|
இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ராவய செய்தித் தாள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்திற்காகச் சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகையைப் போன்று பல மடங்கு நிதி பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
காணி உரிமையாளர்களுக்கு வழங்கவென சுமார் 3000 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் 600 மில்லியன் ரூபாவே நட்டஈடாக வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் ராவய பத்திரிகை சுட்டிக்காட்டுகின்றது.
ஹம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தினால் பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களுக்குச் சுமார் 575 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாகப் பிரதேச செயலாளர் கணேச அமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை ஹம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டத்தின் பிரதான பொறியியலாளர் அலுவலகமும் சுமார் 600 மில்லியன் ரூபா மட்டுமே நட்டஈட்டுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
50 காணிகளைத் தவிர்ந்த ஏனையோருக்கு ஏற்கனவே நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதேசச் செயலாளர் தெரிவிக்கின்றார்.
375 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டத்தின் பிரதான பொறியியலாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலைமையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தினால் பாதிப்படையும் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்க 3007 மில்லியன் ரூபா காசோலை வரையப்பட்டுள்ளதாக ராவய சுட்டிக்காட்டுகின்றது.
நெருடல் இணையம்
|