|
மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் பெறுவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேசியப் பணிக்குழு சங்கமம் நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரை:
தேசியப் பணிக்குழுவின் செயற்பாடுகள் தமிழீழத் தேசியத் தலைவருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
இந்தியப் படைக்காலத்தில் இப்பகுதி மக்கள் பெரும் பங்களிப்பை அச்சுறுத்தலுக்கு மத்தியில் உதவினர். இதற்காக இந்தியப்படையின் சிறைகளில் மக்கள் வாடியிருக்கின்றனர். அந்தளவுக்கு மக்கள் துணிவுடன் செயற்பட்டனர்.
போராளிகளுக்கு உதவுவது என்பதை அவர்கள் நெருக்கடிகளுக்கும் ஆபத்துக்களுக்கும் மத்தியில் செய்துள்ளனர். போராட்டத்தின் பால் மக்கள் கொண்டுள்ள பற்றின் வெளிப்பாடு அது.
எதிரியின் வன்னி வல்வளைப்பு நடவடிக்கையின் போது குழுக்களை அமைத்து போராட்டத்துக்கு மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கிய பெரிய வரலாறு நடந்தது. பெரிய மக்கள் புரட்சி அன்று நடந்தது.
ஜெயசிக்குறு காலத்தில் எல்லோரினது கீழ்நிலை மதிப்பீடுகளை தகர்த்து பெருவெற்றியை நாம் பெற சிங்களப்படைகளை ஓருசில நாட்களுக்குள் ஓட, ஒட விரட்டியடிக்க காரணமாக அமைந்தது அன்றைய மக்கள் எழுச்சியும் பங்களிப்பும்தான்.
களங்களில் சகல ஒத்துழைப்புக்களையும் மக்கள்தான் செய்தார்கள்.
மீட்கப்பட்ட இடங்களை பாதுகாத்தவர்கள் எல்லைப்படையாக திரண்ட மக்கள். இது மக்களால் செய்யப்பட்ட பெரும் சாதனை. அதுபோன்று மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் பெறுவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும்.
எதிரியின் பொருண்மியத் தடைகளுக்கு மத்தியில் பெரும் சிக்கலுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வையும் கவனித்துக்கொண்டு விடுதலையின் வெற்றிக்கு உதவியவர்கள்.
வீரத்துக்கு இலக்கணம் வகுத்தவர்கள் தமிழர்கள் நாம் என்பதனை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அன்று சங்கிலியன் - பண்டாரவன்னியன் போன்றோர் ஐரோப்பியர்களுக்கு எதிராக போராடியிருக்கின்றனர்.
எமது பண்டைய வரலாற்றில் வீட்டுக்கு ஒருவர் நாட்டைக்காக்க அனுப்புவது மரபாக இருந்தது. சங்க காலத்தில் அது நடந்தது. அன்று தாய் மகனை வீரப்பொட்டு இட்டு போருக்கு அனுப்பினாள். இன்று தாய்மாரே போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்ற வரலாறு நிகழ்கின்றது.
தேசியப்பணிக்குழுவினர் அரசியலை அறிந்திருக்க வேண்டும்.
சிங்கள அரசு வரலாற்றில் மிக மோசமாக பலவீனப்பட்டுள்ளது. மடுவை ஆக்கிரமிக்க மட்டும் அவர்களின் படைகளுக்கு ஓரு ஆண்டு சென்றது. பெரும் இழப்புக்களை களங்களில் சந்தித்துக்கொண்டிருக்கின்றது.
ஊடகங்கள் உண்மைகளை வெளியிடுவதில் தடைகள் போடப்பட்டுள்ளன. அதனால் உண்மைகளை அவை வெளியிட முடிவதில்லை.
தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு எத்தடைகளைப் போட்டாலும் நமது மக்கள் அவை எல்லாவற்றையும் தகர்த்து எறியும் சக்தியைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்
சிங்களப்படைகளுக்கு இன்று எங்கும் அடிவிழுந்து கொண்டிருக்கின்றது. மறுபுறம் அனைத்துலகத்தின் மத்தியில் பெரும் எதிர்ப்புக்களையும் அழுத்தங்களையும் சிறிலங்கா சந்தித்துக்கொண்டிருக்கின்றது.
15 ஆயிரம் படையினரைக்கொண்ட ஆனையிறவை நாம் வரலாற்றில் வென்றுள்ளோம். அதனை மக்களின் பிள்ளைகள்தான் சாதித்துள்ளனர். இன்று அதுபோன்ற பெரும் வரலாற்று மாற்றத்துக்கான காலம் வந்துள்ளது.
இந்தச்சூழலில் மக்களின் பணியை விடுதலைப் போராட்டம் எதிர்பார்த்து நிற்கின்றது என்றார் பா. நடேசன்.
நெருடல் இணையம்
|