|
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நோர்வே அனுசரணையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்தான் என்று புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு இன்று புதன்கிழமை (04.06.08)அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:
நோர்வேயின் அனுசரணையின்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் எதுவித அமைதிப் பேச்சுக்களும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை.
நோர்வேயின் சமாதான செயற்பாட்டாளர்களான எரிக் சொல்க்ஹெய்ம் மற்றும் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஆகியோருடனும் நாம் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்துடனான எதிர்காலப் பேச்சுக்கள் தொடர்பில் குறித்து எம்முடன் நேரில் விவாதிப்பதற்காக நோர்வேத் தரப்பினர் கிளிநொச்சிக்கு செல்வதற்கான சிறிலங்காவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள்.
சிறிலங்கா அரசாங்கத்துடனான அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னதாக நாம் நோர்வே அனுசரணையாளர்களுடன் பல விடயங்களை விவாதிக்க வேண்டியுள்ளது.
நோர்வேத் தரப்பினரைச் சந்திக்க நாம் விரும்புகிறோம். இருந்தபோதும் அவர்கள் கிளிநொச்சிக்குள் நுழைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை. நோர்வேத் தரப்பினர் கிளிநொச்சி வருவார்களேயானால் அவர்களுக்குரிய பாதுகாப்பை நாம் அளிப்போம்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை பார்வையிட வருகை தந்தால் அங்கு எதுவித பாதுகாப்பு பிரச்சினைகளும் இல்லை. நாளாந்தம் ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் எமது பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
நான் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டதைப் போன்ற பொய்ச் செய்திதான் இதுவும்.
எமது அமைப்புக்குள் எதுவித பிரச்சனையும் இல்லை. எப்போதும் போல் நாம் வழமையாகவே இயங்கி வருகின்றோம் என்றார் சீவரத்தினம் புலித்தேவன்.
நெருடல் இணையம்
|