணிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு - திருகோணமலை மறை மாவட்டங்களுக்கான ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் தற்போது முக்கிய சந்திப்பு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள போதும் பிள்ளையான் குழுவினர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..