|
வெள்ளவத்தை தொடரூந்து மார்க்கத்தில் குண்டு வெடிப்பு - 18 பேர் காயம் |
|
|
|
Tuesday, 03 June 2008 |
|
வெள்ளவத்தைக்கும் தெஹிவளைக்கும் இடையில் உள்ள தொடரூந்து மார்க்கத்தில் இன்று காலை 7.05 அளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில 18 பேர் காயமடைந்து களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயப்பட்டவர்களில் 15 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாகக் களுபோவில வைத்தியசாலைப் பணிப்பாளர் வில்பர்ட் குமாரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அசேல மாவத்தைக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் தொடரூந்து மார்க்கத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
பாணந்துறையை நோக்கிப் பயணித்த தொடரூந்தை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் சம்பவத்தின் போது தொடரூந்து குறித்த இடத்திற்கு வரும் முன்னரே குண்டு வெடித்துள்ளது. இதன் காரணமாக பாரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த இடத்தில் ரயில்பாதை பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோட்டையில் இருந்து கரையோரத் தொடரூந்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குண்டைப் பொருத்தியவரைச் சிலர் கண்டபோதும் அவர் தப்பிச் சென்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|