|
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பயணிகள் பேருந்தினை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 7:35 மணியளில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கைது செய்யப்படுவதுடன், அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது.
கல்கிசையில் இருந்து கொட்டாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த 255 இலக்க வழிப்பாதையைக் கொண்ட பேருந்தினை இலக்குவைத்து, மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள சைல பிம்பாரமைய விகாரைக்கு முன்பாக இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னர் பேருந்திற்குள் இருந்த குண்டே வெடித்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் தாக்குதல் இடம்பெற்ற வீதியில் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டே இக்கிளைமோர் தொலைவில் இருந்து இயக்கப்படும் தன்னியக்க கருவியைப் பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் 12 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னர் 21 பேர் உயிரிழந்தனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த போதும் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 என்றே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்கள் களுபோவில மற்றும் லுணாவ மருத்துவமனைகளில் முதலில் அனுமதிக்கப்பட்டனர். களுபோவில மருத்துவமனையில் 48 பேரும் லுணாவ மருத்துவமனையில் 13 பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஒருவரும் முதலில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் லுணாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் களுபோவில மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று களுபோவில மருத்துவமனை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. அவர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆபத்தான கட்டத்தில் இருக்கும் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இக்கிளைமோர்த் தாக்குதலை அடுத்து கல்கிசைக்கும் கொட்டாவிற்கும் இடைப்பட்ட வீதிப் போக்குவரத்தினை படைத்தரப்பினர் மூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உடனடியாக காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இன்று காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொறட்டுவ, கட்டுப்பெத்த, டென்டெனியாவத்த மற்றும் தெகிவளையின் சில பகுதிகளிலேயே இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு மேலதிக படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு தமிழர்களின் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் கடுமையான தேடுதல்கள் நடத்தப்படுவதுடன் தமிழர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
குறிப்பாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடம் கடுமையான விசாரணைகள் நடைபெறுவதுடன் இதுவரை மாணவர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

விசாரணைகளின் போது படையினரும் காவல்துறையினரும் கடுமையாக நடந்து கொள்வதாகத் தெரிவித்த அப்பகுதியில் உள்ள மக்கள், படையினர் பலரைத் தாக்கியுள்ளனர் என்றும் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் அப்பகுதிக்குள் நடப்பது குறித்த தகவல்கள் உடனடியாக வெளியே வரவில்லை.
கிளைமோர்த் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் நேற்று இரவு நாய்கள் வழமைக்கு மாறாக குரைத்ததாகவும் இன்று காலை சில நாய்களுக்கு நஞ்சு ஊட்டப்பட்டிருந்தது என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். நஞ்சு ஊட்டப்பட்டதால் அப்பகுதியில் ஏழு நாய்கள் உயிரிழந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மேற்படி கிளைமோர்த் தாக்குதலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் தெகிவளையை அண்மித்த பகுதியில் வெடிக்கும் நிலையில் இருந்த சக்திவாய்ந்த கிளைமோர்க் குண்டு ஒன்றை குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர் மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அப்பகுதியிலும் தேடுதல் நடைபெற்று வருகின்றது. தேடுதலின் போது படையினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|