|
எங்களிடம் எந்தவொரு ஒட்டுப் படையுமில்லை. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே அவர்களைக் கலைத்து விட்டோம் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி சாந்தகொட்டகொட தெரிவித்திருக்கும் கருத்து அனைத்துத் தமிழ் மக்களையும் முட்டாளாக்கும் செயல். தமிழ் மக்களை மட்டுமல்ல சர்வதேச சமூகத்தைக்கூட கொட்டகொடவின் கூற்று முட்டாளாக்கியிருக்கிறது.
சமாதான முயற்சிகள் படுகுழியில் வீழ்த்தப்பட்டு இன்று இரு தரப்புக்குமிடையில் பலமான விரிசல் நிலை தோன்றியுள்ள நிலையில் மீளவும் சமாதானத்துக்கான சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டுமானால், போர் நிறுத்த உடன்பாட்டினை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான அணுகுமுறைகளைப் படைத்தரப்பும், சிறிலங்கா அரசும் சிறந்த முறையில் கையாளாதவிடத்து தமிழ் மக்கள் போர் நிறுத்த வரையறைக்குள் தொடர்ச்சியாக உரிமைகளை இழந்து முடங்கிக் கிடக்கமாட்டார்கள். அவ்வாறான அவசியமும் ஏற்படாது. ஏனெனில் தமிழின விடுதலைப் போராட்டத்தின் இலக்கு தமிழ் மக்களுக்கான சுதந்திர தமிழீழ தாயகம் நிறுவப்படுவதேயாகும். இதனை இலக்காகக் கொண்டே பதினேழாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் இந்த விடுதலைக்கு விதைக்கப்பட்டுள்ளார்கள். இந்த இறுதி இலக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு துளியளவும் பிசகவில்லை. விடுதலைப் புலிகள் சமாதானத்திற்கான சூழலை ஏற்படுத்த விரும்பி சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவினைத் திறந்து விட்டிருக்கின்றார்களென்றால் அதனைப் புலிகளின் பலவீனமாக சிங்களத் தரப்பு கருதுமாகவிருந்தால் அது அவர்களின் பலவீனமென்றே கருதமுடியும். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக போரியல் ரீதியாக வலிமை பெற்று இன்று தனியரசுக்கான 99 வீத கட்டுமானங்களும் நிறுவப்பட்டு அது இயங்கிக் கொண்டிருக்கும் போது இனவாதக் கோசங்களுக்கு ஆட்பட்டு படைத்தரப்பு மீண்டும் ஒரு போரை விரும்புமானால் அவர்கள் தங்களைப் பாழ்கிணற்றுக்குள் இறங்குவதற்குச் சமமானதாகும். இன்று தெற்கில் வீராவேசம் பேசும் வீரவன்ச, சோமவன்ச, ரில்வின் சில்வா, ஏன் மகிந்த ராஜபக்ஷ, காவி உடைதரித்த பிக்குகள் எல்லாம் களமுனைகளுக்கு வந்தவர்களில்லை. ஆனையிறவுத் தளத்திலோ முல்லைத்தீவு ஓயாத அலையிலோ அல்லது ஜெயசிக்குறு சமரிலோ இவர்கள் நின்றிருந்தால் விடுதலைப் புலிகளின் வீரம், விவேகம், போரியல் ஆற்றல் புலப்பட்டிருக்கும். கொழும்பிலும், கண்டியிலும், அனுராதபுரத்திலும் பேரினவாதக் கருத்துக்களைத் தென்னிலங்கை மக்களிடையே விதைப்பதும், படைத்தரப்;பை போருக்கான சூழலுக்குத் தள்ளி விடுவதும் இவர்களது திட்டமாகவுள்ளது. இத்திட்டங்களில் சிறிலங்காப் படைத்தளபதி சாந்த கொட்டகொட பூரணமான முனைப்புடன் செயற்படுகிறார் என்பதையே அவரது கருத்து தெளிவுபடுத்துகிறது. ஏனெனில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நாட்களிலிருந்து இற்றைவரை சமாதானச் சூழல் எட்டப்படாது சீர்குலைந்துள்ளது. இந்தச் சீர்குலைவுக்கு சிறிலங்காப் படைத்தரப்புடன் இயங்கும் ஒட்டுப்படைகள் தான் பிரதான காரணம். படைப்புலனாய்வுப் பிரிவு கருணா குழு என்ற போர்வையில் சில தேசவிரோதிகளை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தாக்குதலை நடாத்தி வருகின்றனர். இவ்வாறு ஒரு ஆயுதக் குழு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற மாவட்டமான பொலநறுவை மாவட்டத்தில் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கி வருவதற்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. இவர்கள் தாக்குதலை நடத்தி விட்டு படைமுகாம்களுக்குள் போய்; புகுந்து கொள்வதும் ஆதாரபூர் வமாக நிரூபிக்கப்பட்ட விடயம். அமெரிக்காகூட இவ்வாறான ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. இது தொடர்பாக அவ்வாறானதொரு குழு எங்களிடமில்லை என்றே படைத்தரப்பும், அரசாங்கமும் கூறி வந்த நிலையில், தற்போது பொறுப்பு வாய்ந்த படைத்தளபதியும் இக்கூற்றை நிராகரித்து முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போன்ற கருத்தைத் தெரிவித்திருப்பதன் மூலம், தமிழ் மக்களை முட்டாளாக்கி விடலாம் என அவர் நினைத்தால் அது தப்பு. ஏனெனில் அவரே அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஒட்டுப்படை விவகாரம் தீர்வு காணப்படாவிடின் விளைவுகள் விபரீதத்தையே ஏற்படுத்தும்.
eelanatham.batti
|